தஞ்சை மாணவி சடலம்: பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

girl suicide

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தஞ்சாவூரில் தற்கொலை செய்துகொண்ட 12ஆம் வகுப்பு மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த மாணவியின் தந்தை முருகானந்தம் இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் முறையிட்டார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை அவசர வழக்காக இன்று நீதிபதி விசாரித்தார். அப்போது மாணவியின் தரப்பில், "அந்த மாணவி நன்றாகப் படிக்கக்கூடியவர். அவரை விடுதியின் கணக்கு வழக்குகளைப் பார்க்கச் சொன்னதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அரசுத் தரப்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கூடத்தில் மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலைசெய்து கொள்வதாக மாணவி வாக்குமூலம் அளித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. இப்போது அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை தெரிவிக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், "இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட சகாய மேரி 18ஆம் தேதியே விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டார்" என்று தெரிவிக்கப்பட்டது.

Court order

பட மூலாதாரம், Getty Images

இதைக் கேட்ட நீதிபதி, "மாணவியின் தந்தை மதம்மாற்றம் குறித்து காவல்துறையிடம் ஏதும் தெரிவித்துள்ளாரா" என்று கேள்வியெழுப்பினார். காவல்துறையினர் அது குறித்து ஏதும் விசாரிக்கவில்லையென மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, மாணவிக்கு ஏதாவது பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் உள்ளதா என்று கேட்டார். அப்படி ஏதும் இல்லையென மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதி, "அப்படியானால், மறு உடற்கூராய்வுக்கு தேவையேதும் இல்லை. திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜனவரி 16ஆம் தேதியே நீதித் துறை நடுவர் முன்பாக மாணவியின் வாக்குமூலத்தைப் பெற்றிருக்கிறார். அதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோ ஒன்றும் சமூகவலைதளங்களில் வலம் வருகிறது. இது முரண்பாடாக இருக்கிறது.

காணொளிக் குறிப்பு, அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன? முழு விவரம் இதோ

இதற்கிடையில் மாணவியின் உடற்கூராய்வு தஞ்சை மருத்துவக் கல்லூரியின் தடயவியல் மருத்துவர்கள் உதயபானு, அருள்மொழி கண்ணன் ஆகியோரால் செய்யப்பட்டுவிட்டது. பாலியல் தொடர்பான சந்தேகம் ஏதும் எழுப்பப்படவில்லை என்பதால் மறு உடற்கூராய்வுக்கு அவசியமேதும் இல்லை. ஆகவே மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய வேண்டும்.

அதே நேரம், மாணவியின் பெற்றோர் நாளை தஞ்சை நீதித் துறை நடுவர் முன்பாக ஆஜராகி மாணவி தங்களிடம் கூறியது குறித்தும் அவரது மரணம் குறித்தும் வாக்குமூலம் அளிக்க வேண்டும். இதனை பதிவுசெய்து சீலிட்ட கவரில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் விசாரணையை திங்கட்கிழமை மாலை நான்கு மணிக்கு பட்டியலிட வேண்டும்" என உத்தரவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: