கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடலில் நிகழ்ந்த மாற்றம்: மன்னார் வளைகுடாவில் விடப்பட்ட 19,000 ஆமைக் குஞ்சுகள்

பட மூலாதாரம், FUNDAOPRNCIPE_FFI
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மாசு குறைந்ததால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு 19 ஆயிரம் ஆமை முட்டைகள் மண்டபம் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன. இவை பொரிப்பகத்தில் வைக்கப்பட்ட பின் பிறந்த ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.
உலகில் உள்ள ஏழு வகை கடல் ஆமைகளில் சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய ஐந்து வகை கடல் ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.
ஆண் ஆமையோடு இனப் பெருக்கம் செய்த பெண் ஆமையானது முட்டையிடுவதற்காக மணல்பாங்கான கடற்கரையை நோக்கி வரும். பெண் ஆமை கடற்கரையில் சுமார் மூன்று அடி ஆழம் வரையிலும் குழி தோண்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் இடும்.
பின்னர் முட்டையை பாதுகாக்கும் பொருட்டு மணலால் குழியை மூடி விட்டு மீண்டும் கடலுக்கே சென்று விடும். முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவர 45 முதல் 55 நாட்கள் வரை ஆகும்.
முட்டையிலிருந்து வெளி வரும் ஆமை குஞ்சுகளானது தானாகவே கடற்கரை வழியாக ஊர்ந்து கடல் நீரில் நீந்தி ஆழ்கடலை நோக்கி சென்று விடும். அதனால் கடல் ஆமைகள் கடற்கரை பகுதியில் முட்டையிட்டு சென்று விடுகின்றன.
ஆனால் கடற்கரை ஓரங்களில் ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளை காகம், நாய், பெருச்சாளி உள்ளிட்டவைகள் சேதப்படுத்துவதால் கடந்த சில ஆண்டுகளாக கடல் ஆமைகள் வேகமாக அழிந்து வருகின்றன.
அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க கடற்கரை ஓரங்களில் குழி தோண்டி ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து செயற்கை பொரிப்பகத்தில் வைத்து, முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளி வந்த உடன் அதனை கடலில் விட்டு விடுகின்றனர். கடல் ஆமைகளை பொறுத்தவரை டிசம்பர் முதல் மே மாதம் வரை முட்டையிட கடற்கரைக்கு வரும்.

பட மூலாதாரம், ASIT KUMAR/AFP/GETTY IMAGES
தற்போது மீனவர்கள் மத்தியில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வனத்துறையினரால் தொடர்ந்து ஏற்படுத்தப்படுவதால், கடலில் மீன் பிடிக்கும் போது வலைகளில் கடல் ஆமைகள் சிக்கினால் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுவித்து விடுகின்றனர்.
கொரோனா ஊரடங்கால் குறைந்தது கடல் மாசு
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடற்கரை பகுதி ஆமைகள் முட்டையிடுவதற்கு ஏற்ற பகுதி. அங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தொடங்கி மே மாதம் வரை வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரிக்கின்றனர்.
இந்தாண்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளை எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள செயற்கை குஞ்சு பொரிப்பகத்தில் மணலில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டன. 45 முதல் 55 நாட்களுக்கு பின் குஞ்சுகள் பொரிக்கப்பட்டு கடற்கரை மணல் பரப்பில் விடப்பட்டன.
கடற்கரையில் விடப்படும் அனைத்து ஆமை குஞ்சுகளும் மணல் பரப்பில் மெதுவாக ஊர்ந்தபடி தனுஷ்கோடி கடலை நோக்கி சென்று கடல் நீரில் நீந்திய படி ஆழமான கடல் பகுதியை நோக்கி சென்றன.
கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்தலும், கடற்கரைகளில் மக்கள் நடமாட்டமும் இல்லாததால் கடலில் மாசு, குறிப்பாக பிளாஸ்டிக் மாசு குறைந்துள்ளது.

