கடல் சுமந்த சிறுமியின் கடிதம்: 8 வயதில் மிதக்க விட்டு 25இல் கண்டுபிடித்த அதிசயம்

பட மூலாதாரம், BUCHAN FAMILY
பிரிட்டனின் ஓர் அங்கமான ஸ்காட்லாந்து நாட்டில் அபெர்டீன்ஷயர் என்ற பகுதியில், கண்ணாடி குப்பியில் அடைத்து ஒரு சிறுமி அனுப்பிய கடிதம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டில் பீட்டர்ஹெட் என்ற நகரில் வசிக்கும் ஜோனா பக்கனுக்கு வயது எட்டு. அவர் படிக்கும் பள்ளியில் அளிக்கப்பட்ட ப்ராஜெட் பணிக்காக, ஒரு மீன்பிடி படகில் இருந்து, ஒரு கண்ணாடி குப்பியில் தான் எழுதிய கடிதம் ஒன்றை வைத்து கடலில் விட்டார்.
இது 1,287 கி.மீ தொலைவில் வடக்கு நார்வேயில் உள்ள காஸ்வேர் என்ற இடத்தில், எலினா ஆண்ட்ரியாசென் ஹாகா என்பவரால் அது கண்டுபிடிக்கப்பட்டது. ஜோனாவை சமூக ஊடகங்களில் ஹாகா கண்டுபிடித்தார்.
அந்த பள்ளி மாணவியின் கடிதத்தில், தனக்கு இனிப்புகள் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், எதிர் பாலினம் மீது அவருக்கு வெறுப்பு இருப்பதும் அதில் தெரிந்தது. "நான் சிறுவர்களை வெறுக்கிறேன்," இப்படி முடிகிறது அந்த கடிதம்.
"கண்டுபிடிப்பவருக்கு" என்று நேர்த்தியாக கையால் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், தனது செல்ல நாய், பள்ளித் திட்டங்கள் மற்றும் ப்ளூ டாக் (நீல வண்ண ஒட்டுப்பசை) சேகரிப்பதில் உள்ள தனது விருப்பத்தையும் ஜோனா விவரிக்கிறார்.
37 வயதான எலெனா என்பவர், 2020ஆம் ஆண்டு கோடைக்காலத்தில், பச்சை பாட்டில் ஒன்றை கண்டுபிடித்ததாகவும், உள்ளே ஏதோ இருப்பதை உடனடியாக அவரால் பார்க்க முடிந்தது என்றும் பிபிசி ஸ்காட்லாந்திடம் கூறினார்.

"நாங்கள் அதைத் திறந்தோம். நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், அந்த கடிதம் சில காலம் தண்ணீரில் இருந்திருக்கலாம். ஆனால், எங்களால் அதை பிரித்து படிக்க முடிந்தது. இது உண்மையில் ஸ்காட்லாந்தில் இருந்து வந்தது,. அதனால், அது மகிழ்ச்சியாக இருந்தது," என்று அவர் கூறினார்
"நாங்கள் இந்த குப்பியைக் கண்டுபிடித்தபோது, எனது மகன் எலியாவுக்கு ஆறு வயது. அவனுக்கு முதலில் இதுகுறித்து சரியாகப் புரியவில்லை என்று நான் நினைக்கிறேன். இது பழங்கால வழக்கம்" என்கிறார் அவர்.
இவர் ஜோனாவுக்கு ஃபேஸ்புக்கில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், பீட்டர்ஹெட் பள்ளியின் முன்னாள் மாணவி, சென்ற திங்கள்கிழமை வரை அதை பார்க்கவில்லை.
"எனது தந்தைக்கு ஐந்து வயதாக இருந்தபோது ஒரு கண்ணாடி குப்பியில் ஒரு கடிதத்தைக் கண்டுபிடித்தார். அவருக்கு இப்போது 66 வயதாகிறது," என்றார் எலெனா.
"இங்கு கரையில் பொருட்கள் வந்தடைவது வழக்கமான ஒன்று. ஆனால், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாங்கள் அடிக்கடி கண்டுபிடிப்பதில்லை."

பட மூலாதாரம், Elena Andreassen Haga
ஜோனாவுக்கு இப்போது 34 வயது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் என்ற இடத்தில், மருத்துவராக உள்ளார்.
ஃபேஸ்புக் மெசஞ்சரின் செய்தி கோரிக்கைகள் பிரிவை பார்த்துக்கொண்டிருக்கும் போது, 2020ஆம் ஆண்டிலிருந்து எலெனாவிடமிருந்து "ஒரு செய்தி" கிடைத்ததாக அவர் கூறினார்.
பீட்டர்ஹெட் மத்திய பள்ளியில், நாங்கள் 1996ஆம் ஆண்டு பீட்டர்ஹெட்டில் இருந்து அனுப்பிய ஒரு கண்ணாடி குப்பியில், அடைத்த கடிதம் பற்றி கொஞ்சம் நினைவில் வைத்திருக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Joanna Buchan
'அது என்னுடைய கையெழுத்துதான் என்று மகிழ்ச்சி அடைந்தேன்"
அந்தக் கடிதத்தில் அவரது "பெரிய வீடு" மற்றும் கரடி பொம்மைகள் மீதான அவரது ஈர்ப்பு பற்றிய விவரங்கள் இருந்தன.
"நான் அதைப் படிக்கும்போது நான் மிகவும் சிரித்துக்கொண்டே இருந்தேன் ," என்று அவர் கூறினார்.
"அந்த நேரத்தில் எனக்கு முக்கியமானதாக விளங்கும் சில அழகான வரிகள் அதில் இருந்தன. அந்த யோசனையைக் கூறிய அப்போதைய ஆசிரியர்களிடம் இதை கூற விரும்புகிறேன்."
பிற செய்திகள்:
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்? - அடிப்படை தகவல்கள்
- கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- 'கடவுள் என் ப்ராவை அளவெடுக்கிறார்' - நடிகை மீது விசாரணைக்கு உத்தரவிட்ட பாஜக அமைச்சர்
- 'பிக்பாஸ்' அர்ச்சனா: "நாங்கள் பிரபலங்கள் மட்டுமே; பொதுச்சொத்து கிடையாது"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












