கொரோனா: கோவையில் மனிதம் காக்கும் தன்னார்வலர்கள் - நெகிழ்ச்சிக் கதைகள்

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா இரண்டாம் அலையில் தமிழக அளவில் கோவை மாவட்டம் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளபோதும், அங்குள்ள சமூக ஆர்வலர்கள் அந்த சவால்களையும் கடந்து மனிதம் போற்றி வருகிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவது, கோவை மக்களை ஓரளவுக்கு நிம்மதி அடைய வைத்திருக்கிறது.

இருபது நாட்களுக்கு முன்பு கோவை மாநகர பகுதியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் அரசுத் துறைகள் கடும் அழுத்தத்தை சந்தித்தன.

அத்தகைய சூழலிலும் மனிதம் காக்க புறப்பட்ட சில தன்னார்வலர்கள் பற்றிய தொகுப்பு இது.

நடமாடும் ஆக்சிஜன் சேவை

ஆக்சிஜன் உதவி

கொரோனா பாதிப்பு தினமும் மூன்றாயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த வேளையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் என அனைத்திலும் படுக்கை வசதிகள் கிடைக்காமல் ஏராளமானோர் திருப்பி அனுப்பப்பட்டனர். நோயாளிகள் பலருக்கு தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைத்தபோதும், ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழக்க நேர்ந்தது. அந்த நேரத்தில், தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளிடமிருந்து, ஆக்சிஜன் உருளைகளை வாங்கி, நோயாளிகளின் வீட்டிற்கே சென்று ஆக்சிஜன் செலுத்தி முதலுதவி செய்யும் நடமாடும் ஆக்சிஜன் சேவையை 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பு வழங்கியது.

அந்த அமைப்பின் கொரோனா தடுப்பு நடவடிக்கை உதவிக் குழுவைச் சேர்ந்த ஷாஹுல் ஹமீதிடம் பேசினோம்.

'கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் அதிகரிக்கும் முன்பே எங்களது அமைப்பிலுள்ள வட மாநில நண்பர்கள் எங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் பயிற்சிகளையும் தந்தனர். அந்த வகையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, தேவையான உதவிகளை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய பல்வேறு குழுக்களை உருவாக்கி பணிகளை மேற்கொண்டோம்.

ஆக்சிஜன் உதவி

ஒரு கட்டத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. ஆக்சிஜன் கிடைக்காமல் கோவையில் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது தான் 'நடமாடும் ஆக்சிஜன் சேவை' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.

ஆக்சிஜன் தேவை குறித்த தகவல்கள் எங்களுக்கு கிடைக்கப் பெற்றதும், உடனடியாக எங்களது குழுவினர் பாதிக்கப்பட்டவரின் வீடுகளுக்கு சென்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டு வாசலில் இருந்தபடி ஆக்சிஜன் வழங்கும் சேவையை வழங்கினர். இதனால் உயிரிழக்கும் தருவாயில் இருந்த பலர் காப்பாற்றப்பட்டனர்,' என்கிறார் ஷாஹுல்.

'குறிப்பாக, 65 வயது முதியவர் ஒருவருக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக எங்கள் குழுவினர் அங்கு சென்று ஆக்சிஜன் அளித்து, மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சிகிச்சைக்கு பிறகு அவருடைய ஆக்சிஜனின் அளவு அதிகமானது. பாதிப்புகளில் இருந்தும் அவர் மீண்டு தற்போது நலமாக உள்ளார். அவரது குடும்பத்தினர் உணர்ச்சிபூர்வமாக நன்றி தெரிவித்தனர். அதை எப்போதும் மறக்க முடியாது."

"அதேபோல், அரசு மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு ஆக்சிஜன் படுக்கை தேவை என ஒருவர் அழைத்திருந்தார். உடனடியாக அங்கு சென்று ஆக்சிஜன் உதவி செய்தோம். பிறகு, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார். மனிதர்கள் ஆக்சிஜனைத் தேடி அலையும் சூழல் வரும் என கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் அந்த நிலை ஏற்பட்டது. அந்த சூழலிலும் நம்மால் முடிந்த உதவிகளை செய்தோம் என்ற நிம்மதி இன்னும் பல உதவிகளை செய்யத் தூண்டுகிறது' என்கிறார் இவர்.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோவையில் 5 நடமாடும் ஆக்சிஜன் சேவை வாகனங்களை இயக்கி வருகிறது. கடந்த 30 நாட்களில், சுமார் 300 நபர்களுக்கு நடமாடும் ஆக்சிஜன் சேவை வாகனம் மூலம் இலவச மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளதாக இந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

நல்லடக்கம் செய்யும் சேவை

அடக்கம் செய்ய உதவும் மக்கள்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை, நோயாளிகளின் குடும்பத்தினரே தொட அச்சப்படும் நிலையில், அவர்களை பாதுகாப்பாக எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்யும் சேவையை கடந்த ஆண்டு முதல் தற்போது வரை மேற்கொண்டு வருகின்றனர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர்.

