மணமேடையில் துணிச்சலைக் காட்டிய புதுமைப் பெண்கள்
மணப்பெண் என்றாலே, மனக்கண் முன் தோன்றுவது நாணத்தால் தலைகுனிந்து நிற்கும் அலங்கார மங்கை.

பட மூலாதாரம், Getty Images
தற்கால பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாவும், பொருளாதார, சமூக சுதந்திரம் பெற்று, தைரியசாலிகளாகி விட்டாலும் கூட, திருமணம் என்று வரும்போது சில விஷயங்கள் அப்படியே தொடர்கிறது. ஆனால், மணப்பெண் குறித்த நமது மனக்கணிப்புகள், இந்தக் கட்டுரையை படித்தால் ஓரளவு மாறலாம். மணமேடையில் துணிச்சல் காட்டிய ஆறு மணமகள்களை பற்றி பார்க்கலாம்.
'ரிவால்வர் ராணி'யாக மாறிய மணமகள்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்புரில் துப்பாக்கி முனையில் மணமகனை கடத்தினார் 'ரிவால்வர் ராணி'. ஹமீர்புர் மாவட்டத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மெளதாஹா நகரம் பத்மநாபன் பள்ளியில் திருமணச் சடங்குகள் நடந்துக் கொண்டிருந்தன.
உற்றார்-உறவினர்கள் குழுமியிருந்த மண்டபத்தில் ஒரு எஸ்.யு.வி வாகனம் வந்து நின்றது. வண்டியில் இருந்து புயல் போன்று ஒரு பெண் இறங்கினார், அவருடன் இரண்டு ஆண்களும் இருந்தனர்.
மாப்பிள்ளையின் நெற்றியில் துப்பாக்கியை வைத்த மிரட்டிய பெண், தன்னுடன் வருமாறு கட்டளையிட்டார்; மணமகனுடன் வெளியேறினார்.
பிறகு நடந்த விசாரணையில், அந்த பெண் தனது காதலி என்றும், தனது விருப்பத்துடனேயே வெளியேறியதாகவும் மணமகன் கூறிவிட்டதால், ரிவால்வர் ராணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாமல் காவல்துறை இருவரையும் வழியனுப்பிவைத்தது.
திருமணத்தை நிறுத்த கதாநாயகர்கள் மணப்பெண்ணை கடத்திய காலம் மலையேறி, கதாநாயகிகள் மணமகனை கடத்தும் காலம் வந்துவிட்டது!

பட மூலாதாரம், SHAHID AHMED KHAN
மணமகள் ஊர்வலமாக மாறிய மாப்பிள்ளை ஊர்வலம்
ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்டத்தில் ஜியா ஷர்மா என்னும் 25 வயது மணப்பெண், குதிரையில் அமர்ந்து திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக செல்ல முடிவெடுத்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், பாலின விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜியாவும், அவரது கணவர் லோகேஷ் ஷர்மாவும், வழக்கமான திருமண நடைமுறைகளில் இருந்து மாறுபட்டு திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்திருந்தனர்.
பேஹ்ரோரில் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்திவரும் ஜியாவின் அத்தையே 'மணமகள் ஊர்வலத்திற்கான' யோசனையைச் சொன்னார். இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக பெண்கள் முன்னேற்றத்திற்காக பணியாற்றி வருபவர் என்பது கூடுதல் தகவல்.
மாப்பிள்ளைத் தோழர்கள் மீது புகார் செய்தால்?
பிஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டம் மஞ்ஜியாவோ கிராமத்தில் மாலை மாற்றிய பிறகு, மணப்பெண் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்தார்.
மாப்பிள்ளைத் தோழர்கள், திருமணத்தில் மோசமாக நடந்துக் கொண்டதை பார்த்த மணப்பெண் இந்த முடிவை எடுத்தார்.
மாப்பிள்ளைத் தோழர்கள், ஒருவர் மீது ஒருவர் உணவை வீசிக் கொண்டிருந்தனர். அதோடு, விருந்தினர்களிடம் மோசமாக நடந்து கொண்டதில், திருமணத்திற்கு வந்தவர்களுக்கு காயமும் ஏற்பட்டது.
இதுகுறித்து மணப்பெண், மாப்பிள்ளையிடம் குறை கூறியதற்கு மாப்பிள்ளை என்ன சொன்னார் தெரியுமா? 'உன்னை வேண்டுமானாலும் விட்டுவிடுவேன், ஆனால் நண்பர்களை விட்டுக்கொடுக்க மாட்டேன்'. தன்னை விட்டுக்கொடுக்கத் தயாரான மணப்பெண், மேடையை விட்டு வெளியேறினார்.

பட மூலாதாரம், Getty Images
வரதட்சணை கேட்டதால் பிணைக்கைதியான மாப்பிள்ளை
ஹரியானாவில் பல்வல் மாவட்டம், ஹதீன் கிராமத்தில் திருமண தினத்தன்று வரதட்சணை கேட்ட மணமகனையும், அவரது சகோதரரையும் ஒரு அறையில் அடைத்துவைத்தார் மணப்பெண்.
கடைசி நிமிடத்தில் வரதட்சணைக் கோரியதற்கு எதிர்ப்புக் காட்டும் விதமாக மணப்பெண் இப்படிச் செய்தார். வரதட்சணை கோரியதோடு விட்டதா மணமகனின் குடும்பம்? பெண் வீட்டாரை அவமானமும் செய்தார்கள்.
பஞ்சாயத்தும், காவல்துறையும் தலையிட்டு விவகாரத்தை சுமுகமாக்கினார்கள்.
ஆனாலும் பஞ்சாயத்து அளித்த தீர்ப்போ வினோதமாய் இருந்தது. மணமகளின் குடும்பத்தினர் சுமார் ஒரு ஏக்கர் நிலம் (நான்கு பிஹா நிலம்) அல்லது பத்து லட்சம் ரூபாயை மணமகனின் குடும்பத்தினருக்கு கொடுக்கவேண்டும், இல்லையென்றால் மணமகள், கணவன் வீட்டிற்கு செல்லமுடியாது!

பட மூலாதாரம், Getty Images
போதை மருந்துக்கு அடிமையானவரை மணக்க மறுத்த மணப்பெண்
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புரில் 22 வயது சுனிதா சிங், திருமணத்திற்காக குருத்வாராவுக்குள் நுழைந்த மணமகன் ஜெய்ப்ரீத் சிங் தள்ளாடிய நிலையில் இருந்ததை பார்த்ததும், காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டார், திருமணம் செய்துக் கொள்ளமுடியாது என்று நிராகரித்துவிட்டார்.
மணமகன் போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டவர் என்பதை நிரூபிக்க உள்ளூர் சுகாதார மையத்தில் பரிசோதனை நடத்த முயன்றபோது, அங்கு அதற்கு தேவையான கருவிகள் எதுவும் இல்லை.
ஆனால் மனம் தளராத மணப்பெண் சுனிதா, தனியார் பரிசோதனை ஆய்வகத்தில் பரிசோதனை செய்தபோது, சந்தேகம் உறுதியானது. மணமகன் ஜெய்ப்ரீத் சிங் 'ஓபியாய்ட் வலி நிவாரணி'க்கு அடிமையாயிருந்தார் என்பது நிரூபணமானது.
அதனைத் தொடர்ந்து, சுனிதாவின் துணிச்சலை பாராட்டி, வீரப்பெண்மணி என்ற பட்டத்தை, உள்ளூர் செஞ்சிலுவை சங்கத்தின், போதை மருந்து பயன்படுத்துபவர்களை குணப்படுத்தும் மையம் அறிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
வாழ்த்த வந்தவர், மணப்பெண்ணின் வாழ்க்கை துணைவரானார்
திருமண நிகழ்ச்சியில் அசைவ உணவு இல்லாததால் கோபம் கொண்ட மணமகனும், அவரது குடும்பத்தினரும் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.
தங்களிடம் மன்னிப்புக் கேட்டு திருமணத்தை நடத்த கெஞ்சுவார்கள் என்று எதிர்பார்த்த பிள்ளை வீட்டாரின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது.
திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஒருவர், மணப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயார் என்று சொன்னார். மணப்பெண்ணின் மனப்பூர்வ சம்மதத்துடன் திருமணம் இனிதே நடந்தேறியது.
அசைவ உணவு இல்லாததால் முறுக்கிக் கொண்ட மாப்பிள்ளைக்கு பதிலாக விருந்தினராய் வந்து மாப்பிள்ளையானவருக்கு சைவ உணவின் மீது எந்த கோபமும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
மூன்று முறை தலாக் சொன்ன மணப்பெண்
பிஹாரை சேர்ந்த சஹர்சா என்ற மணப்பெண், திருமணம் முடிந்த கையோடு, மணமகன் மொஹம்மத் இக்பாலிடம் மூன்று முறை தலாக் சொல்லி திருமணத்தை முறித்துவிட்டார்.
மணமகனின் கல்வி குறித்து மணமகளின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், மணப்பெண் இந்த முடிவை எடுத்தார்.
பி.எட் படித்துவிட்டு, சுயதொழில் செய்துவருவதாக மணமகன் மொஹம்மத் இக்பால் பெண் வீட்டாரிடம் சொல்லியிருந்தார்.
ஆனால், மணமகன் பத்தாவது வரை தான் படித்திருக்கிறார் என்பதும், தொழில் எதுவும் செய்யவில்லை என்பதும் அப்போது தான் தெரியவந்த்து.
மணமகன் என்ன தவறு செய்தாலும் அதை மணமேடையிலேயே தட்டிக் கேட்கும் மணப்பெண்கள், திருமண நடைமுறைகளை மாற்ற விரும்பும் இளைஞர் சமுதாயம் என திருமணத்தின் கோணங்களும், பரிணாமங்களும் மாறிவரும் காலம் இது.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












