வரதட்சணை முறை இந்தியாவில் மாறாமல் இருக்கிறது - உலக வங்கி ஆய்வு

மணப்பெண் ஒருவரின் கை.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இந்தியாவில் 90 சதவீத இணையர்கள் திருமணத்துக்குப் பிறகு கணவர் வீட்டிலேயே வசிக்கின்றனர்.
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் கடந்த சில பத்தாண்டுகளாக வரதட்சணை முறை மாறாமல் அப்படியே இருப்பதாக உலக வங்கி நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

1960 முதல் 2008 வரையில் நடந்த 40 ஆயிரம் திருமணங்களை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

1961 முதல் நடந்த 95 சதவீத திருமணங்களில் வரதட்சணை வழங்கப்பட்டுள்ளது என்றும், சட்டவிரோத திருமணங்கள்கூட இதில் அடக்கம் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பரவலாக சமூகத் தீங்கு என்று விமர்சிக்கப்படும் இந்த நடைமுறை, பெண்களை குடும்ப வன்முறைக்கும், சில நேரங்களில் மரணத்துக்கும் இலக்காக்குகிறது.

வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தெற்காசியாவில் பல நூற்றாண்டுகாலமாக நடைமுறையில் உள்ளது.

எப்படி நடந்தது இந்த ஆய்வு?

இந்திய மக்கள் தொகையில் 96 சதவீதத்தைக் கொண்டிருக்கிற 17 இந்திய மாநிலங்களில் இருந்து திரட்டப்பட்ட வரதட்சணை குறித்த தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இன்னும் ஊரகப் பகுதிகளில் வாழ்வதால், இந்த ஆய்வு இந்தியாவின் ஊரகப் பகுதியில் கவனம் செலுத்தி செய்யப்பட்டுள்ளது.

திருமணத்தின்போது தரப்பட்ட, பெறப்பட்ட பணம், பொருள்கள் உள்ளிட்ட வரதட்சணையின் மதிப்பு குறித்த தகவல்களை பொருளியல் வல்லுநர்கள் எஸ்.அனுக்ரிதி, நிஷித் பிரகாஷ், சுங்கோ கௌன் ஆகியோர் இந்த ஆய்வுக்காக பயன்படுத்திக் கொண்டனர்.

Presentational grey line

மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த சீர்வரிசைக்கும், மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கு கொடுத்த சீர்வரிசைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஆய்வாளர்கள் 'நிகர வரதட்சணை' என்று கணக்கிட்டனர்.

மிகக் குறைவான திருமணங்களில்தான் மணமகள் வீட்டார் கொடுத்ததைவிட மணமகன் வீட்டார் கொடுத்த சீர்வரிசையின் மதிப்பு அதிகமாக இருந்தது.

காலந்தோறும் நிகர வரதட்சணை நிலையாக இருப்பதையும், 1975க்கு முன்பும், 2000-க்குப் பிறகும் அந்த நிகர வரதட்சணையில் கொஞ்சம் வீக்கம் இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

யார் தரும் சீர்வரிசை அதிகம்?

மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கு சராசரியாக உண்மை மதிப்பில் ரூ.5 ஆயிரம் பெறுமதியுள்ள சீர்வரிசை தந்துள்ளதையும், அதே நேரம் மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்கு உண்மை மதிப்பில் சராசரியாக ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிசை தந்துள்ளதையும் ஆய்வாளர்கள் கணக்கிட்டு கண்டறிந்தனர். இதனால், சராசரி நிகர வரதட்சணை ரூ.27 ஆயிரம் என்று ஆகிறது.

குடும்ப வருமானம் மற்றும் சேமிப்பில் கணிசமான பகுதியை வரதட்சணை எடுத்துக்கொள்கிறது. ஊரகப் பகுதியில் 2007ல் சராசரி நிகர வரதட்சணை என்பது குடும்பத்தின் ஆண்டு வருமானத்தில் 14 சதவீதத்தை செலவழிப்பதாக இருந்தது.

"வருமானத்தில் எத்தனை சதவீதம் வரதட்சணையாக செலவிடப்படுகிறது என்ற கணக்கு காலப்போக்கில் குறைந்துவிட்டது. இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் ஆண்டு சராசரி வருமானம் உயர்ந்துவிட்டதே இதற்குக் காரணம்," என்கிறார் உலக வங்கி ஆய்வுக் குழுவை சேர்ந்த பொருளியல் வல்லுநர் டாக்டர் அனுக்ரிதி.

"ஆனால், குடும்ப வருமானத்தில் எவ்வளவு பெரிய பங்கினை வரதட்சனை எடுத்துக்கொள்கிறது என்பதைக் காட்டுவதற்கான சராசரி கணக்கீடுதான் இது. குடும்ப வருமானம், செலவு தொடர்புடைய தரவுகள் நமக்குத் தேவை. ஆனால், துரதிருஷ்டவசமாக அது போன்ற தரவுகள் நமக்குக் கிடைப்பதில்லை," என்றார் அவர்

Presentational grey line
மணப்பெண்

பட மூலாதாரம், Hindustan Times

படக்குறிப்பு, குடும்பங்களின் சேமிப்பிலும், வருமானத்திலும் கணிசமான அளவை எடுத்துக்கொள்ளும் வரதட்சணை.

