உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துக்களை பெற மகளுக்கு முழு உரிமை உண்டு - உச்ச நீதிமன்றம்

court

பட மூலாதாரம், Getty Images

இன்று ( 22-1-2022) இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.

உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துக்களை பெற மகளுக்கு முழு உரிமை உண்டு என்று மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தந்தையின் சுய சம்பாத்தியம் மற்றும் பரம்பரை சொத்துக்களில் பங்கு கோர, தந்தை உயில் எழுதாத நிலையில், மகள்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அப்துல் நசீர் , கிருஷ்ண முராரி அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கு விசாரணையில், நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், இந்து வாரிசு உரிமை சட்டப்படி தந்தை உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது குடும்ப பாகப் பிரிவினை மூலமாக கிடைத்த பரம்பரை சொத்தில் பங்கு பெற வாரிசு என்ற அடிப்படையில் மகள்களுக்கும், விதவை மனைவிக்கும் முழு உரிமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

காலமான தந்தையின் சகோதரர்களுடைய வாரிசுதாரர்கள் உள்ளிட்ட மற்ற குடும்ப இணை உறுப்பினர்களை விட, தந்தையின் நேரடி வாரிசான மகள்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 62 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

birds count

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 62 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வெள்ளிக்கிழமையன்று தொடங்கியுள்ளதாக தினந்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பணியில், வெளிநாடுகளில் இருந்து வந்த பறவைகள் பற்றிய விவரம் இன்று தெரியவரும்.

இந்த மாவட்டங்களிலுள்ள தாமிரபரணி பாசன குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வளம் காப்பு மையம், முத்து நகர் இயற்கை சங்கம், நெல்லை இயற்கை சங்கம், நெல்லை மண்டல வனத்துறை ஆகியவை இணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்துகின்றன.

இந்த கணக்கெடுப்பு பணியில், பறவைகள் எத்தனை உள்ளன, அவை என்ன வகையான இனங்கள், இதன் இனப்பெருக்க காலம் எவ்வளவு என்பன உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த பணி இன்று (சனிக்கிழமை) மாலை வரை நடைபெறுகிறது.

பெங்களூருவாசிகளில் 78% பேருக்கு சொந்த வீடு ஆர்வம்: ஆய்வு

housing

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு, முதலீடு செய்வதற்கு சிறந்த வழியாக, பெங்களூருவாசிகளில் 78% பேர் சொந்த வீடு வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வில், 25% பெங்களூருவாசிகள் சொந்த வீட்டை வாங்குவதே, தங்கள் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம் என்று கருதுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த தொற்றுகாலத்தில், வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கமான நிலையில், ஆய்வில் பங்கேற்றவர்களில் 16% பேர் சொந்த வீடு வைத்திருப்பதை முதன்மையாகக் கொண்டுள்ளனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஏறக்குறைய 49% இந்தியர்கள் வீட்டு வசதி நிதி நிறுவனங்களை அணுகியுள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: