'பப்ஜி' மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - இனி என்ன நடக்கும்?

பட மூலாதாரம், MADHAN
யூட்யூப் சமூக வலைதளத்தில் மிகவும் கீழ்தரமான ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி காணொளிகளை வைரலாக்கும் 'பப்ஜி' மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு துணுக்குகள் தருவதாகக் கூறி அதற்கென யூட்யூப் சமூக வலைதளத்தில் தனக்கென ஒரு பிரத்யேக பக்கத்தை நிறுவி லட்சக்கணக்கானோரை பின்தொடருவோரை கொண்டிருப்பவர் மதன்.
இவர் துணுக்குகள் தரும் ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, சிறார்கள் தரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இவரது அடைமொழி 'பப்ஜி' ஆனது.
ஆன்லைன் விளையாட்டுலகின் சமூக வலைதள பயனர்கள் இடையே பப்ஜி மதன் என அழைக்கப்படும் இவர், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி தமது பக்கத்தில் பங்கேற்கும் சிறார்கள், பெண்களிடம் பேசுவதாக சர்ச்சை எழுந்தது.
இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக 150க்கும் அதிகமான புகார்கள் சென்னை காவல்துறை இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டன. அவற்றின் மீது சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
பல வார தேடுதலுக்குப் பிறகு பப்ஜி மதனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் மதனுக்கு உதவியதாக அவரது மனைவி கிருத்திகா எட்டு மாத கைக்குழுந்தையுடன் சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பின்னர் குழந்தையின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

பட மூலாதாரம், TWITTER
இதையடுத்து தன்னையும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுக்களை சைதாப்பேட்டை நீதிமன்றம் நிராகரித்தது.
இதற்கிடையே, ஆதரவற்றோருக்கு உதவுவதாகக் கூறி ஆன்லைனில் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக மதன் மீது மேலும் சில வழக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், அதிக புகார்கள் மற்றும் வழக்குகள் பதிவானதைத் தொடர்ந்து பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
குண்டர் சட்டம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
குண்டர் சட்டம் என்றால் என்ன? அதன் அதிகார வரம்புகள் என்ன? குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டோருக்கு உள்ள வாய்ப்புக்கள் என்ன? ஏழு முக்கிய தகவல்கள்:
1. குண்டர் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர், "தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்".
2. இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரிகள் ஒருவரை சிறையில் தள்ள முடியும். நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும் கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.
3.குண்டர்கள் என்ற வரையறையை விளக்கும்போது, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும் குற்றம் எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்.
4. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சரியா என்பதை நீதிபதி உள்ளிட்டோரைக் கொண்ட ஆலோசனைக் குழு முடிவு செய்யும். அந்தக் குழு முடிவு செய்தாலும் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற முடியும்.
5. குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டால், அந்த நபரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். மாநில அரசு விரும்பினால் முன்கூட்டியே விடுவிக்கலாம்.
6. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர் நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
7. 2006-ஆம் ஆண்டில்தான் திரையுலகினரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப்படங்களைத் திருட்டுத் தனமாக பதிவு செய்வது, சி.டி.க்களில் பதிவு செய்து விற்பதும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
அடிப்படை உரிமைக்கு எதிரானது அல்ல

பட மூலாதாரம், Science Photo Library
``தடுப்புக் காவல் எனப்படும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதால் குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புள்ளதா?" என சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்குரைஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"தடுப்புக் காவல் சட்டத்தைப் போடுவதற்கு காவல்துறைக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை முறையாகப் பயன்படுத்துகிறார்களா என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு தன்மையில் இருக்கும். `இந்த வழக்குக்கு நீங்கள் குண்டர் சட்டம் போடக் கூடாது' என நாங்கள் கூற முடியாது. அது அவர்களின் அதிகாரத்துக்குட்பட்டது.
உச்ச நீதிமன்றமும், `தடுப்புக் காவல் சட்டம் என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது அல்ல' எனக் கூறியுள்ளது. அதேநேரம், சட்டத்தைப் பயன்படுத்தும்போது உண்மையான குற்றவாளிக்கு எதிராகத்தான் பயன்படுத்த வேண்டும். பொய் வழக்கைப் போட்டு அதன் அடிப்படையில் இதனைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்களின் கோரிக்கை" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், "அண்மைக்காலமாக குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டதில் பள்ளி மாணவிகளை பாலியல்ரீதியாக துன்புறுத்திய வழக்கு ஒருபுறம், பல்வேறு வழக்குகளில் குற்றம் செய்த நபர்களின் வழக்கு மறுபுறம் என இரு பிரிவாக உள்ளன. ஒருவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டால் அதுதொடர்பான ஆவணங்களை புத்தகமாகக் கொடுப்பார்கள். அதனைப் பார்த்த பிறகுதான் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவரும். இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு சிறைக் கைதிகள் உயர் நீதிமன்றத்தை அணுகுகின்றனர்.
ஆண்டுக்கு 4,000 வழக்குகள்
ஒவ்வொரு ஆண்டும் குண்டர் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் சுமார் 4,000 வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இதில் 99.5 சதவிகித வழக்குகளில், `தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது தவறு' எனக் கூறி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
காரணம், ஒன்று வழக்கை தவறாகப் பதிவு செய்திருக்கலாம் அல்லது முறைப்படி வழக்குகளை நடத்தாமல் இருந்திருக்கலாம். குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒருவர் 9 மாதங்கள் சிறையில் இருக்கிறார் என்றால் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் அதற்கான இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
உதாரணமாக, ஒருவர் கொலை செய்கிறார் என்றால் அவர் மீது குற்ற வழக்கைப் பதிவு செய்து சிறையில் வைப்பார்கள். அவர் 2 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியில் வந்துவிடுவார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும்.
ஆனால், குற்ற வழக்கில் உள்ளவர் வெளியில் வந்தால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்றால் அவரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கின்றனர். இதன்பிறகு அந்த நபர் சிறையில் இருந்து வெளியில் வரவிடாமல் செய்யும் வேலைகளை காவல்துறை செய்வதில்லை.
அப்படியானால், குற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட கூடுதல் மாதங்கள் அந்த நபர் சிறையில் இருந்தால் போதும் என்ற மனநிலையில் காவல்துறை உள்ளதாக எடுத்துக் கொள்ளலாம்" என்கிறார்.
குற்றவாளிகள் தப்பிக்க என்ன காரணம்?

பட மூலாதாரம், PUZHAL PRISON
குண்டர் சட்டம் தொடர்பாக பிபிசி தமிழிடம் சில தகவல்களை விவரித்தார், ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி. இதுதொடர்பாக பேசியவர், "தடுப்புக் காவல் சட்டம் என்பதே முழுக்க முழுக்க ஆவணங்களின் அடிப்படையில் செயல்படக் கூடிய ஒன்று. அந்த ஆவணங்களில் சிறிய அளவிலான தொழில்நுட்பக் குறைபாடுகள் இருக்கும்.
அதாவது குற்றவாளியின் தந்தை பெயர், முகவரி ஆகியவற்றில் ஏதேனும் சில தவறுகள் நேரலாம். ஆவணங்களை எல்லாம் வட்டார மொழியில் கொடுக்க வேண்டும்; 7 முதல் 15 நாள்களுக்குள் கொடுக்க வேண்டும் என்பன போன்ற விதிகள் உள்ளன. இவற்றில் ஏதாவது சிறு தவறு நேர்ந்தால் கூட அதையே காரணமாகக் காட்டி குற்றவாளிகள் வெளியில் வருவதும் நடக்கிறது," என்கிறார்.
மேலும், "அடிப்படையில் குண்டர் சட்டம் என்பது தண்டனை கிடையாது. அது ஒரு தடுப்பு நடவடிக்கை. `இந்த நபர் வெளியில் இருந்தால் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும்' என்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதில் எந்தவித சாட்சிகளின் விசாரணையோ நடப்பதில்லை. ஆவணங்களை அடிப்படையாக வைத்து வழக்கு நடப்பதால் தொழில்நுட்பத் தவறுகள் காரணமாக விடுதலை செய்யப்படுவதும் தொடர்கிறது. இதை காவல்துறை நிர்வாகத்தின் தவறு என்பதாக எடுத்துக் கொள்ள முடியாது," என்கிறார்.
தொடர் சிரமங்கள் தான் தண்டனை
``குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அதனை காவல்துறை சரியாக ஆய்வு செய்வதில்லை என்கிறார்களே?" என்றோம். `` அப்படியில்லை. தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தடுப்புக் காவல் சட்டத்தைப் பயன்படுத்தும்போது அதற்கென உள்ள விதிமுறைகளை மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதில் ஏதாவது ஒரு அதிகாரி தவறு செய்தால் அதனைச் சுட்டிக் காட்டி குண்டர் சட்டத்தை ரத்து செய்துவிடுகிறார்கள். இதன் அடிப்படையில் அந்த அதிகாரிக்குத் தண்டனை வழங்கினால், குண்டர் சட்டம் போடுவதற்குத் தயங்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிடும்.
காவல்துறையில் குண்டர் சட்டம் பதிவு செய்வது என்பதே மிக முக்கியமான பணிதான். அதற்கான ஆவணங்களைத் தயாரித்து மிக விரைவாகச் செய்ய வேண்டிய பணி அது. அதில் உள்ள தவறுகளால் அந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட காலம் அந்த நபர் சிறையில் இருப்பது மிக முக்கியமானது.
இதனை உடைத்துக் கொண்டு வெளியே வருவது அவ்வளவு எளிதானதல்ல. நீதிமன்ற விசாரணை எனத் தொடர்ந்து சிரமங்களை சந்தித்த பிறகுதான் வெளியில் வருகின்றனர். அந்தச் சிரமமே தண்டனையாக இருப்பதால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை," என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