'நமது குடும்பத்தினர் ஒருவர் உயிரிழந்த பின்பு, அவர்களை தொட முடியாமல் தூரத்தில் நின்று அழுவது என்பது வேதனைக்குரிய ஒரு நிலை. அந்த காட்சியை தினமும் பல முறை நாங்கள் பார்த்து வருகிறோம்' என்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முஹமது சபீருல்லா.

'நான் ஏழாம் வகுப்புவரை தான் படித்துள்ளேன். மெக்கானிக்காக வேலை பார்த்தேன். பின்னர் ஆட்டோ ஓட்டினேன். பிறகு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியில் சேர்ந்தேன். கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது உயிரிழந்தவர்களை முறையாக நல்லடக்கம் செய்ய எங்களது அமைப்பு முன் வந்தது. நானும் என்னை அந்த குழுவில் இணைத்துக் கொண்டேன். அதற்கு காரணம் எனக்கு 14 வயதாக இருக்கும்போது எனது தாய் மற்றும் தந்தை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது மருத்துவ ரீதியாக உதவி செய்யவும், சிகிச்சை சார்ந்த தகவல்களை விளக்கவும் எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. என்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது என நான் நினைத்திருந்தேன்.'

அடக்கம் செய்ய உதவும் மக்கள்

'தினமும் 5 முதல் 10 உடல்களை தொட்டு தூக்கி நல்லடக்கம் செய்து வருகிறோம். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த போதும், நமக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மனதில் எப்போதும் இருக்கும்.' என்கிறார் இவர்.

கொரோனா நோயால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்யும் பணி மிகுந்த மனச்சோர்வை தரக்கூடியவை என்கிறார் சபீருல்லா.

'கொரோனாவால் தந்தை உயிரிழந்துவிட மகன்களே தொட்டுத்தூக்க அஞ்சுகின்றனர். அந்த நிலை மிகவும் வருத்ததிற்குறியது. குறிப்பாக, நோய் பாதிப்பால் உயிரிழந்த இளம் வயதினரை அடக்கம் செய்யும்போது பெரும் மனவேதனை எங்களை தொற்றிக் கொள்ளும். அதன் தாக்கம் மனச்சோர்வை தருவதோடு, பல நாட்களுக்கும் நீடிக்கும்.'

'எனக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் முதல்வகுப்பு, மற்றொருவரை இப்போதுதான் பள்ளியில் சேர்த்துள்ளேன். நம்மால் குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் மனதில் இருக்கிறது. ஆனால், இந்த சேவையை நிறுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனது மனைவியும் நான் செய்யும் சேவைக்கு தடையாக இல்லாமல் உறுதுணையாக இருக்கிறார்.

கோவையில், கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு கட்டத்தில் நகரில் உள்ள மயானங்கள் முழுவது சடலங்களாக நிரம்பி இருந்தது. மீண்டும் அந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மட்டுமே எங்களின் பிரார்த்தனையாக உள்ளது. ஒருவேளை அதைவிட மோசமான சூழல் ஏற்பட்டாலும் எங்களது சேவை தொடரும்' என உறுதியாக தெரிவிக்கிறார் சபீருல்லா.

கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 288 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

உணவின்றி தவிக்கும் தினக்கூலிகள்

உதவும் மக்கள்

கடந்த ஆண்டு முழு முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக வடமாநில தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவின்றி தெருவோரங்களில் வசிப்பவர்கள் உணவின்றி தவிக்கும் நிலை உருவானது. ஆனால், இம்முறை எளிய மக்களின் உணவுத் தேவை பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு காரணம், கோவையில் உள்ள தன்னார்வ அமைப்புகள் முதல் சாதாரண மக்கள் வரை தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வந்தது தான். இது, கடந்த கொரோனா அலையில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்கின்றனர் தன்னார்வலர்கள் பலர்.

நாளொன்றுக்கு ரூ.750/-ஐ நன்கொடையாக பெற்று, தினமும் 100 பேருக்கு இலவசமாக உணவு வழங்கிவரும் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தன்னார்வ குழுவின் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி கமலேஷ் தங்களது சேவை குறித்து விளக்கினார்.

'தினமும் 3 அல்லது 4 நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கில் நண்பர்களோடு சேர்ந்து தன்னார்வ குழுவை துவங்கினேன். ஆதரவற்ற மக்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்கி வந்தோம். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் போது ஏழை எளிய மக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் உணவுக்காக அலைமோதும் நிலை உருவானது. அப்போது தெரிந்தவர்களிடம் இருந்து உதவிகளைப் பெற்று உணவு தயாரித்து இலவசமாக வழங்கினோம்.'

'இந்த ஆண்டு உருவான கொரோனா இரண்டாம் அலையில் வடமாநில தொழிலாளர்களிடமிருந்து பெரும்பாலும் உதவிக்கான அழைப்பு வரவில்லை. ஆனால், கோவையில் வசிக்கும் தினக்கூலி தொழிலாளர்களிடமிருந்து அதிகமாக அழைப்பு வருகிறது.

உதவும் மக்கள்

வேலையில்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினரோடு பசியில் வாடும் நிலை இப்போது உருவாகியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு உதவிகளை முன்னெடுக்க திட்டமிட்டோம். அப்போது சமைத்து உணவாக வழங்குவதை விட அரிசி மூட்டைகளை வழங்கினால், அடுத்த சில வாரங்களுக்கு வேலையின்றி தவிக்கும் தொழிலாளிகளின் குடும்பத்தினரால் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என தோன்றியது.

எனவே, நண்பர்களிடம் உதவிகளை பெற்று தினக் கூலி தொழிலாளர்களுக்கு 25 கிலோ அரிசி மூட்டையை இலவசமாக வழங்கி வருகிறோம்,' என்கிறார் இவர்.

'சில நாட்களுக்கு முன்பு, பீளமேடு பகுதியில் இருந்து உதவிக்கான தகவல் வந்தது. தேநீர் கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தவர், வருவாயில்லாத காரணத்தால் பச்சிளங்குழந்தை மற்றும் மனைவியோடு உணவின்றி தவித்து வருவதாக தெரியவந்தது. எங்கள் குழுவினரோடு அங்கு சென்று ஆய்வு செய்தோம். உடனடியாக அவருக்கு 25 கிலோ அரிசி மூட்டையை வாங்கி இலவசமாக வழங்கினோம். உருக்கத்தோடு எங்களுக்கு அவர் நன்றி கூறினார்.

இதேபோன்று கணபதி பகுதியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. தொடர்ந்து 2 நாட்களாக அவர் எனக்கு கைபேசியில் அழைத்து கொண்டே இருந்தார். அவரது அழைப்பை என்னால் ஏற்க முடியவில்லை. மூன்றாவது நாள் அவரிடம் பேசினேன். அப்போது, அவர் கூறிய வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது.

"நான் ஒரு தினக்கூலி பெயின்டர். வேலை இல்லாததால் நானும் எனது அம்மாவும் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் பசியில் தவித்து வருகிறோம். எங்களுக்கு இலவசமாக நீங்கள் உணவு தர வேண்டாம். எனக்கு தெரிந்த நபரின் தோட்டத்தில் கீரை வாங்க பேசியிருக்கிறேன். அதை வீடு வீடாக சென்று விற்பனை செய்து எங்களது உணவுத் தேவையை சமாளித்துக் கொள்வேன். ஆனால், அதற்கு ஒரு எடைக்கருவி தேவைப்படுகிறது. எனக்கு ஒரு எடைக்கருவி வாங்கித் தாருங்கள் கண்டிப்பாக அதற்கான தொகையை மீண்டும் திருப்பி கொடுத்து விடுகிறேன்" என அந்த பெயின்டர் கூறினார்.

குழுவினரின் உதவியோடு அவருக்கு எடைக்கருவி வாங்கித் தந்தோம். இதுபோன்ற உதவிகள் ஒருவித திருப்தியை நமக்கு அளிப்பவை.

தினமும் 100 பேருக்கு உணவு தயார் செய்து வழங்க ரூ.750/-ஐ நன்கொடையாக வழங்குங்கள் என சமூக வலைதளங்களில் உதவி கேட்டுள்ளோம். சிலர் முன்வந்து உதவி செய்கின்றனர். பொதுவாகவே, கோவை மக்கள் உதவும் குணம் உடையவர்கள். இன்னும் எத்தனை பெரிய பாதிப்புகள் வந்தாலும் எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்' என்கிறார் கமலேஷ்.

