டோங்கா எரிமலைச் சாம்பல் பூமியைக் குளிர்விக்குமா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

கடந்த சனிக்கிழமை டோங்காவில் எரிமலை வெடித்தது எந்த அளவுக்கு ஆற்றல் மிக்கதாகவும் அபாயகரமானதாகவும் இருந்தது என்பதற்கு அடையாளமாக அதன் ப்ளூம் எனப்படும் சாம்பல் மேகம் அடைந்த உயரம் கருதப்படுகிறது.
இது பூமியைக் குளிர்விக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
வானிலை செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்யும் பிரிட்டன் விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 55 கிமீ உயரம் வரை இந்தச் சாம்பல் மேகம் சென்றிருக்கலாம் எனக் கணக்கிடுகின்றனர்.
இது வளிமண்டலத்தில் ஸ்ட்ரேட்டோஸ்பியர் மற்றும் மீசோஸ்பியர் அடுக்குகளின் எல்லைப் பகுதியாகும்.
"இது எரிமலை சாம்பல் மேகம் எட்ட முடியாத உயரம்" என்று கூறுகிறார் ஆர்ஏஎல் ஸ்பேஸ் அமைப்பைச் சைமன் ப்ரவுட்.
20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மிகவும் சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பு 1991 இல் பிலிப்பின்ஸின் பினாட்டுபோவில் நடந்தது. அதன் சாம்பல் மேகம் ஏறக்குறைய 40 கிமீ வரை எழும்பியதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இன்றைக்கும் இருப்பதைப் போன்ற மிகவும் துல்லியமான செயற்கைக்கோள்கள் அந்தக் காலத்தில் இருந்திருந்தால், அது அதிக உயரம் வரைச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் ப்ரவுட்.
டோங்காவின் ஹுங்கா டோங்கா ஹுங்கா ஹாாப்பாய் எரிமலையில் இருந்து எழுந்த சாம்பல் மேகத்தின் உயரத்தைக் கண்டறிய ஹிமாவாரி-8 (ஜப்பான்) GOES-17 (USA), GK2A (கொரியா) ஆகிய மூன்று வானிலை செயற்கைக்கோள்களின் தரவு பயன்படுத்தப்பட்டது.
"அவை அனைத்தும் வெவ்வேறு தீர்க்கரேகைகளில் இருப்பதால் அவற்றின் தரவுகள் மூலம் சாம்பல் மேக உயரத்தைக் கண்டறியலாம். புயல் மேகங்களைக் கண்டறிவதில் இது நம்பகமான தொழில்நுட்பமாகும்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் பிரவுட்.
மேகத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே 55 கி.மீ. வரை சென்றதாகத் தெரிகிறது. அதுவும் சாம்பலைவிட நீராவியாக இருக்க வாய்ப்புண்டு. எரிமலை வெடிப்பின்போது உருவான சாம்பல் மேகத்தின் முக்கிய குடைப் பகுதி 35 கிலோ மீட்டர் வரை மட்டுமே உயர்ந்தது.
விண்வெளியின் வளிமண்டல எல்லையாகக் கருதப்படும் கார்மான் கோடு 100 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

பட மூலாதாரம், NASA
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது வீசப்பட்ட அணுகுண்டைப் போல டோங்கா எரிமலை வெடிப்பு 500 மடங்கு சக்தி வாய்ந்ததாக மதிப்பிடப்படுகிறது. இதில் வெளிப்பட்ட ஆற்றல் 10 மெகா டன் டிஎன்டியின் வெடிப்புக்குச் சமம் என அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
நீருக்கடியில் இருக்கும் ஓர் எரிமலையில் பெரிய வெடிப்பு ஏற்பட்டதற்கான சில காரணங்களை நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷேன் க்ரோனின் குறிப்பிடுகிறார்.
எரிமலையின் வாயு நிறைந்த மாக்மா வெளிப்படும்போது, அது கடல் நீருடன் தொடர்பு கொண்டது வெறும் 150 முதல் 250 மீட்டர்தான் என்பது அவர் கூறும் முக்கியமான காரணி. அதாவது குறைந்த ஆழத்திலேயே எரிமலை இருக்கிறது என்பதுதான் காரணம்.
"மாக்மா வெளியே வந்தபோது, அதன் மீது அதிக அழுத்தம் இல்லை" என்று அவர் பிபிசியின் சயின்ஸ் இன் ஆக்சன் நிகழ்ச்சியில் கூறினார்.

பட மூலாதாரம், TONGA GEOLOGICAL SERVICES
Volcanic Explosivity Index (VEI) எனப்படும் எரிமலை வெடிப்புக் குறியீட்டில் டோங்கா எரிமலை வெடிப்பு ஐந்துக்கும் அதிகமாக அளவிடப்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப தரவுகள் கூறுகின்றன. ஆறு என்ற அளவில் வகைப்படுத்தப்பட்ட பினாட்டுபோவிற்குப் பிறகு இதுவே சக்திவாய்ந்ததாக இருக்கும்.
பிலிப்பைன்ஸ் எரிமலை வெடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு பூமியின் சராசரி வெப்பநிலையை அரை டிகிரி குறைத்தது. 15 மில்லியன் டன் கந்தக டை ஆக்சைடை வளிமண்டலத்தில் பீய்ச்சி அடித்ததன் மூலம் இதைச் செய்தது. கந்தக டை ஆக்சைடு தண்ணீருடன் இணைந்து சிறிய நீர்த்துளிகளை உருவாக்குகின்றன. இவை பூமியை நோக்கி வரும் சூரிய கதிர்வீச்சை திருப்பி அனுப்புகின்றன.
இருப்பினும் டோங்கா எரிமலை அந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தாது என பிரிட்டன் வானிலை அலுவலகத்தின் காலநிலை பாதிப்புகள் துறையின் தலைவர் ரிச்சர்ட் பெட்ஸ் கூறினார்.
"பினாட்டுபோ எரிமலை கணிசமான அளவு விளைவைக் கொண்டிருந்தது. ஆனால் டோங்கா எரிமலையின் உமிழ்வுகள் 5 லட்சம் டன்களுக்கும் குறைவான கந்தக டை ஆக்சைடையே கொண்டிருந்தன. இது பினாட்டுபோ எரிமலையைக் காட்டிலும் 30 மடங்கு குறைவு. எனவே அது குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று அவர் விவரித்தார்.
பிற செய்திகள்:
- தினமும் 150 கோடி டன் நன்னீரை கடலில் கலந்த ராட்சத பனிப்பாறை - விளைவுகள் என்ன?
- 'தயவுசெய்து உதவுங்கள், தாலிபன்கள் என் வீட்டிற்கு வந்துள்ளனர்'
- ஆப்பிள் நிறுவன 'ஏர்டேக்' சாதனம் நம்மை ரகசியமாக கண்காணிக்கிறதா?
- பூதகாலம் - சினிமா விமர்சனம்
- மகாராஷ்டிராவில் தாக்கப்பட்ட கர்ப்பிணி காவலர் - என்ன நடந்தது?
- அயோத்தி அருகே 251 மீட்டர் ராமர் சிலை அமைக்க நிலங்களை பலவந்தமாக பறிப்பதாக விவசாயிகள் புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












