பெரிய திரைப்படங்கள் வெளியாகாத பொங்கல்: திரையரங்குகளின் நிலை என்ன?

வலிமை

பட மூலாதாரம், BONEY KAPOOR

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

பொங்கல் திருநாளுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த வலிமை, ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் கொரோனாவின் மூன்றாவது அலையின் காரணமாக தள்ளிப்போடப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திரைப்படங்களை வெளியிட தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, கோடை விடுமுறைக் காலம் போன்ற பல தருணங்கள் மிக முக்கியமானதாக இருந்தாலும் பொங்கல் திருநாளை ஒட்டி திரைப்படங்களை வெளியிடுவதையே பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள்.

பொங்கலை ஒட்டி ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக வரும் விடுமுறையே இதற்கு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தீபாவளியைவிட பொங்கல் தருணத்திலேயே அதிக அளவில் திரையரங்கில் கலெக்ஷன் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கும்.

2015 விக்ரம் நடித்த ஐ, விஷால் நடித்த ஆம்பள ஆகிய படங்கள், 2016ல் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், சசி குமாரின் தாரை தப்பட்டை, 2017ல் விஜய் நடித்த பைரவா 2018ல் குலேபகாவலி, விக்ரம் நடித்த ஸ்கெட்ச், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், 2019ல் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம், 2020ல் ரஜினி நடித்த தர்பார், 2021ல் விஜய் நடித்த மாஸ்டர், பூமி, ஈஸ்வரன் ஆகிய படங்கள் பொங்கலை ஒட்டி வெளியாயின. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் பொங்கலை ஒட்டி திரைப்படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு அஜீத் நடித்த வலிமை, ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் ஆகியோர் நடித்த ரத்தம், ரணம், ரௌத்திரம் (ஆர்ஆர்ஆர்), பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தன.

ஆனால், கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஜனவரி மாதத் துவக்கத்தில் இருந்து திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக, 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த காலத்தில், பெரிய திரைப்படங்கள் வெளிவந்து வெற்றிபெற்றிருந்தன என்பதால், வலிமை திரைப்படம் வெளியாவதில் பிரச்சனைகள் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அரசு விதித்த வேறு சில கட்டுப்பாடுகள் தயாரிப்பாளர்களுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தின. கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக் கிழமை முழு நேர ஊரடங்கும் திரையரங்குகளின் நிலையை மோசமாக்கின. இரவு நேர ஊரடங்கின் காரணமாக, இரவுக் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன. எல்லோருக்கும் விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகளும் மூடப்படும் நிலை ஏற்பட்டது.

இந்தக் காரணங்களால் வலிமை, ஆர்.ஆர்.ஆர்., ராதே ஷ்யாம் ஆகிய மூன்று படங்களின் வெளியீடுகளும் தள்ளிவைக்கப்பட்டன. இதில் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல திரையரங்க உரிமையாளருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

RRR

பட மூலாதாரம், Getty Images

"இப்போதைய சூழலில் தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் திரையரங்குகளுமே பெரிய திரைப்படங்களை நம்பித்தான் இருக்கின்றன. சிறிய பட்ஜெட் படங்கள் எவ்வளவு நல்ல படங்களாக இருந்தாலும், அவற்றைப் பார்க்க ஆட்களே வருவதில்லை. இந்த நிலையில் வலிமை, ஆர்.ஆர்.ஆர். படங்கள் வராமல் போனது திரையரங்குகளுக்கு மிகப் பெரிய இழப்பு" என்கிறார் சென்னையில் உள்ள மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றான ரோஹிணி திரையரங்கத்தின் உரிமையாளரும் தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பன்னீர்செல்வம்.

தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றால் பெரிய படங்கள் மட்டும்தான் ஒரே வாய்ப்பு; அம்மாதிரி பெரிய படங்கள் ஆறு அல்லது ஏழு படங்கள்தான் ஒரு வருடத்திற்கே ரிலீசாகின்றன. அந்தப் படங்களும் தள்ளிப்போகும்போது, இழப்பு பெரிய அளவில் ஏற்படுகிறது என்கிறார் பன்னீர்செல்வம்.

வலிமை, ஆர்.ஆர்.ஆர். படங்கள் வெளிவராத நிலையில், நாய் சேகர், கார்பன், கொம்பு வச்ச சிங்கம் உள்ளிட்ட ஏழு படங்கள் பொங்கல் நாளில் வெளியாயின. "ஆனாலும் பெரிய பயன் ஏதும் இல்லை. எந்தப் படமும் எந்த ஷோவும் முழுமையாக நிரம்பவில்லை. இதுதவிர, பத்து மணிக்கு மேல் ஊரடங்கு என்பதால், பல ஊர்களில் மாலைக் காட்சிகளைத் திரையிட முடியவில்லை. கூட்டம் வரும் நாளான ஞாயிற்றுக்கிழமை படங்களைத் திரையிட முடியவில்லை. ஏற்கனவே 2,000 திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. இப்போது 1,168 திரையரங்குகளே இயங்கிவருகின்றன. இந்த நிலை நீடித்தால், சமாளிப்பது கடினமாகிவிடும்" என்கிறார் பன்னீர்செல்வம்.

வலிமை, ஆர்.ஆர்.ஆர். ஆகிய படங்கள் வெளியாகியிருந்தால் தமிழ்நாடு திரையரங்குகளில் எவ்வளவு பணம் திரண்டிருக்கும்? "குறைந்தது நானூறு கோடி ரூபாய் திரண்டிருக்கும். இதில் திரையரங்க உரிமையாளர்களின் பங்காக மட்டும் 100 - 110 கோடி ரூபாய் வசூலாகியிருக்கும். பொங்கலை ஒட்டி ஐந்து நாட்கள் விடுமுறை இருப்பதால், நானூறு கோடியில் பெரும் தொகை இந்த ஐந்து நாட்களில் வசூலாகியிருக்கும். அது இழப்புதான்." என்கிறார் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

RRR

பட மூலாதாரம், Getty Images

டிக்கெட் மூலம் கிடைக்கும் வசூல் ஒரு புறமிருக்க, திரையரங்குகளின் கேண்டீன்கள், வாகன நிறுத்தக் கட்டணம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் தொகையும் கிட்டத்தட்ட இல்லாமல் போயிருக்கிறது.

"திரையரங்கிற்கு ஆட்கள் வந்தால்தான் கேண்டீன்களில் விற்பனையிருக்கும். சத்யம் திரையரங்கில் மட்டும் பாப்கார்ன் போன்றவற்றை ஸ்விக்கி போன்ற செயலிகள் மூலம் விற்பனை செய்கிறார்கள். மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. திரையரங்கில் கிடைக்கும் பணத்தில் கிட்டத்தட்ட கால்வாசி பணம் கேண்டீனில்தான் கிடைக்கும். அது இல்லாமல் போய்விட்டது" என்கிறார் பன்னீர்செல்வம்.

கடந்த ஆண்டு பொங்கல் சமயத்திலும் 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு இருந்தது. இருந்தபோதும் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் துணிந்து வெளியிடப்பட்டது. "அந்த நேரத்தில் இரவு ஊரடங்கோ, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கோ இல்லை என்பதால் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், இந்த முறை பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்ததால், தயாரிப்பாளர்கள் பின்வாங்கிவிட்டனர்" என்கிறார் பன்னீர்செல்வம்.

தற்போதைய சூழலில் தமிழ்த் திரையரங்க உரிமையாளர்களின் முக்கியமான பிரச்சனை, சிறிய பட்ஜெட்டில் நல்ல கதையம்சத்துடன் படங்கள் வெளிவரும்போது அவற்றை ரசிகர்கள் கண்டுகொள்ளாததுதான். "தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த நிலை இருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் எல்லா படங்களுக்கும் ரசிகர்கள் வருகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் ஏப்ரல், மே மாதங்கள் திருவிழாவைப் போல இருக்கும். இப்போது கோவிட் காரணமாக, தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைதான் என்பதால், கோடை விடுமுறை என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. அந்த நேரத்தை திரையரங்கில் கழிப்போம் என யாரும் நினைப்பதில்லை" என்பதை சுட்டிக்காட்டுகிறார் ஒரு திரையரங்க உரிமையாளர்.

Valimai

பட மூலாதாரம், Getty Images

ஆகவே திரையரங்குகளின் எதிர்காலம் என்னவாக இருக்கிறது? "பெரிய படங்கள்தான் ஒரே நம்பிக்கை. அஜீத்தின் படம் இப்போது வரவில்லை என்பது இழப்புதான் என்றாலும், விஜய், அஜீத், ரஜினி படங்கள் எப்போது வந்தாலும் அந்தப் படங்கள் பெரிய அளவில் வசூலிக்கும். அது கிட்டத்தட்ட பண்டிகைக் காலத்தைப் போலவே மாறிவிடும். ஆகவே அது போன்ற நாட்களை எதிர்பார்த்திருக்கிறோம்" என்கிறார் ஆர். பன்னீர்செல்வம்.

ஜனவரி மாத இறுதியிலும் பிப்ரவரி மாத ஆரம்பத்திலும் சில பெரிய படங்களின் வெளியீடு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோவிட் கட்டுப்பாடு காரணமாக, அந்தத் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் வெளியீடு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: