தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தணிக்கையில் புதிய முறை அமல்? - தணிக்கை அதிகாரிகள் போர்க்கொடி உயர்த்துவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அத்துறையில் பணியாற்றும் தணிக்கை ஆய்வாளர்கள் மிகுந்த கொதிப்பில் உள்ளனர். என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36,861 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்குச் சொந்தமாக 4,78,272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் உள்ள கட்டடங்களைப் பயன்படுத்த வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் பணம் வசூலிக்கப்படுகிறது.
உண்டியல் வருமானம், கோயிலின் பராமரிப்புச் செலவினங்கள் ஆகியவற்றை தணிக்கை செய்வதற்கென தணிக்கை ஆய்வாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு கோயிலின் வருமானத்தையும் செலவுகளையும் ஆய்வு செய்வதில் இவர்களின் பணி மிகவும் முக்கியமானது. கோயிலின் வருமானத்தைப் பொறுத்து செயல் அலுவலர், உதவி ஆணையர், இணை ஆணையர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரூபாய் 50 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ள கோயில்களின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதற்கு சி.ஏ எனப்படும் பட்டய கணக்காளர்களை நியமனம் செய்யும் முடிவில் அரசு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனையில் ஆழ்ந்த தணிக்கை ஆய்வாளர்கள் பலரும், `அறநிலையத்துறையில் இப்படியொரு முடிவை எடுத்து எங்களை மதிப்பிழக்கச் செய்வதைவிட, நிதித்துறைக்கு எங்களை மாற்றிவிடுங்கள்' என உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
என்ன நடக்கிறது இந்து சமய அறநிலையத்துறையில்?

பட மூலாதாரம், Getty Images
``மாநிலம் முழுவதும் கோயில்களின் வரவு செலவு கணக்குகளைக் கண்காணிக்க 250-க்கும் மேற்பட்ட தணிக்கை ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் தணிக்கை கண்காணிப்பாளர், 28 உதவி தணிக்கை அலுவலர்கள், 18 மண்டல தணிக்கை அலுவலர்கள், 2 துணைத் தலைமை தணிக்கை அலுவலர்கள் உள்ளனர். இவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க நிதித்துறையில் இருந்து தலைமை தணிக்கை அலுவலர் ஒருவர் இருக்கிறார்.
கோயிலை பொறுத்தவரையில் சிப்பந்திகள் சம்பளம், சொத்து வரி, குடிநீர் வரி, தணிக்கை செய்வதற்கான தொகை, வார, மாத உற்சவம், சஷ்டி, அஷ்டமி செலவுகள், விளம்பர கட்டணம், தேர் மராமத்து, உண்டியல் திறக்கும் செலவு, பொது சுகாதாரம், மின் சாதனங்கள், சிசிடிவி, ஜெனரேட்டர் செலவு, சாமிக்கு பரிவட்டம், அண்ணா நினைவுநாளுக்கு அன்னதானம் உள்பட ஏராளமான செலவுகள் இருக்கும். இதில், வார, மாத உற்சவ நிகழ்வுகளில்தான் அதிகப்படியான மோசடிகள் நடக்கும். இதனையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதுதான் எங்களின் பணி" என்கிறார் அறநிலையத்துறையின் தணிக்கை ஆய்வாளர் ஒருவர்.
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக சில விவரங்களைப் பட்டியலிட்டார். `` கோயிலுக்குச் சொந்தமான கடைகளில் இருந்து முறையாக வாடகை வசூலிக்காமல் பாக்கித் தொகைகள் நிலுவையில் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்கிறோம். இதில் அலட்சியமாக செயல்பட்ட பல செயல் அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்துள்ளோம். பல கோயில்களில் போலி வவுச்சர்கள் மூலம் பணம் எடுக்கும் காரிங்களும் நடக்கின்றன. இவற்றையெல்லாம் முறைப்படுத்தி கோயிலின் வருமானத்தை சரிசெய்வதில் எங்களின் பங்கு மிக முக்கியமானது. இதில் கடந்த சில வாரங்களாக புதிய முறையைப் புகுத்தும் வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அதாவது, ரூபாய் 50 லட்சத்துக்கு மேல் வருமானம் வரக் கூடிய கோயில்களின் கணக்கு, வழக்குகளை சரிபார்க்க சி.ஏ முடித்த பட்டய கணக்காளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதனால் எங்களின் பணிகளுக்கு மதிப்பில்லாமல் போய்விடும். இதன் காரணமாக, `நிதித்துறை செயலகத்துக்குக்கீழ் பணிக்குச் சென்றுவிடலாமா?' எனவும் பேசி வருகிறோம். அங்கு ஆவின் தணிக்கைத் துறை, கோ-ஆப்ரேட்டிவ், உள்ளாட்சி அமைப்புகள் உள்பட பல்வேறு துறைகளுக்குத் தனியாக தணிக்கை அலுவல்கள் உள்ளன. `எங்களை அங்கு மாற்றிவிடுங்கள், அங்கு எங்களால் தனித்து செயல்பட முடியும்' எனவும் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து பதில் வரவில்லை. சி.ஏ முடித்தவர்களை நியமித்தால் எங்களுக்கு அறநிலையத்துறையில் வேலையில்லாமல் போய்விடும்" என்கிறார் வேதனையுடன்.
இதையடுத்து, `` லட்சத்துக்கு மேல் வருவாய் வரக்கூடிய கோயில்களின் கணக்குகளை தணிக்கை செய்ய சி.ஏ படித்தவர்களை நியமிக்க உள்ளதாகக் கூறப்படுகிறதே?" என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்ஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``நீதிமன்றம்தான் அவ்வாறு கேட்கிறது. அரசு இன்னமும் கொள்கை முடிவாக எதையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் எங்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக, முதலமைச்சரிடம் ஆலோசனை செய்ய உள்ளோம். அதன்பிறகு அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி செயல்படுவோம்" என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