தெருநாய்களும் உயிர்களே

நாய்களுக்கு உணவு கொடுக்கும் மக்கள்

கொரோனா பாதிப்பால் மனிதர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் மற்றும் உணவு சார்ந்த உதவிகள் ஒருபுறமிருக்க, மனிதர்களை நம்பி வாழ்ந்து வரும் தெருநாய்கள் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வருகின்றன.

இதனைக் கண்ட கோவையைச் சேர்ந்த சுமதி, வீட்டு வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில், சுமார் 100 தெரு நாய்களுக்கு தினமும் உணவளித்து வருகிறார்.

'எனது கணவர் நான்கு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். நானும் எனது மகளும் ஒலம்பஸ் பகுதியில் வசித்து வருகிறோம். எனது மகள் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயன்ஸ் முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறாள். நான் வீட்டு வேலைகளுக்கு சென்று வருகிறேன்.

ஊரடங்குக்கு முன்பு வீட்டு வேலையோடு, ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் பாத்திரங்கள் கழுவி வந்தேன். நாளொன்றுக்கு சுமார் 200 லிருந்து 300 ரூபாய் வரை கிடைக்கும். கொரோனா காரணமாக வேலைக்காக வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. வீட்டு வேலைக்காக மட்டும் சிலர் அழைக்கின்றனர்.

இருந்தும் கையில் இருக்கும் பணத்தை வைத்தும், இலவசமாக அரிசிகளை வாங்கியும் நாய்களுக்கு உணவு அளித்து வருகிறேன். எனது கணவர் இறந்த பின்பு சொந்தங்கள் யாரும் எங்களுக்கு உதவவில்லை. அதனால் மனிதர்கள் மீதான நம்பிக்கை எனக்கு இல்லாமல் போனது. மனிதர்களை விட நாய்கள் மிகவும் நல்ல உயிரினம் என நான் கருதுகிறேன்' என்கிறார் சுமதி.

நாய்களுக்கு உணவு கொடுக்கும் மக்கள்

'ஹோட்டல் வாசலில் உணவுக்காக நாய்கள் காத்திருக்கும் காட்சியை பார்த்தால் எனக்கு அழுகை வந்துவிடும். உடனடியாக கையில் இருக்கும் பணத்தை கொடுத்து உணவு வாங்கி நாய்களுக்கு போடுவேன்.

அப்படி தொடங்கிய இந்த பழக்கம், தினமும் சுமார் 100 நாய்களுக்கு உணவு கொடுக்கும் தினசரி வேலையாகவே மாறிப்போனது. என்னை பார்த்ததும் அவை அன்போடு ஓடிவந்து என் கால்களை சுற்றி நின்று கொள்ளும்.

ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான உணவகங்கள் மூடப் பட்டிருப்பதாலும், இறைச்சிக் கடைகள் திறக்கப்படாததாலும் தெரு நாய்களுக்கு உணவு கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

நாய்களுக்கு உணவளிக்க தினமும் அதிகாலை எழுந்து சோறு வடித்து எடுத்து செல்வேன். கொண்டு செல்லும் உணவுகளை நாய்களுக்கு கொடுத்து விடுவேன். தன்னார்வலர்கள் இலவசமாக உணவு கொடுத்தால், அதை நான் வாங்கி சாப்பிட்டுக் கொள்வேன்.

வேலை முடிந்து மாலை வீடு திரும்பும் வரை ஏராளமான நாய்கள் அந்தந்த பகுதியில் என்னை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்காக குடியிருப்புவாசிகள் பலர் என்னை திட்டியுள்ளனர். நான் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதர்களை விட நாய்கள் உயர்ந்தவை என நான் கருதுகிறேன்.

பணத்தை சேர்த்து வைக்க வேண்டுமென எனக்கு என்றும் தோன்றியதில்லை. மகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து, திருமணம் முடிக்க வேண்டும். வருமானம் இல்லாததால் நான்கு மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. அதை எங்காவது வேலை செய்து வரும் பணத்தில் கொடுத்துவிடுவேன். எக்காரணம் கொண்டும் நாய்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்த மாட்டேன்' என்கிறார் சுமதி.

இவர்களைப் போன்ற ஏராளமானோர் பிரிவுகளைக் கடந்து கோவையில் சேவை செய்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் கோவையின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம், மனிதவளம் ஆகியவை பாதிப்படைந்துள்ள சூழலில், மனிதத்தோடு உதவி செய்து வரும் கோவை தன்னார்வலர்கள் வெகுஜன கவனர்த்தை ஈர்த்து வருகின்றனர்.

காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ்: உலகத்தையே உருக வைத்த ஒரு காதல் கதை Corona Love Story

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :