கடைசீல பிரியாணி - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், YNOTX, Youtube
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: விஜய் ராம், வசந்த் ரவி, ஹக்கீம் ஷா, தினேஷ் மணி; ஒளிப்பதிவு: ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப், அசீம் மொஹம்மத்; இயக்கம்: நிஷாந்த் வர்மா.
மிகச் சிறிய பட்ஜெட்டில் திரைக்கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்டு, கவனத்தைப் பெறும் படங்கள் சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் வெளியாக ஆரம்பித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'ஆல்ஃபா அடிமைகள்' அப்படி ஒரு படம். அதே வரிசையில் வைக்கக்கூடிய மற்றொரு படம்தான் 'கடைசீல பிரியாணி'.
பாண்டியா சகோதரர்கள் மூன்று பேர். இவர்களது தந்தையை கேரளாவில் உள்ள ஒருவன் கொன்றுவிட அவனைப் பழிவாங்க தாயின் தூண்டுதலால் கோட்டயத்துக்கு வருகிறார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக ஒரு கொலைகார சைக்கோ குறுக்கிடுகிறான். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
அடிப்படையில் ஒரு துரத்தல் த்ரில்லர் போல கதை இருந்தாலும், சாதாரணமான ஒரு வாழ்க்கையைத் தேடும் பலருக்கும் அம்மாதிரி வாழ்க்கை கிடைப்பது எவ்வளவு கடினமானதாக இருக்கிறது என்பதைத்தான் படம் சொல்ல வருகிறது.
மனைவியும் மூத்த மகன்கள் இருவரும் முரட்டுத்தனமாக இருப்பதால், மூன்றாவது மகனான சிக்குப் பாண்டியை (விஜய் ராம்) தனியாக அழைத்துவந்து வளர்க்கிறார் தந்தை.
நன்றாகப் படித்தால், நல்ல வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கும் சிக்குப் பாண்டியின் வாழ்க்கை நினைத்தபடி அமையாமல் போகிறது. அப்படி நடக்காமல் போவதற்குக் காரணம் அவன் இல்லை. அவன் விரும்பாமலேயே எல்லாம் நடந்துவிடுகிறது.
படத்தின் பிற்பகுதியில் சிறு ஒலியைக்கூட துல்லியமாக பதிவுசெய்திருப்பவர்கள், முற்பகுதியில் வசனங்கள்கூட புரியாத அளவுக்கு ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள். அதனால், வெகு நேரத்திற்கு கண்ணைக்கட்டி கேரளக் காட்டில் விட்டதுபோலத்தான் இருக்கிறது.
விஜய் சேதுபதியின் பின்னணிக் குரலில் துவங்குகிறது படம். ஆனால், படம் துவங்கி 25 நிமிடங்கள்வரை அதில் என்ன நடக்கிறது என்பது பூடகமாகத்தான் புரிகிறது. சகோதரர்கள் மூன்று பேரும் கொலை செய்யப்பட வேண்டியவனின் வீட்டிற்கு வந்த பிறகுதான் கதை சூடுபிடிக்கிறது. அதுவரை அதீதமான பொறுமை அவசியம். பல இடங்களில் இயற்கைக் காட்சிகளை சிறிது நேரம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கொஞ்ச நேரம் பொறுத்துக்கொண்டால் ஒரு சிறப்பான சம்பவத்தை ரசிக்க முடியும்.

பட மூலாதாரம், YNOTX, Youtube
இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு பிரதான பாத்திரத்திற்கும் ஒரு வித்தியாசமான பின்னணி இருக்கிறது. மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது கொலை செய்ய வரும் மூத்த பாண்டி, சாதாரண வாழ்க்கையை விரும்பினாலும் கொலைக்கு உடந்தையாக இருக்க கட்டாயப்படுத்தப்படும் சிக்குப் பாண்டி, தந்தையின் மற்றொரு தாரத்தையும் அவள் மகனையும் கொடூரமாக கொலைசெய்யும் மகன், திருடனாக இருந்தபோது திருடிய ஒரு பர்ஸில் இருந்த படத்தைப் பார்த்து, அதைப் போலவே வாழ விரும்பும் ஓட்டுநர் என திகைக்கவைக்கும் பல பாத்திரங்களை கோட்டயம் காட்டிற்குள் மொத்தமாக ஓடவிட்டிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் இடைவேளையில் வரும் திருப்பம் உண்மையிலேயே அட்டகாசமானது. அதற்குப் பிறகு படத்தின் ஒவ்வொரு காட்சியும் திகைப்பையோ, வியப்பையோ ஏற்படுத்தத் தவறுவதில்லை.
இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு போன்றவற்றில் படத்தின் முற்பகுதிக்கும் பிற்பகுதிக்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. மலையாள வசனங்கள் வரும் இடங்களில் சப் - டைட்டிலுக்கு தவறான வண்ணத்தைத் தேர்வுசெய்திருக்கிறார்கள். அதனால், அதைப் படிப்பதும் சிரமமாக இருக்கிறது.
சிக்குப் பாண்டியாக நடித்திருக்கும் விஜய் ராமும் மூத்த அண்ணனாக வரும் வசந்த் ரவியும் சைக்கோவாக வரும் ஹக்கீம் ஷாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சினிமா பிடிக்குமென்றால் இந்தப் படம் பிடிக்கும். இது வயது வந்தோருக்கான திரைப்படம்.
பிற செய்திகள்:
- பெங்களூரைச் சூழ்ந்திருக்கும் பிட்காயின் ஊழல் அரசியல் - நடந்தது என்ன?
- கொரோனா பரவலை தடுக்காவிட்டால் ஐரோப்பாவில் 5 லட்சம் பேர் பலியாகலாம்: WHO எச்சரிக்கை
- போலீஸ் எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ஆடு திருடும் கும்பல் காரணமா?
- கிலோ கணக்கில் கறி சாப்பிட்டவருக்கு தடை விதித்த சீன உணவகம்
- 'ஆமைக்கறி, பூனைக்கறி': சீமான் பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி பேச்சால் சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












