toxic madan 18+ சேனலில் பப்ஜி விளையாட சொல்லிக்கொடுப்பதாக ஆபாசப் பேச்சு; என்ன நடக்கிறது யூடியூபில்?

பட மூலாதாரம், Twitter
பப்ஜி விளையாட்டை ஆன்லைனில் விளையாடுவதை யூடியூபில் வெளியிட்டுவந்த இளைஞர், பெண்களை ஆபாசமாகப் பேசியது, குழந்தைகளுடன் முறையற்ற வகையில் உரையாடிய விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
Player Unknown Battleground எனப்படும் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இருந்தபோதும் சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த விளையாட்டை பலர் விளையாடிவருகின்றனர். இந்த நிலையில், இந்த விளையாட்டை சிலருடன் இணைந்து விளையாடுவதோடு, அதனை யூடியூபில் நேரலையாக குரல் வர்ணனையுடன் மதன் என்ற இளைஞர் ஒளிபரப்பிவந்தார்.
இதற்காக "மதன்" என்ற யூடியூப் சேனலை அவர் நடத்திவந்தார். ஆனால், அவரது குரல் வர்ணனையில் ஆபாசமான வார்த்தைகள் தாராளமாக இடம்பெற்றுவந்தன. குறிப்பாக பெண்களைத் தரக்குறைவாகப் பேசும் வார்த்தைகள், உடன் விளையாடுபவர்களை ஆபாசமாக பேசும் வார்த்தைகள் இடம்பெற்றுவந்தன.
இவரது சேனலுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து வயதுவந்தோருக்கான பப்ஜி சேனல் ஒன்றை "டாக்சிக் மதன் 18 பிளஸ்" என்ற பெயரில் இவர் துவங்கினார். இந்த சேனலிலும் பப்ஜி விளையாடுவது ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது. இதிலும் ஆபாசமான வார்த்தைகள் சாதாரணமாக இடம்பெற்றன.
இந்த இரண்டு யூடியூப் சேனல்களுக்கும் லட்சக் கணக்கில் பின்தொடர்வோர் இருந்தனர். இவருடைய யூடியூப் சேனலைப் பின்தொடர்பவர்களில் பெரும்பாலானவர்கள் பதின் பருவத்தைச் சேர்ந்த இளைஞர்களாகவே இருந்தனர். குறிப்பாக 13 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களே இவரைப் பெரிதும் பின்தொடர்ந்துவந்தனர்.
இவரது சில வீடியோக்கள் லட்சக் கணக்கானவர்களால் பார்க்கப்பட்டிருந்தன. மேலும் இவர் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது உடன் விளையாடுபவர்கள் அதை ரசிப்பதும் நடந்துவந்தது. பலர் இவர் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் விதத்திற்கு அடிமையானதைப் போல நடந்துகொண்டனர். இவர் கெட்டவார்த்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களையும் ஆபாசமாகத் திட்டியதோடு, தன்னால் எதையும் சந்திக்க முடியுமென்றும் கூறிவந்தார்.

பட மூலாதாரம், Pubg corp
இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மிக தீவிரமாக செயல்பட்டு பதிவுகளை வெளியிட்டுவந்தார். இந்த நிலையில், இவருடைய விளையாட்டு வீடியோ ஒன்றில் பெண்களை மிக ஆபாசமாகப் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வேறு சில யூடியூப் பதிவர்கள் இந்த இளைஞர் 18 வயதுக்குக் கீழே உள்ள பெண் குழந்தைகளுடனும் வயதுக்குத் தகாத வார்த்தைகளுடன் உரையாடிய ஸ்க்ரீன் ஷாட்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை நகரக் காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, இன்றைக்கு அந்த இளைஞர் காவல்துறையின் விசாரணைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் வரவில்லை.
இந்நிலையில், இந்த இளைஞரின் யூட்யூப் சேனல்களையும் சமூக வலைதளப் பக்கங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளில் சென்னை நகரக் காவல்துறை இறங்கியுள்ளது.
பிற செய்திகள்:
- ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- அ.தி.மு.கவில் அதிரடி; சசிகலாவுடன் பேசியோர் கட்சியிலிருந்து நீக்கம்
- கொரோனா ஊரடங்கால் நிகழ்ந்த மாற்றம்: கடலில் விடப்பட்ட 19,000 ஆமைக் குஞ்சுகள்
- நஃப்டாலி பென்னெட்: இஸ்ரேலின் புதிய பிரதமர் பற்றி முழுமையாக தெரியுமா?
- ராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












