டோங்கா எரிமலை வெடிப்பு: துண்டான இணைய கேபிளை சரி செய்வதில் என்ன சிக்கல்? இணைக்கும் கப்பல் எங்கே?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜேன் வேக்ஃபீல்ட்
- பதவி, தொழில்நுட்பச் செய்தியாளர்
டோங்காவை உலகின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் கடலுக்கடியில் உள்ள ஃபைபர்-ஆப்டிக் கேபிள் ஒன்று சமீபத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் போது துண்டானது.
தெற்கு பசிபிக் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள 49,889 கிலோமீட்டர் நீளமுள்ள இணைய கேபிள்களில் ஏற்பட்டுள்ள துண்டிப்புகள், பிரச்சனைகளை சரி செய்ய, ஒரு மாத காலத்துக்கு மேல் ஆகலாம் என நியூசிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக, டோங்காவின் 1,10,000 மக்கள் அதிவேக இணைய சேவையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு பசிபிக் பல்கலைக்கழகத்தின் செயற்கைக்கோள் டிஷ் உதவியோடு, டோங்கா பிரதான தீவில் 2ஜி வயர்லெஸ் இணைப்பு சேவை மட்டும் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ளது. ஆனால் 2ஜி சேவை சீராக இல்லை மற்றும் இணைய சேவைகளும் வேகமாக இல்லை என புகார்கள் எழுந்து வருகின்றன.
கேபிள் எப்படி சரி செய்யப்படும்?
டோங்கா கேபிள் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் இணைய கேபிள், கடற்கரையிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் துண்டிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
எரிமலை வெடிப்புக்குப் பிறகு, நிறுவனம் நடத்திய சோதனையில் ஒரு கேபிள் துண்டிப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
இணைய கேபிள் துண்டிப்பைச் சரி செய்யும் நடைமுறை உண்மையில் மிகவும் எளிமையானது என்கிறார் யூரோப்பியன் சப்சீ கேபிள் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் வெர்ஜின் மீடியாவின் முதன்மை பொறியாளரான பீட்டர் ஜேமிசன்.
"அவர்கள் தீவிலிருந்து ஒளிக்கற்றையை அனுப்புவார்கள், ஓர் எந்திரம் அது பயணிக்க எவ்வளவு நேரமாகிறது என்பதைக் கணக்கிடும், இது துண்டிக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து உறுதி செய்யும்" என்று அவர் விளக்கினார்.
பின்னர் ஒரு கேபிள் பழுதுபார்க்கும் கப்பல் துண்டிக்கப்பட்ட முதல் இடத்திற்கு அனுப்பப்படும். தொலைதூரத்தில் இருந்து நீருக்கடியில் இயக்கப்படும் வாகனம் அல்லது கிராப்னல் (அடிப்படையில் ஒரு சங்கிலியில் இருக்கும் கொக்கியைக் கொண்ட எந்திரம்) என்றழைக்கப்படும் கருவியைப் பயன்படுத்தி துண்டிக்கப்பட்ட முனை மீட்டெடுக்கப்படும்.
பிறகு படகில் உள்ள புதிய கேபிளுடன் மீண்டும் இணைக்கப்படும், அதே செயல்முறையில் துண்டிக்கப்பட்ட மறுமுனையிலும் மேற்கொள்ளப்படும். எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால், முழு செயல்முறையும் ஐந்து முதல் ஏழு நாட்களில் செய்து முடிக்கப்படலாம்.
ஏன் அதிக காலம் ஆகலாம்?

பட மூலாதாரம், Getty Images
டோங்கா தீவுக்கூட்டத்திற்கு கேபிள் பழுதுபார்க்கும் கப்பலைக் கொண்டு வருவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. காரணம், இணைய கேபிளை சரிசெய்யும் திறன் கொண்ட கப்பல்களில், டோங்கா தீவுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு கப்பல் என்பது, கிட்டத்தட்ட 4,700 கிலோமீட்டர் தொலைவில், பபுவா நியூ கினியா நாட்டில், மோர்ஸ்பை துறைமுகத்தில் உள்ளது.
சிறப்புத் திறன் கொண்ட 'தி ரிலையன்ஸ்' என்கிற கப்பல் தெற்கு பசிபிக் பகுதியில் 50,000 கிலோமீட்டர் தொலைவுக்கு கேபிள் சேவையை வழங்குகிறது.
அந்தப் பகுதியில் கப்பல் செல்வதற்கும், பணியாளர்கள் பயணிப்பதும் பாதுகாப்பானது என்பதையும், மேற்கொண்டு எரிமலைகள் வெடிக்க வாய்ப்பில்லை என்பதையும் நிபுணர்கள் மதிப்பீடு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த கேபிள்கள் அடிக்கடி உடைகிறதா?
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் இணைய கேபிள்களில் 200 பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால், இயற்கை பேரிடர்களால் இணைய கேபிள்கள் பாதிக்கப்படுவது அரிது. 90 சதவீத இணைய கேபிள் துண்டிப்புகள் அல்லது பிரச்சனைகள் மீன்பிடி படகுகளின் வலைகள் அல்லது நங்கூரங்களால் ஏற்படுகின்றன.
இணைய கேபிள்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் உள்ள படகுகள் குறித்து ஆபரேட்டர்களுக்குத் தெரிவிக்க, கண்காணிப்பு தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது, இதனால் அவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு எச்சரிக்க முடியும்.
டேட்டா கேபிள்கள் கண்ணாடி இழைகளால் ஆன ஃபைபர் - ஆப்டிக் இழைகளால் உருவாக்கப்பட்டவை, ஆனால் கேபிளின் பெருமளவு தடிமன், அக்கண்ணாடி இழைகளுக்கு பாதுகாப்பளிப்பதற்காகவே இருக்கின்றன.
நிலப்பரப்பின் மீது பதிக்கப்படும் கேபிள்கள் ஒன்று முதல் இரண்டு மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட வேண்டும். ஆனால், கடலுக்கு அடியில் பதிக்கப்படும் கேபிள்கள், பெரிதாக பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், கடலுக்கடியில் உள்ள நிலப் பரப்பின் மீது வெறுமனே பதிக்கப்படுகின்றன, குழி தோண்டி புதைக்கப்படுவது இல்லை.
இயற்கை பேரழிவுகள் விதிவிலக்கானவை, உதாரணம் டோங்காவில் நடந்த கேபிள் துண்டிப்பு. இதே போல 2006 ஆம் ஆண்டில், தைவான் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒரு கேபிள் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் இணையம் மற்றும் சர்வதேச தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்த கேபிள்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை?

பட மூலாதாரம், TELEGEOGRAPHY
மேற்கத்திய நாடுகளில், ஒரு கேபிள் துண்டிக்கப்பட்டால் அது ஒரு பெரிய பிரச்சனையல்ல, ஏனென்றால் அப்பகுதிகளில் இன்னும் பல கேபிள்கள் உள்ளன. உதாரணமாக, பிரிட்டன் நாட்டுக்கு சுமார் 50 கேபிள்கள் அந்நாட்டுக்குத் தேவையான தரவு சேவைகளை வழங்குகின்றன.
டோங்காவில், ஒன்று மட்டுமே இருந்தது. "பொதுவாக குறைந்தது இரண்டு கேபிள்களாவது வைத்திருக்க வேண்டும்" என ஜேமிசன் கூறுகிறார். "ஆனால் அக்கேபிள்கள் விலை உயர்ந்தவை. ஃபேஸ்புக், கூகுள் அல்லது யாருக்கும் அங்கு ஒரு கேபிளை நிறுவ வேண்டும் என்கிற எந்த நோக்கமும் இல்லை."
உலகம் முழுவதும் 13 லட்சம் கிலோமீட்டர் (800,000 மைல்கள்) தொலைவுக்கு 430க்கும் மேற்பட்ட கேபிள்கள் இணைய சேவை வழங்கிக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் ஒரு கப்பலின் நங்கூரத்தால் இணைய கேபிள் துண்டிக்கப்பட்டதால், செயற்கைக்கோள் இணைப்பைப் பெற 15 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டோங்கா. ஆனால் எரிமலைச் சாம்பல் மேகம் காரணமாக செயற்கைக்கோள் போன்களின் பயன்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை அழைக்க மட்டுமே முடிகிறது, அழைப்புகளை ஏற்க முடியவில்லை என சிலர் புகார் கூறியுள்ளனர்.
செயற்கைக்கோள் தொலைபேசிகள் விலை மிகுந்தவை என்பதால், அரசு அதிகாரிகள் மற்றும் சில வணிக நிறுவனங்கள் மட்டுமே வைத்திருக்கின்றன.
மொபைல் சேவை வழங்குநரான டிஜிசெல், தெற்கு பசிபிக் பல்கலைக்கழகத்தின் செயற்கைக்கோள் டிஷ்ஷைப் பயன்படுத்தி, முக்கியத் தீவான டொங்கதபுவில் (Tongatapu) வரையறுக்கப்பட்ட 2ஜி சேவையை வழங்க தற்காலிகமாக ஓர் அமைப்பை நிறுவியுள்ளது.
பிற செய்திகள்:
- இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு
- மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிலிருந்து மீண்டும் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா?
- யுக்ரேன் பதற்றம்: ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்க்க அணி திரளும் மேற்கு நாடுகள்
- பிபின் ராவத் பஞ்சலோக சிலை: கடலூர் முதல் டெல்லிவரை கொண்டு செல்ல திட்டமிடும் முன்னாள் ராணுவத்தினர்
- உச்ச நீதிமன்றம்: அடுத்த 10 மாதங்கள் புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு மிகவும் முக்கியம் - ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








