அதிமுக - பாஜக கூட்டணி: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3 மேயர் இடங்கள், 20% வார்டுகள் கேட்கும் பாஜக

பட மூலாதாரம், Aiadmk official
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அ.தி.மு.க, பா.ஜ.க இடையேயான இடப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. ''மூன்று மாநகராட்சி மேயர் இடங்கள் உள்பட 20 சதவீதமான வார்டுகளைக் கேட்டுள்ளோம். அ.தி.மு.க தரப்பில் குறைவான இடங்களை ஒதுக்கவே திட்டமிட்டுள்ளனர்,'' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிசகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கையானது பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள், தங்களின் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
அதிமுக - பாஜக பேச்சுவார்த்தை
குறிப்பாக, அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் தலைவர்கள், பா.ஜ.க மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், பி.எச்.பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பா.ஜ.க தரப்பில் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மேலிடப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.
இவ்விரு தரப்புக்கும் இடையே கடந்த 2 நாள்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில், வருவாய் மாவட்டவாரியாக தங்களுக்குச் சாதகமான பட்டியலை அ.தி.மு.க தரப்பிடம் பா.ஜ.க நிர்வாகிகள் அளித்துள்ளனர். இதனைப் படித்துப் பார்த்த அ.தி.மு.க நிர்வாகிகளோ, `குறைந்த அளவே இடங்களை ஒதுக்க முடியும்' எனக் கூறியதாகத் தகவல் வெளியானது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ''கூட்டணியில் அ.தி.மு.க பெரிய கட்சியாக உள்ளது. அதேநேரம், நகர்ப்புறங்களில் பா.ஜ.க வலிமையாக உள்ளது. அதைவைத்து எங்களுக்குச் சாதகமான இடங்களை ஒதுக்குமாறு கோரியுள்ளோம்' என்றோம். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ` தங்களுக்குச் சாதகமான இடங்களைக் கேட்பது அவர்களின் கடமை. அதனை ஏற்றுக்கொள்ளுவது என்பது எங்களின் முடிவு. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். கட்சியின் நலனைப் பொறுத்து இடப்பங்கீடு அமையும்'' என்றார்.
``பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது?'' என பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, `` அ.தி.மு.க தரப்பில் நாங்கள் கேட்ட இடங்களை ஒதுக்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். அவர்கள் சதவீதக் கணக்குகளில் பேசுகின்றனர். எங்களுக்குக் காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், மதுரை புறநகர், கன்னியாகுமரி என 15 மாவட்டங்களில் சாதகமான நிலைமைகள் உள்ளன.
இந்த மாவட்டங்களில் எல்லாம் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் பா.ஜ.கவினர் வெற்றி பெற்றுள்ளனர். இந்தக் குறிப்பிட்ட மாவட்டங்களில் சற்று அதிகமான இடங்களைக் கேட்கிறோம். அந்தவகையில் 13 மாவட்டங்களில் எங்கள் விருப்பம் அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் பா.ஜ.கவுக்கு சாதகமான வார்டுகளை ஒதுக்குங்கள் எனக் கூறிவிட்டோம். இது தொடர்பாக பட்டியலையும் கொடுத்துவிட்டோம். அவர்களோ பத்து சதவீத இடத்துக்குள்ளேயே கொடுக்க விரும்புகின்றனர்'' என்கிறார்.

பட மூலாதாரம், @BJP4TamilNadu twitter
மேலும், `` கோவை, வேலூர், நெல்லை, நாகர்கோவில் உள்பட நாங்கள் செல்வாக்காக உள்ள மாவட்டங்களில் 3 மாநகராட்சி மேயர் இடங்களைக் கேட்டுள்ளோம். இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிவிட்டு பதில் சொல்வதாக அ.தி.மு.க தரப்பில் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. ''
''சில மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு வரையில் நேர்காணல் நடந்தது. மதுரை புறநகர், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பா.ஜ.க சார்பில் போட்டியிட ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அ.தி.மு.க உடனான பேச்சுவார்த்தை முடிவுற்ற பிறகு வேட்பாளர்கள் தொடர்பான விரைவில் அறிவிப்பு வெளியாகும் என நினைக்கிறோம்'' என்கிறார்.
``பேச்சுவார்த்தை எப்போது முடிவுக்கு வரும்?'' என தமிழ்நாடு பா.ஜ.க சமூக ஊடகப் பிரிவின் தலைவர் சி.டி.நிர்மல்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` அ.தி.மு.க அணியில் எவ்வளவு சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக விரைவில் மாநிலத் தலைவர் அறிவிப்பார். எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களும் தெரிந்துவிடும். தற்போது வரையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பிலும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது'' என்கிறார்.

இதையடுத்து, அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எங்களால் எவ்வளவு ஒதுக்க முடியும் என்பதை எங்கள் கட்சியின் தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். அவர்கள் தரப்பில் பா.ஜ.கவில் மாநிலத் தலைவர் எதையும் முடிவு செய்ய முடியாது. அவர் மேலிடத்தில் ஒப்புதல் பெற்ற பிறகே தெரிவிக்க முடியும்.
இதையடுத்து, தலைமையின் ஒப்புதலைப் பெறுவதற்காக அவர்கள் அனுப்பியுள்ளனர். இதன்பிறகு அவர்கள் கேட்கும் இடங்களை ஒதுக்குவதில் அ.தி.மு.க தலைமைக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கும் திருப்தியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அப்படி ஒரு முடிவைத்தான் நாங்கள் எடுக்க முடியும். அதன்பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். விரைவில் அறிவிப்பு வெளியாகிவிடும்'' என்கிறார்.
``மேயர் இடங்களை பா.ஜ.க கேட்பதில் அ.தி.மு.கவின் நிலைப்பாடு என்ன?'' என்றோம். `` அவர்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். எங்களுடைய பலம், மாவட்ட நிர்வாகிகளின் நிலைப்பாடு ஆகியவற்றை முன்வைத்துத்தான் முடிவு செய்வோம்'' என்றார்.
பிற செய்திகள்:
- லாக்டவுன் காலத்தில் அறிவியல் சாதனை: 203 கடல்வாழ் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்த மாணவர்கள்
- அமெரிக்காவில் புரட்டி எடுக்கும் பனிப்பொழிவு: 'வெடிகுண்டு பனிப்புயல்' வரும் என எச்சரிக்கை
- பசுவின் முன்னால் சிறுநீர் கழித்ததாக இளைஞர் மீது தாக்குதல்
- காந்தியை எரித்த சாம்பல் அவர் விருப்பத்துக்கு மாறாக அமெரிக்க ஆன்மிக மையத்தில் இருக்கிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