இதனால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு 19 ஆயிரத்தி 748 ஆமை முட்டைகள் சேகரிக்கபட்டு அதில் இருந்து 19 ஆயிரத்தி 200 ஆமை குஞ்சுகள் கடலில் விட்டு வனத்துறையினர் சாதனை படைத்துள்ளதாக கூறினார் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ்.
மீனவர்களுக்கு வனத்துறையினரால் விழிப்புணர்வு
தொடர்ந்து பேசிய வெங்கடேஷ் மண்டபம் வனத்துறையினரால் வாரம்தோறும் மீனவ கிராமங்களுக்கு சென்று அழிந்து வரும் ஆமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
இந்த ஆண்டு மீனவ கிராமங்களில் மீனவர்கள் அதிகளவு இந்த எண்ணிக்கையில் முட்டைகள் கிடைப்பதற்கு வனத்துறைக்கு உதவினர். சில நேரங்களில் வனத்துறையால் பணியமர்த்தப்பட்டுள்ள காப்பாளர்கள் முட்டைகளை சேகரிக்க தவறினாலும் மீனவர்கள் உடனடியாக ஆமை முட்டைகள் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் என்று அவர் தெரிவித்தார்.
கடல் காப்பான் சான்றிதழ்
மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அவர்களின் மீன்பிடி வலைகளில் சிக்கி அரிய வகை ஆமைகள் இறந்து விடுகின்றன.
இதனை தடுப்பதற்காக பாம்பன் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கடல் ஓசை சமுதாய வானொலி மூலம் மீனவர்களின் வலைகளில் சிக்கும் அரியவகை மீன் இனங்களை உடனடியாக வலையில் இருந்து விடுவித்து கடலில் உயிருடன் விட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அப்படி வலைகளில் இருந்து ஆமைகளை விடும் காட்சியை செல்போன்களில் படம் பிடித்து வாட்ஸ்அப் மூலம் வானொலியுடன் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கு கடல் காப்பான் என்கின்ற சான்றிதழ் மற்றும் பரிசு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
மீனவர்களுக்கு பணப்பரிசு
இது குறித்து பாம்பன் கடல் ஓசை சமுதாய வானொலியில் பணியாற்றி வரும் லெனின் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களுக்கு எந்த பகுதியில் மீன்கள் அதிகமாக உள்ளது என்பதனை செயற்கைகோள் உதவியுடன் வானொலியில் அறிவிப்பது, கடலில் ஏற்படும் புயல் குறித்தான முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குவது உள்ளிட்ட மீனவர்களின் நலன் சார்ந்த செயல்களை தொடர்ச்சியாக செய்து வருகிறோம் என்றார்.
இதன் ஒரு பகுதியாக அழிந்துவரும் அரியவகை கடல் வாழ் உயிரினங்களை காப்பதற்காக கடல் ஓசை சமுதாய வானொலி வழியாக மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கும் ஆமைகள், டால்பின், கடல் பசு உள்ளிட்ட அரிய வகை மீன்களை வலையில் இருந்து உயிருடன் மீட்டு கடலில் விடும் வீடியோக்களை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்தால் அவர்களுக்கு 'கடல் காப்பான்' என்கின்ற சான்றிதல், டி-ஷர்ட் மற்றும் 1000 ரூபாய் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது.
இதனை கடந்த உலக மீனவர் தினத்தில் இருந்து துவங்கி இன்று வரை ஆறு மீனவர்கள் தங்களது படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் போது வழியில் சிக்கிய ஆமைகளை விடுவித்த வீடியோவை அனுப்பி இந்த பரிசை பெற்றுச் சென்றுள்ளதாக கூறினார் லெனின் .
ஜெல்லி மீன்களை உண்ணும் ஆமைகள்
தொடர்ந்து பேசிய லெனின் பொதுவாக கடல் ஆமைகள் மீன் வளம் பெருக்க அதிக பங்காற்றி வருகிறது. உதாரணமாக கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாக இருக்கும். ஜெல்லி மீன்கள் கடல் மீன்களை உண்டு வாழ்ந்து வருவதால் மீன் வளம் குறைகிறது. அதே வேளை ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உண்பதால் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து மீனவர்களுக்கு வருவாய் உயரும்.
ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை மற்றும் வனத்துறையினர் உதவியுடன் தொடர்ச்சியாக இந்த செயலை செய்து வருகிறோம். இது மீனவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார் லெனின்.
மீனவர்களின் நண்பன் கடல் ஆமைகள்

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மீனவர் ஜிம்மி காட்டர் பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் கடந்த 35 ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். பெரும்பாலும் நாங்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகளில் மீன்களுடன் ஆமைகளும் சேர்ந்து வருவதுண்டு சில நேரங்களில் ஆமைகள் புகுந்த வலைகளில் மீன் வராது என்ற கோபத்தில் வலையில் சிக்கும் ஆமைகளை கொன்று விடுவோம்.
தற்போது கடல் ஆமைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது வனத்துறை மற்றும் மீன் வளத்துறையினர் தெரிவித்து வருவதால் வலைகளில் சிக்கும் ஆமைகளை உயிருடன் கடலில் விட்டு விடுகிறோம்.
எங்கள் மீனவர்கள் சிலர் கடல் உணவாக ஆமை கறிகளை சமைத்து சாப்பிட்டு வந்தனர். இதனால் ஆமைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாக மீனவர்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வால் கடல் ஆமைகளை சாப்பிடுவதை மீனவர்கள் தவிர்த்து விட்டனர்.
மேலும் கடற்கரை ஓரங்களில் பல இடங்களில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடலில் மீனவர்கள் வலையில் சிக்கும் ஆமைகளை உயிருடன் கடலில் விடுவதால் ஆமைகள் இறந்து ஒதுங்குவது அதிகளவு குறைந்துள்ளது. இது மீனவர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதாக கூறுகிறார் மீனவர் ஜிம்மி காட்டர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












