லாக்டவுன் காலத்தில் அறிவியல் சாதனை: 203 கடல்வாழ் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்த மாணவர்கள்
- எழுதியவர், க.சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
சில விஷயங்களை முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, அதன் மீது ஆர்வமே இல்லாமல் இருக்கும். அதையே தெரிந்துகொள்ளத் தொடங்கும்போது, அதற்காக வாழ்வையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதீத ஆர்வம் எழும். அத்தகைய ஆர்வம் சில நேரங்களில் நம்மைச் சாதிக்கவும் வைக்கும்.
அப்படிச் சாதித்தவர்கள்தான் கடல் உயிரியல் துறையில் பட்டமேற்படிப்பு மாணவர்களான ஆஷிஸ் அஸ்வின் குமார் மற்றும் வினிதா. இருவரும் பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல் உயிரியல் உயர் ஆய்வு மையத்தில் கடல் உயிரியல் துறையில் முதுநிலை பயின்று வருகிறார்கள்.
உயிரியல் மாணவர்கள் மத்தியிலேயேகூட ஒரு சாரார், நுண்ணுயிரிகள் பாடம் என்றால் கொஞ்சம் வறட்சியாகத்தான் உணர்வார்கள். அதில் பெரிய அளவிலான ஆர்வம் பலருக்கும் எழுவதில்லை. அத்தகைய ஒரு மாணவராகவே முதலில் ஆஷிஸ் இருந்தார்.
ஆனால், ஓர் இரவு அவருடைய வாழ்வையே புரட்டிப் போட்டது. எந்தத் துறையின் மீது ஆர்வமே இல்லாமல் இருந்தாரோ, அந்தத் துறையில் இந்திய அளவிலான மைல் கல்லைப் பதித்து சாதனை படைத்தார்கள் ஆஷிஸ், சக மாணவி வினிதா ஆகிய இருவரும்.
"எனக்கு சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். தினமும் சைக்கிளில் ராக் பீச்சிற்கு செல்வேன். அப்படி ஓர் இரவு 8 மணிக்கு அங்குச் சென்றிருந்தபோது, கடற்கரையில் அடித்துக் கொண்டிருந்த அலை நீல நிறத்தில் மின்னியது. பார்த்தவுடனே அது ப்ளாங்டன் (Plankton) என்ற நுண்ணுயிரிகள் உருவாக்கும் உயிரி ஒளிர்வு (Bioluminescence) என்று தெரிந்துவிட்டது.
அந்த நீரின் மாதிரியை எடுத்து வந்து விரிவாகப் பார்க்க வேண்டுமென்று ஆசையாக இருந்து. ஆனால், ராக் பீச்சில் அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததும் கரையில் பாறைகள் இருந்ததும் நீர் மாதிரி சேகரிப்பதை சிரமமாக்கியது.
அதனால், அங்கிருந்து நேராக செரினிட்டி கடற்கரைக்குச் சென்று, இரவு 9:30 மணியளவில் நீர் மாதிரியைச் சேகரித்தேன்," என்றவருக்கு அந்த நுண்ணுயிரிகளை இன்னும் தெளிவாகப் பார்க்க வேண்டுமென்று ஆர்வம் பொங்கியது. ஆனால் அவரிடம் நுண்ணோக்கி இருக்கவில்லை. அதனால், உடனடியாக வீட்டிலேயே ஒரு நுண்ணோக்கியை (Mircoscope) உருவாக்கினார்.

"பள்ளியில் உடைந்துபோன நுண்ணோக்கிகளை பிரித்துப் போட்டு வைத்திருந்தார்கள். 10-ம் வகுப்பு முடிந்தபோது, பள்ளியின் நினைவாக அதிலிருந்து சில லென்ஸ்களை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அப்போதே காணொளிகளில் பார்த்து, நுண்ணோக்கியில் லென்ஸ் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன்.
எவ்வளவு தூரத்தில் எப்படி லென்ஸ்களை வைக்கவேண்டும் என்று ஆராய்ந்து, தூரத்தை மாற்றி மாற்றி வைத்துப் பார்த்தேன். ஒரு கட்டத்தில் அவை துல்லியமாகத் தெரியவே, அந்த தூரத்திலேயே, உடற்பயிற்சிக்காக வைத்திருந்த தம்பெல்களின் அச்சாணிப் பகுதியில் அவற்றைப் பொருத்தி நுண்ணோக்கியை உருவாக்கினேன்.
பிறகு, ஸ்மார்ட்ஃபோன் கேமராவின் உதவியோடு பலகட்ட முயற்சிகளுக்குப் பின்னர், அவற்றை மிகத் துல்லியமாக ஒளிப்படமாகவும் பதிவு செய்தேன்.
அன்று எடுத்த முயற்சிகளும் அதற்குக் கிடைத்த பலனும் எனக்கே பிரமிப்பாக இருந்தது. அந்த ஆர்வத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து நுண்ணுயிரிகளைச் சேகரித்து ஆராயத் தொடங்கினேன்," என்கிறார் ஆஷிஸ்.
பிறகு, அவரே வீட்டில் நுண்ணுயிரிகளை வளர்க்கத் தொடங்கினார். "எந்தவொரு நீரிலும் நுண்ணுயிரிகள் இருக்கும். அதிலும் ஓர் உணவுச் சங்கிலி இருக்கிறது. பாக்டீரியாவை சீலியேட்கள் சாப்பிடும். மயிரிழை மேற்தோல் கொண்ட அந்த நுண்ணுயிரிகளை, ஆம்ஃபிபாட், கோபிபாட் போன்ற கணுக்காலி நுண்ணுயிரிகள் சாப்பிடும்.
ஆக, இந்த உயிரினங்கள் நான் வைத்திருக்கும் இடத்தில் வாழ்வதற்கு, பாக்டீரியா இருக்கவேண்டும். அதனால் முதலில் பாக்டீரியாவை வளர்க்க முடிவு செய்தேன். அதற்கு முதல்கட்டமாக, நான் எடுத்துவந்த தண்ணீரைச் சில நாட்கள் எதுவுமே செய்யாமல் அப்படியே வைத்துவிட்டேன். ஏனெனில், ஏற்கெனவே உள்ள உயிரி பொருட்களை வைத்து அவையே எண்ணிக்கையில் பெருகிவிடும்.
ஃபோல்ட்ஸ்கோப் என்ற சிறிய நுண்ணோக்கியில், இரண்டு சொட்டு நீரை வைத்து ஆராய்ந்து பார்த்தேன். இரண்டே சொட்டு நீரில் அவ்வளவு நுண்ணுயிரிகள்.
15-வது மாடியில் நின்று ஒரு நகரத்தின் மையத்திலுள்ள சாலையைப் பார்த்தால் வாகனங்கள் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாகச் செல்லும் அல்லவா, அதைப் போல நெருக்கடியடித்துக்கொண்டு அவ்வளவு நுண்ணுயிரிகள். ஒரு குட்டி நகரத்தையே அந்த இரண்டு சொட்டுகளில் பார்த்தேன்," என்று அந்த அனுபவத்தின் பிரமிப்பு குரலில் எதிரொலிக்கப் பேசினார் ஆஷிஸ்.

பட மூலாதாரம், Ashish Aswin Kumar
இவ்வளவு உயிரினங்களின் பெயர், உயிரியல் குடும்பம் அனைத்தையும் அடையாளம் காண்பதற்கு சக மாணவியான வினிதாவின் உதவியை நாடினார் அவர். இருவருமாகச் சேர்ந்து அந்த நுண்ணுயிரிகளைப் பற்றி விரிவாக ஆராயத் தொடங்கினார்கள்.
2020-ம் ஆண்டு ஊரடங்கின்போது தொடங்கியது இந்த முயற்சி. அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் வரை நன்னீர் வாழ் நுண்ணுயிரிகளைச் சேகரித்து அவற்றைப் பகுப்பாய்வு செய்துகொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் கடல்வாழ் நுண்ணுயிரிகளையும் பார்க்கவேண்டும் என்று ஆர்வம் எழவே, அதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்குகிறார்கள்.