இந்தியாவில் திருமணங்கள்

  • கிட்டத்தட்ட எல்லா திருமணங்களும் அகமண முறையில் நடக்கின்றன.
  • 1 சதவீதத்துக்கும் குறைவான திருமணங்களே மணமுறிவில் முடிகின்றன.
  • மணகனை, மனமகளை முடிவு செய்வதில் பெற்றோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 1960 முதல் 2005 வரையிலான கணக்கெடுப்பில், 90 சதவீத திருமணங்களில் வரன்களை பெற்றோரே முடிவு செய்தனர்.
  • திருமணத்துக்குப் பிறகு 90 சதவீத இணையர் கணவர் வீட்டிலேயே வசிக்கின்றனர்.
  • 85 சதவீதத்துக்கு மேற்பட்ட திருமணங்களில் பெண்கள் தங்கள் கிராமத்துக்கு வெளியே இருக்கிற ஒருவரை மணந்துள்ளனர்.
  • 78.3% சதவீதத் திருமணங்கள் ஒரு மாவட்டத்துக்குள்ளேயே கொண்டு, கொடுத்து நடந்துள்ளன.

ஆதாரம்:

திருமணச் சந்தையும், இந்தியாவில் அதிகரிக்கும் வரதட்சணையும் - கௌரவ் சிப்லுங்கர், ஜெஃப்ரி வீவர்.

Presentational grey line

"2008க்குப் பிறகு இந்தியாவில் ஏராளமான விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், திருமணச் சந்தையிலோ, சட்டத்திலோ, ஆண்களையும், பெண்களையும் கொண்ட மனித முதலீட்டிலோ, பெண்களின் உழைப்புச் சந்தை விளைவுகளிலோ கட்டமைப்பு சார்ந்த திடீர் மாற்றங்கள் ஏதும் நடக்கவில்லை. இதனால் வரதட்சணை பரிமாற்றத்தின் போக்கோ, வடிவமோ குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏதும் நிகழவில்லை," என்கிறது அந்த ஆய்வு.

காணொளிக் குறிப்பு, மது, வரதட்சணை இல்லாத கிராமம்

இந்தியாவில் உள்ள நான்கு மதங்களிலும் இந்த வரதட்சணை பழக்கம் உள்ளதை இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிறித்துவ, சீக்கிய மதங்களில் வரதட்சணை பரிமாற்றம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. இதனால், அவர்கள் மதங்களில் பரிமாறப்படும் வரதட்சணையின் சராசரி அளவு இந்து, முஸ்லிம் மதங்களில் இருப்பதைவிட அதிகமாக இருக்கிறது.

மாநிலங்களுக்கு இடையில் வரதட்சணை அளவில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்திருப்பது ஒரு சுவாரசியம்.

1970களில் இருந்து கேரளாவில் "தொடர்ந்து, தெளிவாக வரதட்சணை அதிகரித்துவருவது" தெரியவந்துள்ளது. ஹரியாணா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் சராசரி வரதட்சணை அதிகரித்துள்ளது. ஒடிஷா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சராசரி வரதட்சணை குறைந்துள்ளது.

பரிசுப் பொதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரதட்சணை பணமாகவும், பொருளாகவும் தரப்படுகிறது.

"இந்த வேறுபாடுகள் ஏன் நிகழ்கின்றன என்பதற்கு உறுதியான பதில்கள் இல்லை. எதிர்காலத்தில் இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் காண முயல்வோம்," என்கிறார் அனுக்ரிதி.

கால ஓட்டத்தில் வரதட்சணை முறை எப்படி உருவானது என்பது குறித்து கௌரவ் சிப்லுங்கர், ஜெஃப்ரி வீவர் ஆகியோர் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவு கடந்த ஜனவரியில் வெளியானது. கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் நடந்த 74 ஆயிரம் திருமணங்கள் குறித்த தரவுகளைப் பயன்படுத்தி அவர்கள் இருவரும் இந்த ஆய்வை நடத்தினர்.

இந்தியாவில் வரதட்சணை தந்து பெற்றுக்கொள்கிற திருமணங்களின் எண்ணிக்கை 1930க்கும் 1975க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு மடங்கானது; இதே காலகட்டத்தில் தந்து பெற்றுக்கொள்கிற வரதட்சணையின் சராசரி உண்மை மதிப்பு மும்மடங்கானது. ஆனால், 1975க்குப் பிறகு நடந்த திருமணங்களில் சராசரி வரதட்சணையின் அளவு குறையத் தொடங்கியது.

1950 - 1999 இடையிலான காலகட்டத்தில் தரப்பட்ட/ பெறப்பட்ட வரதட்சணையின் மொத்த மதிப்பு தோராயமாக 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்று இந்த ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :