உச்ச நீதிமன்றம்: அடுத்த 10 மாதங்கள் புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு மிகவும் முக்கியம் - ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுசித்ரா கே. மொஹந்தி
- பதவி, பிபிசி இந்திக்காக
உச்சநீதிமன்றத்தில் தற்போது பணிபுரியும் 32 நீதிபதிகளில் 7 பேர் அடுத்த 10 மாதங்களில் 'ஓய்வு பெற்ற நீதிபதி' ஆக போகிறார்கள். இதை... ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக பணியாற்றும் ஏழு பேர் அடுத்தடுத்து ஓய்வு பெறப் போகிறார்கள் என்று பார்த்தால் விஷயத்தின் தீவிரம் புரியும்.
சட்ட வல்லுநர்களின் கூற்றுப்படி, சரியான நேரத்தில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படாவிட்டால், நீதித்துறை நிர்வாகத்தின் பணி பாதிக்கப்படும். ஏனெனில் இந்த ஏழு பேர் இடத்தில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் 25 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றுவார்கள்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, ஒரே நேரத்தில் 9 நீதிபதிகள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.
நீதிபதி சுபாஷ் ரெட்டி மூன்று வாரங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற பிறகு இந்த எண்ணிக்கை இப்போது 32 ஆக குறைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 34 என தெரிய வந்துள்ளது.
சரியான நேரத்தில் நியமனம் தேவை'
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் மூத்த சட்ட நிபுணர்கள் நான்கு பேரிடம் பிபிசி பேசியது.
புதிய நீதிபதிகள் சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் நியமிக்கப்படாவிட்டால், நீதித்துறை செயல்முறை சீர்குலைந்துவிடும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
நாட்டின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும் (எஸ்ஜி) உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான மோகன் பராசரன் பிபிசியிடம் பேசும்போது, "இந்த காலகட்டத்தில் காலியாகப்போகும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்கள், அவை காலியிடங்கள் ஆகும் முன்பே நிரப்ப நடவடிக்கை தேவை" என்றார்.
அதற்குள், தேவையான பதவிகளுக்கு ஏற்ப நீதிபதிகளை நியமிப்பது, நீதித்துறைக்கும், அனைத்து வழக்குரைஞர்களுக்கும் நல்ல விஷயமாக இருக்கும்,'' என்று அவர் கருதுகிறார்.
மறுபுறம், நாட்டின் பிரபல குற்றவியல் வழக்குகளுக்கான வழக்கறிஞர் கீதா லூத்ரா, நிலுவையில் உள்ள வழக்குகளை சமாளிக்க, நீதிபதிகள் நியமன விவகாரத்தை இந்திய நீதித்துறை சிறப்பாக கையாள வேண்டும் என்று கூறினார்.
கீதா லுத்ரா, "நீதிபதிகள் நியமன விவகாரம், நீதி வழங்கும் பணி மோசமாகப் பாதிக்கப்படாத வகையில் சிறப்பாகக் கையாளப்பட வேண்டும்" என்று கூறினார்.
புதிய நீதிபதிகள் நியமனம் சரியானபடி இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"நான் உறுதியாக நம்புகிறேன். இது ஒரு தொடர் செயல்முறை. குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறைவாகும்போது முறையான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் அந்த அமைப்பில் மேற்கொள்ளப்படும். 'உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற நீதிபதிகளின் தகுதி மற்றும் பணி மூப்பு கவனத்தில் கொள்ளப்படும். இந்த நியமனங்கள் நடக்கும் வரை நீதிபதிகளும், நீதித்துறை அமைப்புகளும் நிலுவை வழக்குகளால் மூச்சு திணறாமல் இருக்கும் வகையில் அந்த அமைப்பு செயல்பட வேண்டும்."
உச்ச நீதிமன்றத்தில் அதிக நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை எனக் கூறும் அவர், நீதிபதிகளின் எண்ணிக்கைக்கும், வழக்குகளின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதமும் சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனால், இந்த நடைமுறை உச்ச நீதிமன்றத்தில் மட்டுமின்றி கீழமை நீதிமன்றங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்கிறார் கீதா லூத்ரா.

பட மூலாதாரம், Twitter
நியமன நடவடிக்கை எப்போது தொடங்கும்?
இந்திய முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும் (ஏஎஸ்ஜி) உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கே.சி.கௌஷிக் ,இது குறித்து பிபிசியிடம் பேசினார்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்), தனக்கு சாத்தியமான நீதிபதிகளின் பெயர்களை சரியான நேரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பும் பணியை தொடங்க வேண்டும், இதனால் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் காலியாகாமல் நிரப்பப்படும் என்று அவர் கூறினார்.
"நீதிபதிகள் பணியிடம் காலியாக இருப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அந்த பணியிடங்களை நிரப்பும் பணியைத் தொடங்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை போதுமானது. இனி காலியிடங்கள் எழுமானால் அவற்றை சரியான நேரத்தில் நிரப்பினாலே போதும்," என்கிறார் கெளஷிக்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வரை காத்திருக்காமல் அதிக வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்க ஏதுவாக தங்களுடைய விடுமுறை காலத்தை குறைக்க நீதிபதிகள் பரிசீலிக்கலாம் என்றும் அவர் யோசனை கூறுகிறார்.
நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இதேபோல சரியான நேரத்தில் காலிவிருக்கும் பணியிடங்களை நிரப்பும் வழிகளை கண்டறிய வேண்டும்" என்று கே.சி.கௌஷிக் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு ஓய்வு பெறும் நீதிபதிகள் யார்?
ஜனவரி - நவம்பர் மாதங்களுக்கு இடையே, உச்ச நீதிமன்றத்தின் கீழ்கண்ட ஏழு மூத்த நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள். அவர்களின் பதவிக்கால நிறைவு தேதியே இங்கே வழங்குகிறோம்.
1) நீதிபதி வினீத் சரண் (10-05-2022)
2) நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் (07-06-2022)
3) நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் (29-07-2022)
4) தலைமை நீதிபதி என்வி ராமண்ணா (26-08-2022)
5) நீதிபதி இந்திரா பானர்ஜி (23-09-2022)
6) நீதிபதி ஹேமந்த் குப்தா (16-10-2022)
7) நீதிபதி உதய் உமேஷ் லலித் (08-11-2022)
எல்லாம் சரியான நடைமுறைப்படி நடந்தால் நீதிபதி லலித் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக முடியும்.

பட மூலாதாரம், Reuters
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள்
உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வில் 421 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பிபிசி கண்டறிந்துள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் 5, 7 மற்றும் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளில் நிலுவையில் உள்ளன.
இதில் 49 வழக்குகள் முக்கியமானவை. 372 வழக்குகள் இந்த முக்கிய வழக்குகளுக்கு தொடர்பானவை.
இந்த நிலுவை வழக்குகளில் முக்கியமானவை- முறையான நாடாளுமன்ற நடைமுறையின்றி அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை ரத்து செய்தது, 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' ( Unlawful Activities (Prevention) Act ) எதிர்ப்பு வழக்கு, குடியுரிமை திருத்தச் சட்டம், தேச துரோக சட்டப்பிரிவு, தனியுரிமை மீறல் மூலம் அடிப்படை உரிமைகளை மீறுதல், பெகாசஸ் உளவு வழக்கு, ஆதார், தேர்தல் ஆவணங்களில் வெளிப்படைத்தன்மை கோரும் வழக்கு. பத்திரங்கள் மற்றும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் போன்றவை.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான விகாஸ் சிங்கிடம் பிபிசி பேசியது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அரசியல் சாசன விவகாரங்களைக் கருத்தில் கொண்டு, அதை மிக முக்கியமானதாகக் கருதி, அவற்றை விசாரிக்க உரிய எண்ணிக்கையிலான அமர்வுகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த விஷயங்கள் நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியவை. மேலும் அவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாகும் என்கிறார் விகாஸ் சிங்.
"வழக்குகளை முன்கூட்டியே தீர்ப்பதன் மூலம், நீதித்துறை மற்றும் உச்ச நீதிமன்றம் மீது குடிமக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், சரியான நேரத்தில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்," என்றும் விகாஸ் சிங் தெரிவித்தார்.
"நீதிபதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அவர்களின் தரம் மிகவும் முக்கியமானது. நீதிபதிகள் பணி ஓய்வுக்கு முன்பே அவர்களுக்கான இடத்தை நிரப்பும் நடைமுறை தொடங்கினால்தான் அந்த நியமனத்தின் நோக்கம் ஈடேறும்" என்கிறார் விகாஸ் சிங்.
பிற செய்திகள்:
- இந்திய ஆட்சி பணி விதிகளை திருத்துவது கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும்: மு.க.ஸ்டாலின் கடிதம்
- டோங்கா எரிமலைச் சாம்பல் பூமியைக் குளிர்விக்குமா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
- உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்? எளிய விளக்கம்
- மகாராஷ்டிராவில் தாக்கப்பட்ட கர்ப்பிணி காவலர் - என்ன நடந்தது?
- அயோத்தி அருகே 251 மீட்டர் ராமர் சிலை அமைக்க நிலங்களை பலவந்தமாக பறிப்பதாக விவசாயிகள் புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












