பூதகாலம் - சினிமா விமர்சனம்

பூதகாலம்

பட மூலாதாரம், Anwar Rasheed

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: ரேவதி, ஷானே நிகம், சாய்ஜு க்ரூப், ஜேம்ஸ் எலியா; இசை: கோபி சுந்தர்; இயக்கம்: ராகுல் சதாசிவன்; வெளியீடு: சோனி லைவ் ஓடிடி.

தமிழில் பேய்ப் படங்களுக்கான இலக்கணங்களே மாறிப் போயிருக்கும் நிலையில், மலையாளத்தில் பழைய பாணியில் வெளியாகியிருக்கிறது இந்த படம். மிகக் குறைந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு திகிலூட்டியிருக்கிறார்கள்.

கணவனை இழந்த ஆஷா (ரேவதி) தன் மகன் வினு (ஷானே நிகம்) மற்றும் வயதான, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயாருடன் வசித்து வருகிறாள்.

வினு படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் இருப்பதால், ஆஷாவுக்கும் மகனுக்கும் இடையில் தொடர்ந்து சண்டை வந்துகொண்டேயிருக்கிறது.

இந்த நிலையில், ஆஷாவின் தாய் இறந்துவிடுகிறார். இதற்குப் பிறகு, அவர்களது வீட்டில் சில விசித்திரமான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. சில உருவங்கள் வினுவின் கண்களுக்குத் தெரிகின்றன.

ஆனால், மற்றவர்கள் இதை நம்ப மறுக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் பிரச்னைகள் முற்றி ஆஷா மற்றும் வினுவின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து எப்படித் தப்புகிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.

மொத்தமே ஒன்றே முக்கால் மணி நேரம்தான் படம். படம் துவங்கி வெகுநேரத்திற்கு மிக மெதுவாகவே நகர்கிறது. ஆனால், உச்சகட்டத்தை நெருங்கிய பிறகு, மிரட்டியிருக்கிறார் இயக்குநர்.

இந்த படத்தின் கவனிக்கத்தகுந்த அம்சமே, வெறும் பேய்ப் படமாக இல்லாமல் வெவ்வேறு பிரச்னைகள், வெவ்வேறு அடுக்குகளில் சொல்லப்படுவதுதான். இந்தப் பிரச்னைகளின் உச்சகட்டமாகவே பேயின் நடமாட்டம் தென்படுகிறது.

பூதகாலம்

பட மூலாதாரம், ANWAR RASHEED

ஆஷாவுக்கு ஏற்கனவே மனரீதியாக தீவிர பிரச்னைகள் ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கிறாள். வினுவுக்கு வேலை இல்லை என்பதோடு, குடிப் பழக்கமும் இருக்கிறது.

ஒருகட்டத்தில் வினுவும் மனரீதியாக பாதிக்கப்பட்டவனைப் போல ஆகிவிடுகிறான்.

குடும்பத்தை நகர்த்திச் செல்லவே பணம் இல்லை. இந்தக் கட்டத்தில்தான் வீட்டில் யாரோ நடமாடுவது நடக்க ஆரம்பிக்கிறது. அந்த வீட்டில் பேய் என்று ஏதாவது இருக்கிறதா அல்லது இருவருமே மனரீதியாக பாதிக்கப்பட்டதால் அப்படி நினைக்கிறார்களா என்ற கோணத்திலும் இந்தப் படத்தை அணுக முடியும்.

ஆனால், படத்தின் இறுதிக் காட்சி, இந்தக் கேள்விக்கு விடையைத் தருகிறது.

படத்தில் மொத்தமே ஐந்தாறு பாத்திரங்கள்தான். அவற்றை வைத்துக்கொண்டு ஒரு அழுத்தமான த்ரில்லரைத் தந்திருக்கிறார் ராகுல் சதாசிவன்.

படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மனநல ஆலோசகராக வரும் சாய்ஜு, சில காட்சிகளில்தான் வருகிறார் என்றாலும், அவர் வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.

இந்தப் படத்தின் இன்னொரு பலம், பின்னணி இசை. மிகச் சாதாரணமான ஒரு தருணத்தைக்கூட அச்சமூட்டுவதாக மாற்றிவிடுகிறது இசை. ஆனால், திடீரென படத்தின் நடுவில் வரும் காதல் பாடல் எதற்காக?

பொறுமையும் திகில் படங்களுக்கான ஆர்வமும் இருந்தால், ரசிக்கக்கூடிய படம்தான் இந்த "பூதகாலம்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: