அ.தி.மு.கவில் அதிரடி; சசிகலாவுடன் பேசியோரை கட்சியிலிருந்து நீக்கிய ஓபிஎஸ், இபிஎஸ் - தமிழ்நாடு அரசியல்

பட மூலாதாரம், Getty Images
அ.தி.மு.கவின் சட்டமன்ற துணைத் தலைவராக ஒ. பன்னீர்செல்வம் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியோரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. பெங்களூர் புகழேந்தியும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.கவின் சட்டமன்றத் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்டுவிட்ட நிலையில், கட்சியின் சட்டமன்ற கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா யார் என்பது தேர்வுசெய்யப்படாமலேயே இருந்தது. சட்டமன்ற கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்க ஒ. பன்னீர்செல்வம் தயங்கியதாக கூறப்பட்ட நிலையில், அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
காலை 12 மணியளவில் கூட்டம் நடக்குமென அறிவிக்கப்பட்ட நிலையில், 12.15 மணியளவில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். கூட்டம் நடப்பதற்கு முன்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, முன்னாள் துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்பழகன் உள்ளிட்டோர் தனியாக ஆலோசனை செய்தனர்.
இதற்குப் பிறகு எம்.எல்.ஏக்களுடனான கூட்டம் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த கூட்டத்தின் முடிவில், எதிர்க் கட்சித் துணைத் தலைவராக ஒ. பன்னீர்செல்வம் தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கட்சிக் கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வுசெய்யப்பட்டார்.
துணைக் கொறடாவாக அரக்கோணம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் க. ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜுவும் செயலாளராக கே.பி. அன்பழகனும் துணைச் செயலாளராக பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது தவிர, இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா சமீப காலமாக அ.தி.மு.கவினருடன் பேசும் ஆடியோக்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து அந்த தீர்மானத்தில் விரிவாகப் பேசப்பட்டிருந்தது.
"சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த சசிகலா இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும் தொண்டர் பெரும்படையும் மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும் அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றிவருகிறார்.

பட மூலாதாரம், Twitter
அ.தி.மு.கவின் சட்டதிட்டங்களுக்கு மாறாகவும் இயக்கத்தின் லட்சியங்கலுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடந்த மே 23ஆம் தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் இழுக்கும் பழியும் தேடியவர்கள் அனைவரையும் கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவரும் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கழக மூத்த முன்னோடிகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு சிறிது நேரத்திற்குப் பிறகு, சசிகலாவுடன் பேசி ஆடியோ வெளியான முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே. சின்னச்சாமி, வேலூரைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எல்.கே.எம்.பி. வாசு உள்ளிட்ட 15 பேர் அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த வா. புகழேந்தியும் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அ.தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி குறித்து சில விமர்சனங்களை புகழேந்தி முன்வைத்திருந்தார். மேலும் தொலைக்காட்சி விவாதங்களில் அவர் தெரிவித்துவந்த சில கருத்துகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில், அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்.
இன்று அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்திருந்த புகழேந்தி, அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகிருக்கிறது.
பிற செய்திகள்:
- ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
- விஷால், ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த பணப்பிரச்னை - என்ன நடந்தது?
- பாதி நேரம் ஐடி வேலை, மீதி நேரம் சமூக சேவை: வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை
- யார் இந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்? இணையத்தில் தேடப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












