அரியலூர் மாணவியின் மரண வாக்குமூலம் - உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தின் திருச்சியில் பிளஸ்டூ மாணவி தற்கொலைக்கு முயன்று பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஒரு வாரம் கழித்து அவரது உயிர் பிரிந்துள்ளது.
அவர் மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டதாலேயே தற்கொலைக்கு முயன்றதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானதால் இந்த சம்பவம் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அந்த பள்ளியின் பிளஸ் டூ மாணவி, அரியலூரில் உள்ள தனியார் கிறிஸ்துவ கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு முதல் படித்து வந்தார். பள்ளி அருகே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 9ஆம் தேதி தங்கும் விடுதியில் தொடர்ந்து வாந்தி எடுத்தார். இதையடுத்து அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்களிடம் தான் நச்சுத்தன்மை வாய்ந்த மருந்தை உட்கொண்டதாக அந்த மாணவி கூறியுள்ளார்.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவி தன்னை பள்ளியில் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் அதற்கு தான் ஒத்துவராததால் திட்டியும் அதிக வேலை வாங்கியும் கொடுமைப்படுத்தியதாக பேசுவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் சிலரால் பகிரப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அந்த மாணவி தங்கியிருந்த விடுதி நிர்வாகியை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அவர் ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன்பாக அவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.
இந்த விவகாரத்தில் மாணவிக்கு ஆதரவாக விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளின் உள்ளூர் பிரமுகர்கள் தலையிட்டு உயிரிழந்த மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தினார்கள் என்று கூறி சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட நபர் குறித்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையே, மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிப்ரியா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், மத பிரசாரம், மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது பற்றி எந்த தகவலும் இதுவரை தங்களுடைய விசாரணையில் தெரிய வரவில்லை என்று கூறினார்.
காவல்துறை மேற்கொண்ட முதல்நிலை விசாரணை, காவல்துறைக்கு அளித்த காணொளி வாக்குமூலம், மாஜிஸ்திரேட் முன்பு இறக்கும் தருவாயில் அளித்த வாக்குமூலத்திலும் மதமாற்றம் தொடர்பான தகவல்கள் எதுவும் எழவில்லை என்று தெரிவித்தார்.
அந்த மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்களை மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரவளிப்ரியா எச்சரித்தார்.
இதுபோன்ற விவகாரத்தில் சட்டப்படி பாதுகாப்பு தேவைப்படும் எந்தவொரு நபராக இருந்தாலும், அவரது அடையாளத்தை எந்த வழிகளில் வெளியிட்டாலும் அது சட்டப்படி தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
குறிப்பிட்ட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவியோ அவரது பெற்றோரோ மதமாற்றம் அல்லது அதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்று மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிப்ரியா தெரிவித்தார்.
ஆனால், மாணவியின் பெற்றோர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தங்களுக்கு பேட்டியளித்தபோது தங்களுடைய மகள் மதமாற்ற கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டதாக கூறினார்களே என்று கேட்டபோது, அது பற்றிய தகவல் எங்களுடைய விசாரணையில் தெரிய வரவில்லை. ஆனாலும், எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம் என்று ரவளிப்ரியா தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- "கொரோனா பேரிடர் இன்னும் முடிவை நெருங்கக்கூட இல்லை " - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்
- இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த தலைவர் யார்? வரிசையில் திறமைசாலிகள், அனுபவஸ்தர்கள்
- உடற்பயிற்சி, வாழைப்பழம், திராட்சை மூலம் உடலுறவில் உச்சத்தை எட்ட முடியுமா?
- தமிழ்நாடு அரசின் கொரோனா ஊரடங்கு: நோக்கம் நிறைவேறியதா?
- நரேந்திர மோதியின் யூட்யூப் பக்கத்தில் இருந்து 'டெலிப்ராம்ப்டர்' நிமிடங்கள் நீக்கம் - தொடரும் சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