"நன்னீர் குளங்கள், வெள்ளார் கழிமுகம், கடல்நீர் என்று பல இடங்களில் இருந்து சேகரித்துக் கொண்டு வந்த நுண்ணுயிரிகளை வீட்டிலேயே வளர்க்க முடிவெடுத்தேன். மனிதர்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளைப் போலவே, அவற்றுக்கும் உயிர்பிழைத்திருக்க ஊட்டச்சத்துகள் தேவை. அதனால், முட்டையின் மஞ்சள் கருவைப் பொடியாக்கி அவற்றுக்குத் தூவிவிடுவேன். அதைப் போல, வெங்காயம், தக்காளி போன்றவற்றின் கழிவுகளை மிகவும் நுண்ணிய அளவில் கொடுப்பேன்.
இந்த முயற்சியின் தொடக்கத்தில் பல நுண்ணுயிரிகள் மேற்கொண்டு வளர்வதோ பெருகுவதோ இன்றி செத்துப்போயின. தப்பும் தவறுமாகச் செய்து, பாடம் கற்று, சரியாகச் செய்யத் தொடங்கினேன். அதற்குப் பலனும் கிடைக்கத் தொடங்கியது.
இப்படியே நுண்ணுயிரிகளைச் சேகரிப்பது, வளர்ப்பது அவற்றை வினிதாவின் உதவியோடு அடையாளம் காண்பது என்று சென்றுகொண்டிருந்தது. 2021 ஜனவரி மாதத்தில் கல்லூரிக்குச் சென்றபோது ஒருமுறை எங்கள் இணை பேராசிரியரிடம் இதுகுறித்து நானும் வினிதாவும் பேசினோம்," என்கிறார். இருவருடைய முயற்சிகளையும் பார்த்து வியந்துபோன பேராசிரியர், ஏற்கெனவே 2019-ம் ஆண்டு முதல் அவர் மேற்கொண்டு வந்த ஓர் ஆய்வில் ஆஷிஸ் மற்றும் வினிதாவை பங்கெடுக்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார்.
அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல் உயிரியல் உயர் ஆய்வு மையத்தின் இணை பேராசிரியர் முனைவர்.அ.சரவணகுமார் இதுகுறித்துப் பேசியபோது, "2019-ம் ஆண்டு இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியா முழுக்கவுள்ள பல்கலைக்கழகங்களுக்கும் ஆய்வு மையங்களுக்கும், இந்தியாவில் இதுவரை தெரியவராத கடல்வாழ் நுண்ணுயிரிகளை அடையாளப்படுத்தும் ஆய்வை மேற்கொள்ளுமாறு கூறியது.
இதுவரை யாரும் அதிகமாக ஆய்வு செய்திராத பல வகையான நுண்ணுயிரிகளை ஆய்வு செய்யுமாறு அது கேட்டுக்கொண்டது. அதில் சீலியேட்ஸ் எனப்படும் மயிரிழை மேற்தோல் கொண்ட உயிரின வகைப்பாட்டில் கடல்வாழ் வகைகளை ஆய்வு செய்வதற்கு நான் அனுமதி வாங்கியிருந்தேன். ஆஷிஸ் மற்றும் வினிதாவுக்கு இவற்றின் மீதுள்ள அதீத ஆர்வத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் தெரிந்துகொண்டதால், அவர்களை இந்த ஆய்வில் ஈடுபடுத்தினேன்," என்று கூறுகிறார்.

"உடலின் மேற்புறத்தில் மயிரிழைகளைக் கொண்ட ஒற்றை செல் உயிரினங்கள், சீலியேட்ஸ் என்ற வகைப்பாட்டில் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை ஆய்வு செய்யும் வாய்ப்பு இணை பேராசிரியரின் வழியாக எங்கள் இருவருக்கும் கிடைத்தது," என்கிறார் வினிதா.
அவர்கள் இந்த ஆய்வுக்கு முன்பு விளையாட்டாக கடல்வாழ் நுண்ணுயிரிகளை வளர்த்து ஆய்வு செய்தபோது, பெரிய அளவில் சிரமமாக இருக்கவில்லை. ஆனால், ஆய்வுக்காக அதை முன்னெடுக்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டார்கள்.
"ஆரம்பத்தில், சேகரிக்கப்படும் நுண்ணுயிரிகள் தாக்குப்பிடிக்காமல் இறந்துகொண்டேயிருந்தன. அவற்றை வளர்த்து, எண்ணிக்கையைப் பெருக்க முடியவில்லை. பல நாட்களாகப் போராடியும் நுண்ணுயிரிகளை வளர்க்கவே முடியவில்லை.
இரண்டு மாதங்களாக பல்வேறு இடங்களிலிருந்து நீர் மாதிரிகளில் பல வகை நுண்ணுயிரிகளை எடுத்து வந்து, பல்வேறு உணவுகளையும் கொடுத்து வளர்த்துப் பார்த்தோம். ஆனால், எதிலுமே அவற்றை வளர்க்கும் முயற்சி வெற்றியடையவில்லை.
பிப்ரவரி மாத இறுதியில்தான் நாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதே புரிந்தது. ஒற்றை செல் உயிரிகள் மிகவும் மென்மையானவை. வெளித் தூண்டுதல் ஏதேனும் ஏற்பட்டாலோ, அவை இருக்கும் சூழலின் தன்மை மாறுபட்டாலோ, அவற்றைச் சுற்றி ஒரு மெல்லிய போர்வை போர்த்தியதைப் போல தோல் மூலம் மூடியவாறு, அசைவின்றி அப்படியே கிடந்து, தன்னை தற்காத்துக்கொள்ளும்.
அவை அப்படியிருக்கும்போது, எந்த வகையான நுண்ணுயிரி, உயிரோடு இருக்கும் நுண்ணுயிரிதானா என்று எதுவுமே தெரியாது. அப்படி அடையாளம் காணமுடியாமல் போனதும் முந்தைய தோல்விகளுக்கு ஒரு காரணம். இந்த நுணுக்கத்தைப் புரிந்துகொண்ட பிறகு, நாங்கள் வைத்திருக்கும் சூழலைப் பாதுகாப்பானதாக உணர்ந்து அவை அந்தப் போர்வையிலிருந்து வெளிவரும் வரை காத்திருக்க முடிவு செய்தோம்," என்கிறார் வினிதா.
அவரைத் தொடர்ந்து பேசிய ஆஷிஸ், "நுண்ணுயிரிகள் அடங்கிய நீர் மாதிரிகளைச் சேகரிக்கும் அன்றே அவற்றின்மீது கவனத்தைக் குவிக்காமல், குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்காவது அப்படியே தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவோம். அந்த இடைப்பட்ட நேரத்தில் அவையும் போர்வை போன்ற மேல்தோலை அகற்றிவிட்டு, அசல் உடலமைப்போடு தனது வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்கும்.
அவை வாழும் நீரின் தரத்தை மிகவும் கவனமாகப் பார்க்கவேண்டும். நீரின் தரமும் சூழலும் மாறுபடும்போது, அந்த மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் இதுபோன்ற தற்காப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றன.

பட மூலாதாரம், Ashish Aswin Kumar
அதிலிருந்து வெளியேறி சுதந்திரமாக இயங்கத் தொடங்கிய பிறகு, நாங்கள் அவற்றுக்கு உணவளித்து எண்ணிக்கையைப் பெருக்க முயன்றோம். இந்தமுறை சிறிது சிறிதாக அவை பெருகத் தொடங்கின. அந்தத் திருப்புமுனைதான், எங்களுடைய வேகத்தையே கூட்டியது.
நுண்ணுயிரிகளை வளர்ப்பதில் என்ன மாதிரியான உணவுகளைக் கொடுக்கவேண்டும், எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பனவற்றை முழுமையாகக் கற்று, அவற்றை வளர்த்து வகைப்படுத்தத் தொடங்கினோம்," என்று கூறினார்.
"பொதுவாக, ஒரு நுண்ணுயிரியை எடுத்து, அதைத் தனியாக ஓரிடத்தில் வைத்து வளர்த்து ஆய்வு செய்வார்கள். ஆனால், நாங்கள் அவற்றை மொத்தமாக வளர்த்து பிறகு ஒவ்வொன்றாக வகைப்படுத்தி, மயிரிழை மேற்தோல் கொண்ட நுண்ணுயிரி குடும்பத்தைச் சேர்ந்த 203 வகைகளைப் பதிவு செய்தோம்," என்று கூறுகிறார் வினிதா.
மேலும், "கடல்வாழ் நுண்ணுயிரிகளை வகைப்படுத்துவதை, 2008-ம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கலாவதி இதற்கு முன்பு செய்துள்ளார். அதற்குப் பிறகு, அதிக அளவிலான கடல்வாழ் மயிரிழை மேற்தோல் நுண்ணுயிரிகளை வகைப்படுத்தியுள்ளது இதுதான் முதல்முறை," என்றும் கூறுகிறார்.
இந்த ஆய்வு குறித்துப் பேசிய முனைவர்.அ.சரவணகுமார், "நன்னீரில் வாழும் மயிரிழை நுண்ணுயிரிகளை இதுபோல் வளர்த்து ஆய்வு செய்துள்ளார்கள். ஆனால், கடல்நீரில் வாழ்வனவற்றை இந்தியாவில் பெரிய அளவில் செய்ததில்லை.
இந்நிலையில் தான், கடல்நீர் வாழ் மயிரிழை மேற்தோல் நுண்ணுயிரிகளை 2019-ம் ஆண்டில் ஆய்வு செய்யத் தொடங்கினேன். அப்போது ஓராண்டில் 25 வகைகளை மட்டுமே வகைப்படுத்த முடிந்தது. அவற்றைப் பராமரித்து, வளர்ப்பதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்து கொண்டிருந்தன. அவற்றை நுண்ணோக்கியில் வைக்கும்போது, நிலவும் வெப்பத்திலேயே சில நொடிகளில் வெடித்து இறந்துவிடும்.
இதற்கிடையில் ஆஷிஸ், வினிதா இருவரையும் இந்த ஆய்வில் இணைத்துக்கொண்டு, அவர்களிடம் மயிரிழை நுண்ணுயிரிகளை வகைப்படுத்துமாறு கூறினேன். இருவருமாகச் சேர்ந்து, 203 வகைகளைக் கண்டறிந்து, அவற்றின் வரைபடங்கள் மற்றும் ஒளிப்பட ஆதாரங்களோடு, அவை சாப்பிடும் உணவு, உருவ அமைப்பு என்று அனைத்தையும் பதிவு செய்தார்கள். கடல்நீர் நுண்ணுயிரிகளில் இவ்வளவு வகைகளைக் கண்டறிந்து வகைப்படுத்தியது இதுவே முதல்முறை.
இதை என்விஸ் (ENVIS) எனப்படும் சுற்றுச்சூழல் மையத்தின் வழியே, நூலாக வெளியிடுவதற்குக் காத்திருக்கிறோம். இந்தப் பணி, கோவிட் பேரிடரால் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. விரைவில் அது வெளியானவுடன், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பிப்போம்.
பரங்கிப்பேட்டையில் மட்டுமே வகைப்படுத்தப்பட்டுள்ள, இந்த 203 வகைகளில் 150-க்கும் மேற்பட்ட வகைகள் இதுவரை அறியப்படாதவையாக இருக்கின்றன. அவற்றில் பலவும் இந்தியாவில் புதிதாகப் பதிவு செய்யப்பட்டவையாக இருக்கலாம், சில அறிவியல் உலகுக்கே புதியனவாக இருக்கலாம். அத்தகைய தகவல்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள மேலும் சில ஆண்டுகளுக்கு ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது," என்று கூறினார்.
அந்த ஆராய்ச்சியை முழுவீச்சில் மேற்கொண்டு முன்னெடுக்க ஆஷிஸ், வினிதா இருவரும் தயாராக இருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
- பதற்றத்தை உருவாக்காதீர்கள்: மேற்கு நாடுகளை கேட்கும் யுக்ரேன் அதிபர்
- அவதூறுகள் மூலம் பாலிவுட் மீது வெறுப்பை கக்கும் யூ-டியூபர்கள்: பிபிசி ஆய்வு செய்தி
- பறக்கும் கணினியான F35C போர் விமானத்தை மீட்க அமெரிக்கா, சீனா மல்லுக்கட்டுவது ஏன்?
- கனடா எல்லையில் குஜராத்திகள் இறந்தது எப்படி? போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்
- கடல் சுமந்த சிறுமியின் கடிதம்: 8 வயதில் மிதக்க விட்டு 25இல் கண்டுபிடித்த அதிசயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













