கொரோனா பயத்தால் குறையும் ரத்த தானம் - அதிகரிக்க வழி என்ன?

ரத்த தானம்
    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் ரத்த தானம் வழங்கும் பணிகளில் பெருமளவு தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரத்த தானம் செய்யும் தன்னார்வ குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சாலை விபத்து காரணமாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள், இதய சிகிச்சை, பிரசவம் போன்றவற்றுக்காக கொடையாளர்களிடமிருந்து ரத்தம் பெறப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவை தவிர, புற்றுநோய், தலசீமியா, டயாலிசிஸ் ஆகிய சிகிச்சைகளுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக ரத்தம் தேவைப்படும். இந்த சிகிச்சைகளுக்காகவும் தானமாக பெறப்படும் ரத்தம் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா அச்சம்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா நோய்த்தொற்று பரவல் துவங்கியது முதல் பல்வேறு சிகிச்சைகளுக்காக ரத்த தேவை இருந்தபோதும், நன்கொடையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும், இதற்கு காரணம் கொரோனா குறித்த அச்சம்தான் எனவும் தெரிவிக்கிறார் தன்னார்வலர் உதிரம் கோபி.

உதிரம் கோபி

'கொரோனா பரவலுக்கு முன்பு வரை, எங்கள் குழு சார்பில் சுமார் 800 உதிரக் கொடையாளர்கள் மாதந்தோறும் ரத்த தானம் செய்து வந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை சரிபாதியாக குறைந்துள்ளது. குறிப்பாக, தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலையில் ரத்த தானம் செய்ய முன்வருபவர்கள் மிகவும் அரிதாகியுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று நம்மையும் பாதித்துவிடும் என்ற அச்சத்தால், பெரும்பாலான கொடையாளர்கள் ரத்த தானம் செய்வதை நிறுத்திக்கொண்டுள்ளனர். அச்சத்தையும் மீறி ரத்த தானம் செய்ய சில இளைஞர்கள் முன்வந்தாலும் கொரோனா பயத்தால், குடும்பத்தினரே அவர்களை தடுக்கின்றனர். அது இயல்பான அச்சம் தான். ஆனால், ரத்தத்திற்காக காத்திருக்கும் மனித உயிரைக் காப்பாற்ற ரத்தத்தைத் தவிர வேறு எந்த மாற்றுமில்லை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்' என்கிறார் இவர்.

'கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர் சாலை விபத்தில் சிக்கி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ரத்த வகை 'ஏபி நெகட்டிவ்'. மிகவும் அரிய வகை ரத்தம் இது. உடனடியாக 8 யூனிட் ரத்தம் தேவை என தகவல் வந்தது.

குழுவில் உள்ள நண்பர்களிடம் தகவலை தெரிவித்து ரத்தம் தேடி அலைந்தோம். 150க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரத்த தானத்திற்காக பேசினோம். பல மணி நேர முயற்சிக்குப் பிறகு 'ஏபி நெகட்டிவ்' ரத்த கொடையாளர்கள் கிடைத்தனர். உடனடியாக சிகிச்சை துவங்கியது. விபத்தில் சிக்கிய தம்பதியினர் இப்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். அந்நேரம் கொடையாளர்கள் கிடைத்திருக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகி இருக்கும். கொரோனா பரவலுக்கு முன்பாக ரத்தத்திற்காக இவ்வளவு சிரமப்பட்டதில்லை.

ரத்த தானம்

எனவே, உரிய கொரோனா பாதுகாப்போடு ரத்த தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ள போதும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ரத்த கொடையாளர்களுக்கு உரிய அனுமதிகள் வழங்கியுள்ளன. ரத்தத்திற்கு மாற்று, ரத்தம் மட்டுமே என்பதை உணர்ந்து, ரத்த தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்' என வலியுறுத்துகிறார் தன்னார்வலர் உதிரம் கோபி.

இவர் ஒருங்கிணைத்து வரும் தன்னார்வ குழுவினர் கோவை மாவட்டத்தில் ஏற்படும் ரத்த தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா நோய்தொற்றுக்கான தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதாலும் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக கூறுகிறார் தன்னார்வலர் அயூப் ரியாஸ்.

அயூப் ரியாஸ்

'கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் சுமார் இரண்டு மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய சூழலில் ரத்த தானம் செய்யும் கொடையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், முறையான விழிப்புணர்வை முன்னெடுத்தால், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பே ரத்த தானம் செய்வதை ஊக்குவிக்க முடியும்.

ரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் முன்னரே, கொரோனா காலத்திலும் ரத்த தானம் செய்வதை அரசு வலியுறுத்த வேண்டும்' என கோரிக்கை வைக்கிறார் அயூப்.

இவர், தன்னார்வலர் குழுவினை உருவாக்கி தமிழ்நாடு முழுவதும் ரத்த கொடையாளர்களை ஒருங்கிணைத்து ரத்த தானம் பெற்று வருகிறார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் மட்டுமே இக்குழுவினர் தற்போது ரத்த தானம் செய்து வருவதாக கூறுகிறார் இவர்.

'ரத்த தானங்கள் குறைந்து வருவதற்கு மிக முக்கிய காரணமாக பொது முடக்கத்தை நான் கருதுகிறேன். ரத்த தேவைக்கான தகவல்கள் மற்றும் அழைப்புகள் எந்த நேரமும் வரும். தகவலை உறுதி செய்த பின்பு கொடையாளர்களை தேடிக் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதில் பெரும் சிக்கல்கள் இப்போது உருவாகியுள்ளது.

நள்ளிரவு அல்லது அதிகாலை நேரங்களில் மாவட்ட நிர்வாகத்திடம் போக்குவரத்துக்கு அனுமதி பெற முடிவதில்லை. ஆனால், மருத்துவமனையில் அவசரமாக ரத்தம் தேவைப்படும். வெகுசில காவலர்கள் மட்டுமே நிலைமையை புரிந்து கொண்டு வாகனத்தை அனுமதிப்பார்கள்.'

'சில வாரங்களுக்கு முன்பு, கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டு ரத்த தேவை ஏற்பட்டது. உடனடியாக கொடையாளர்களை உறுதி செய்துவிட்டோம். ஆனால், பொதுமுடக்கம் காரணமாக அவர்களை ஒருங்கிணைத்து மருத்துமனைக்கு கூட்டிச் செல்வதில் சிரமம் இருந்தது.

எங்கள் குழுவின் சார்பில் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். ரத்தம் கிடைத்த பின்பு அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு இப்போது நலமாக உள்ளார்.

வாகனப் போக்குவரத்து இல்லாதது ரத்த தான சேவையை வெகுவாக பாதித்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் இருப்பில் உள்ள ரத்தத்தை பயன்படுத்த அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைக்கிறார் அயூப்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில், இளைஞர்கள் ஒன்றிணைந்து ரத்தக் கொடை சேவையை முன்னெடுத்து வருகின்றனர். அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், பொதுமுடக்கம் காரணமாக மலைப்பிரதேசங்களிலும் ரத்த தானம் செய்வது குறைந்து வருவதாக தெரிவிக்கிறார்.

'ரத்த தானத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொடையாளர்கள் முன்வருவார்கள். கோத்தகிரி, கூடலூர், குன்னூர், ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் வணிகம், கல்வி, சேவை உள்ளிட்ட எதுவாகினும் பிரதானமாக பொதுப் போக்குவரத்தை நம்பிதான் உள்ளது.

பொதுமுடக்கத்தால் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கொடையாளர்களை மருத்துவமனைக்கு வரவைப்பதில் இங்கு அதிக சிரமங்கள் உள்ளன. அரசு இதனைக் கருத்தில் கொண்டு, ரத்த தானம் செய்யும் குழுக்களையும், கொடையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அங்கீகரித்து ரத்த தானம் வழங்க முன்வருபவர்களுக்கு பிரத்யேக வாகன ஏற்பாடு செய்து, ரத்த தானத்தை ஊக்குவிக்க வேண்டும்.' என்கிறார் மணிகண்டன்.

ரத்தத் தேவைக்கான தற்போதைய நிலை குறித்து பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் பேசியதில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சாலை விபத்துக்கள் கனிசமாக குறைந்துள்ளதால் ரத்தத் தேவையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால், பிரசவம் மற்றும் பிற சிகிச்சைகளுக்கான ரத்தத் தேவை கொரோனா பாதிப்புக்கு முந்தைய அளவிலேயே இருப்பதாக கூறுகின்றனர்.

ஜமாத் இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பு

ரத்த தானம் வழங்குவதில் கல்லூரி பயிலும் இளம் வயதினர் முக்கியப் பங்கு வகித்து வருவதாக தெரிவிக்கிறார் ஜமாத் இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த ஹக்கீம்.

'கொரோனா பரவலுக்கு முன்பு எங்களது அமைப்பு சார்பில் பல்வேறு மக்கள் சேவைப் பணிகளை முன்னெடுத்து வந்தோம். அதில் ரத்த கொடை முகாம்கள் நடத்துவது பிரதானமானது. அந்த முகாம்களில், சரிபாதி அளவில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்வார்கள்.

பொது முடக்கம் காரணமாக, கடந்த ஒரு வருடமாக கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால். மிக அவசர ரத்த தேவையினை பூர்த்தி செய்வதும், அரிய வகை ரத்தத்தை ஏற்பாடு செய்வதும் சவாலாக மாறியுள்ளது.

எங்களது அமைப்பு சார்பில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள பள்ளிவாசலின் தரைதளத்தை கொரோனா மருத்துவ தேவைக்கான தகவல் மையமாக மாற்றியுள்ளோம். கொரோனா நோய் குறித்த சந்தேகங்களுக்கு உரிய விளக்கமளிப்பதோடு, மருத்துவம் மற்றும் உணவு சார்ந்த தேவைகளையும் நிறைவேற்றி வருகிறோம். இந்த சூழலிலும் மருத்துவ சிகிச்சைக்கான ரத்த தேவை குறித்த அழைப்புகள் எங்களுக்கு தொடர்ந்து வருகின்றன.

கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தபோது குறைந்த நேரத்தில் அதிக நபர்களுக்கு ரத்த தேவைக்கான தகவல் சென்றடையும். உடனடியாக இளைஞர்கள் ரத்தம் வழங்க முன் வருவார்கள். இப்போதும், சில மாணவர்கள் ரத்த தானம் வழங்க முன்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அரசு மருத்துவத்துறை நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.' என்கிறார் ஹக்கீம்.

கொரோனா நோய்த்தொற்று மேலும் சில காலம் நீடிக்கும் என்பதை கருத்தில் கொண்டும், எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி மீண்டும் மாவட்டங்கள்தோறும் ரத்ததான முகாம்களை நடத்த வேண்டும், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று தொடர்புடைய துறையினர் வலியுறுத்துகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :