தமிழ்நாடு: கொரோனா பரிசோதனைகளை அரசு குறைத்தது ஏன்?- ஊரடங்கு அறிவித்தும் குறையாத நோய்த் தொற்று

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ்
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் பொது சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. தொற்று அதிகரித்தாலும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன, என்கின்றனர் மருத்துவர்கள். என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு தொழில் நிமித்தமாக செல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. `பொங்கல் பண்டிக்கைக்காக சென்னையில் இருந்து சென்ற மக்கள் மீண்டும் திரும்பி வருவதால் வரும் நாள்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கலாம்' எனவும் சுகாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், `இந்தியா முழுவதும் தொற்று பாதிப்பு 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதுவே தமிழ்நாட்டில் 16, 17 என்ற சதவீத அளவில் உள்ளது. இங்கு பாதிப்பு குறைவு என்றாலும் தினசரி இரண்டாயிரம் என்ற அளவில் தொற்று அதிகரித்து வருகிறது. பொங்கல் விடுமுறைக்குப் பிறகு மக்கள் ஊர் திரும்புவதால் ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து இரண்டு நாள்களில் தெரியவரும்' என்றார்.

இரண்டு மடங்காக பாதிப்பு உயர்வு

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு உள்ளதால் தொற்றுப் பரவலின் வேகம் கட்டுக்குள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஜனவரி 9ஆம் தேதியன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் நாளொன்றுக்கு 11,000 இருந்த தொற்று பாதிப்பானது, தற்போது 23,975 ஆக அதிகரித்துள்ளதையும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ` கடந்த 1ஆம் தேதியில் இருந்து தற்போது வரையில் 191 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 163 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த 191 பேரில் 181 பேருக்கு இணை நோய்கள் இருந்துள்ளன. அந்த வகையில் இணை நோய்களுடன் இருந்த 191 பேரில் 159 முதியவர்கள் இறந்துள்ளனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

` கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் 131 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் அதிக இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தடுப்பூசி போடாமல் இணை நோய் பாதிப்புள்ள முதியவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துக் காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. எனவே, முதியவர்களைக் காப்பாற்றுவதற்கு விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும்' எனவும் செல்வவிநாயகம் குறிப்பிட்டிருந்தார்.

பரிசோதனைகள் குறைக்கப்பட்டதா?

தமிழ்நாடு கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாடு கொரோனா வைரஸ்

`` தமிழ்நாட்டில் கோவிட் பரிசோதனைகள் என்பது 1 லட்சத்து 35 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் இருந்து பொங்கலுக்காக 3,500 பேருந்துகள் வெளியில் சென்றுள்ளன. வெளிமாநிலத்தில் இருந்தும் மக்கள் தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளனர். மாவட்டங்களுக்குள் பயணம் நடந்துள்ளதால் தொற்று அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால், பல மாதங்களாக நமக்கு தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும் இதே எண்ணிக்கையில் பரிசோதனைகள்தான் நடந்தன. தற்போது தொற்று அதிகமாகும்போது 2 லட்சத்துக்கும் மேல் ஆர்டிபிசிஆர் சோதனைகளைச் செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு தமிழ்நாடு அரசு செய்யவில்லை'' என்கிறார், மருத்துவர் சாந்தி. இவர் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் சாந்தி, `` கோவிட் பரிசோதனை தொடர்பாக மத்திய அரசும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிகப்படியாக பரிசோதனைகளை மேற்கொண்டால் முக்கியமான நேரத்தில் உபகரணங்கள் இல்லாமல் போகும் என்கின்றனர். இதனால் ஆர்டிபிசிஆர் கருவிகளுக்கான தேவைகளும் அதிகரிக்கும். சுகாதாரப் பணியாளர்களின் நேரமும் விரயம் ஆவதால், அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு சோதனையை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வோர் அலையிலும் தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து அரசு நடவடிக்கை எடுக்கிறது. மூன்றாவது அலையில் ஒமிக்ரான் என்பது லேசான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் பரிசோதனை முறைகளையும் அரசு மாற்றிவிட்டது. `வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டால், மற்றவர்களுக்கு அறிகுறி இல்லாவிட்டால் பரிசோதனை செய்ய வேண்டாம்' என அரசு தெரிவித்துள்ளது.

கோவிசெஃல்ப் பரிசோதனை சரியா?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ்

அந்தவகையில், யாருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதோ, அதில் 60 வயது உள்பட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்தால் போதும் என அரசு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் அலையால் 5 முதல் 8 மடங்கு தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒமிக்ரானால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருப்பதால் பரிசோதனை தொடர்பான அரசின் அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொள்ளலாம்'' என்கிறார்.

அதேநேரம், தொற்று எண்ணிக்கையை பார்த்து ஒமிக்ரானும் கொரோனாவும் குறைந்துவிட்டதாக நினைப்பது தவறு எனக் குறிப்பிடும் மருத்துவர் சாந்தி, `` கோவிசெஃல்ப் உபகரணங்கள் மூலம் கோவையில் அதிகப்படியான பரிசோதனைக் கருவிகள் விற்கப்படுகின்றன. அந்தவகையில், ரேபிட் ஆன்ட்டிஜன் சோதனையை 100 பேருக்கு செய்தால் 50 பேருக்கு மட்டும் பாசிட்டிவ் எனக் காட்டுகிறது. மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனையை செய்யும்போது பாதிப்பு துல்லியமாக தெரிகிறது. இதனை முறைப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை செயலரும் கூறியுள்ளார். முதல் அலை, இரண்டாம் அலையைவிட தற்போது வந்துள்ள ரேபிட் ஆன்டிஜன் சோதனை வலுவாக உள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால், வீட்டில் பரிசோதனையை செய்து கொள்வதைவிட உரிய மையங்களில் மேற்கொள்வதே சிறந்தது'' என்கிறார்.

மேலும், `` ஆர்டிபிசிஆர் சோதனையை மேற்கொள்ளும் நபர்களும் மாநகராட்சிப் பணியாளர்களிடம் தவறான செல்போன் எண்ணைக் கொடுக்கின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 40 பேர் வரையில் தவறான எண்ணைக் கொடுக்கின்றனர். இவ்வாறு தவறான எண்ணை கொடுத்தால் அவர்களை எப்படிக் கண்டறிய முடியும்?'' எனவும் கேள்வியெழுப்புகிறார் மருத்துவர் சாந்தி.

தடுப்பூசி போடாததால் அதிக பாதிப்பா?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ்

இதுதொடர்பாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணிராஜனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` கடந்த சில நாள்களாக சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவனையில் ஐ.சி.யு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள்தான்'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` நான் கடந்த 17ஆம் தேதி அரசு மருத்துவமனையில் உள்ள ஐ.சி.யு வார்டில் ஆய்வு செய்தபோது, 18 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 16 பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்துள்ளனர். மற்ற இரண்டு பேருக்கு இதய நோய் பாதிப்பு இருந்துள்ளது. அவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. 16 பேரும் தடுப்பூசி போடாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது'' என்கிறார்.

`` ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயது இளைஞர் ஒருவர் பயத்தின் காரணமாக தடுப்பூசி போடாமல் இருந்துள்ளார். அவரது நுரையீரலில் 85 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை'' எனக் குறிப்பிடும் தேரணி ராஜன், `` ஊரடங்கு அறிவிப்பால் தொற்றுப் பரவல் கட்டுக்குள் உள்ளது. தற்போது வரையில் 1,52,000 என்ற அளவில் கொரோனா பரிசோதனைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. லேசான அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதில்லை'' என்கிறார்.

``கோவிசெல்ஃப் உபகரணம் மூலமாக வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்கிறவர்களின் விவரங்கள் முறையாகக் கண்காணிக்கப்படுகிறதா?'' என்றோம். `` ஆமாம். அவ்வாறு பரிசோதனை செய்து கொள்கிறவர்களின் விவரங்களை முழுமையாகக் கண்காணித்து வருகிறோம். இந்த வாரத்தில் அதிகப்படியானவர்கள் தொற்றால் பாதிக்கப்படலாம் என நினைக்கிறோம். டெல்டாவும் ஒமிக்கரானும் பரவிக் கொண்டிருந்தாலும் ஒமிக்ரான் பரவல் சற்று அதிகமாகவே உள்ளது'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: