தமிழ்நாடு அரசியல்: பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் - ஓபிஎஸ் திட்டவட்டம்

பட மூலாதாரம், Getty Images
"பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் வாக்குகளை இழந்தோம். தேர்தலில் தோல்வியை சந்திதோம்," என தமிழக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசிய விவகாரம் அந்த இரு கட்சிகளின் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும். அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதேபோல, தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைவர்களில் ஒருவருமான டி. ஜெயகுமார், சி.வி. சண்முகம் பேச்சு தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
"கூட்டணி குறித்து சி.வி. சண்முகம் கட்சியினர் மத்தியில்தான் பேசினார். அது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சியினர் மத்தியில் அவர் பல கருத்துகளைச் சொல்லியிருக்கலாம். தனிப்பட்ட முறையில் கட்சியினரிடம் பேசியது குறித்து கருத்து சொல்ல வேண்டியதில்லை. ஆனால், கே.டி. ராகவன் இதற்குப் பதிலளித்திருக்கிறார். அது தேவையில்லை. பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுவதுதான் அதிகாரபூர்வமான கருத்து.
சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி இருந்தது. ஆனால், அது தொடர்கிறதா என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். நானோ, முன்னாள் சட்ட அமைச்சரோ முடிவு செய்ய முடியாது.
உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி இருக்கிறதா என்பதை கட்சித் தலைமை அறிவிக்கும். அது தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் தெரியும். யாரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. எங்கள் கட்சித் தலைமைதான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும்," என ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வானூர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் கூட்டத்தில் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக அதிமுக இழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
என்ன பேசினார் சண்முகம்?

பட மூலாதாரம், C.V.Shanmugam
"விழுப்புரம் தொகுதியில் 14 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக வெற்றி பெற்றது. இந்தப் பகுதியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு சுமார் 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. அதில் 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்தில் இருக்கிறது. விழுப்புரம் நகரத்தில் மட்டும் அதிமுகவுக்கு 16 ஆயிரம் வாக்குகள் குறைந்திருக்கிறது. அதிமுக மீது அவர்களுக்கு கோபம் இல்லை, அதிமுக ஆட்சி மீதும் அவர்களுக்கு கோபம் இல்லை. 10 ஆண்டு காலமாக நல்ல திட்டங்களை கொண்டு சென்றதால் மக்களிடம் நல்ல பெயர் இருந்தது. ஆனால் கூட்டணிக் கணக்கு சரியில்லை. சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளிட்ட சில காரணங்களால் அதிமுக தோல்வியை சந்தித்தது" என்று அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டணி இல்லையெனில் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. தவறி அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தாலும் கூட்டணி ஆட்சிதான் வைத்திருக்க முடியும். "ஆகவே இதில் நம்முடைய குறையும் இருக்கிறது. ஏதோ அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள், மக்கள் அவர்களுக்கு அமோகமாக ஆதரவு தந்துவிட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்," என்று கட்சி நிர்வாகிகளிடையே பேசினார் சி.வி.சண்முகம்.
பின்னணியும், தாக்கமும்

பட மூலாதாரம், C.V.Shanmugam
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ.க. நான்கு தொகுதிகளைக் கைப்பற்றியது.
முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் இந்தத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் இரா. லட்சுமணன் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார்.
அதிமுக தோல்வியடைந்தபிறகு பாஜகவுடனான உறவில் எந்த சங்கடமும் இருக்கவில்லை. இப்போது சி.வி.சண்முகம் கருத்து இந்த நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருமா? இதற்கு பாஜக எப்படி எதிர்வினையாற்றும், அதிமுக தலைமையின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டியிருக்கும்.

பட மூலாதாரம், @sivaphrashanth
அதே நேரம், தமிழ்நாட்டில் நிலவும் பாஜக எதிர்ப்பை, அதிமுக சந்தித்த தோல்வியை சிறுபான்மையினர் எதிர்ப்பு என்பதாக மட்டும் விவரிக்கும் முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு இப்போதைய ஆளும் கட்சியான திமுகவிடம் இருந்து, திமுக கூட்டணிக் கட்சிகளில் இருந்து நிச்சயமாக கூர்மையான எதிர்வினை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சி.வி. சண்முகத்தின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள மாநில பாஜகவின் கே.டி. ராகவன், "உங்களுக்கு உள்ள எண்ணம் போலவே எங்களுக்கும் உள்ளது. நாங்களும் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாலேயே தோற்றதாக எங்கள் கட்சியினருக்கும் எண்ணம் உள்ளது," என்று கூறியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது அவரது தலைமையில் அமைந்த அரசில் அமைச்சராக இருந்த சண்முகம், அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அரசும் கட்சியும் வழிநடத்தப்பட்டபோதும் அமைச்சராக தொடர்ந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில மாதங்கள் சசிகலா ஆதரவாளராக கருத்துகளை வெளியிட்டு வந்த சி.வி. சண்முகம், பின்னர் சசிகலாவின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அரசுக்கு தலைமை தாங்கிய எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்தார். அதன் பிறகு சசிகலாவுக்கு எதிராக கடும் சொற்களை பயன்படுத்தி அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி அமைந்தபோது அந்த முயற்சியை ஆரம்பநிலையிலேயே அவர் கடுமையாக எதிர்த்தார். பிறகு அதிமுக மேலிட தலைவர்களின் தலையீட்டின்பேரில் அவர் அமைதி காத்தார். இப்போது தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது பற்றியும் அதன் விளைவாகவே அதிமுக தமிழ்நாட்டில் தோல்வி அடைந்ததாகவும் சி.வி. சண்முகம் பேசி வருகிறார்.
பிற செய்திகள்:
- இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் படைகள் - எல்ஓசி போல மாறுகிறதா எல்ஏசி?
- 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வரதட்சணை: இந்திய திருமணங்கள் பற்றிய ஆய்வு
- யூட்யூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - இனி என்ன நடக்கும்?
- யார் இந்த தாலிபன்கள்? இவர்கள் குறித்து அமெரிக்க ராணுவத்தின் சமீபத்தைய மதிப்பீடு என்ன?
- ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பைக் கவனிக்கும் தமிழக மாணவர்கள்
- கோவையில் 30 பேர் பார்வையைப் பறித்த கருப்பு பூஞ்சை நோய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












