வங்காநரி ஜல்லிக்கட்டு: சேலத்தில் இப்படி ஒரு போட்டியா? கள உண்மை என்ன?

நரி பொங்கல்
    • எழுதியவர், ஏ.எம் சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே உள்ள இடத்தில் வங்காநரி ஜல்லிக்கட்டு என்ற பெயரில் தடையை மீறி ஒரு போட்டி நடத்தப்படுவதாக பரவலாக தகவல்கள் வெளி வரும் நிலையில், அதன் உண்மை நிலை என்பதை ஆய்வு செய்தது பிபிசி. அங்கு என்ன நடக்கிறது?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்ன நாயக்கன் பாளையம் கொட்டவாடி , கோபாலபுரம் சிங்கிபுரம் , ரங்கனூர் உள்ளிட்ட சில கிராமங்களில் பொங்கல் பண்டிகை சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வங்காநரியைப் பிடித்து வந்து அதை மாலையிட்டு அலங்கரித்து பின்னர் அதனை ஒரு கயிற்றில் கட்டி கிராமம் முழுவதும் ஓட விட்டு மக்கள் அனைவரும் அதை வணங்கி மகிழ்ந்தனர்.

அப்படி செய்தால் ஊரில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காது என்றும் தை பிறந்து காணும் பொங்கல் அன்று நரி முகத்தில் விழித்தால் அந்த ஆண்டு விவசாயம் செழிப்பாகவும் அமோக விளைச்சலும் இருக்கும் என்றும் இப்பகுதி கிராம மக்களில் சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை அடிப்படையில் வங்காநரி ஜல்லிக்கட்டு பழைய காலங்களில் நடந்து வந்தது.

ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி நரியை பிடித்தாலும் நரியை துன்புறுத்தினாலும் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்து வந்தனர்.

இதையடுத்து சில கிராமத்தினர் அந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டனர்.

ஆனால்....

இந்த எச்சரிக்கையையும் மீறி சிலர் வருடந்தோறும் வாழப்பாடியில் உள்ள சில கிராம மக்கள் நரிப் பொங்கலை வெகு விமர்சையாக நடத்தி வருகின்றனர்.

நேற்று 17ஆம் தேதி சின்னமநாயக்கன்பாளையம் பகுதி கிராம மக்கள் அருகிலுள்ள வயல்வெளி பகுதியில் இருந்து நரியை பிடித்து வந்துள்ளனர்.

பிறகு நரியை பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். அங்குள்ள மாரியம்மன் கோயில் பகுதியிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக பொது மக்களின் தரிசனத்திற்காக நரியை பல்லக்கில் தூக்கிச் சென்று வழிபட்டுள்ளதாகவும் தெரிகிறது.

என்ன நடந்தது?

நரி பொங்கல்
படக்குறிப்பு, நரியை கட்டி வீதிதோறும் தூக்கிச் செல்லும் ஊர் மக்கள்

இது குறித்து சின்னமநாயக்கன்பாளையம் பகுதி கிராம மக்கள் சிலரிடம் பேசினோம். தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாத அவர்கள் பல தகவல்களை பகிர்ந்தனர்.

"நரியை தெய்வமாக வணங்கி நரி முகத்தில் விழிக்கும் எங்கள் கிராம மக்களின் நம்பிக்கையை பத்திரிக்கையாளர்கள் சிலர் நரி ஜல்லிக்கட்டு என தவறாக சித்திரித்து செய்திகள் வெளியிட்டதால் எங்களது நம்பிக்கை பேசு பொருளானது. இது நரியாட்டம். அதாவது நரி முகத்தில் விழித்து பொங்கல் கொண்டாடுவது," என்றனர்.

முந்தைய ஆண்டுகளில் காளைகளை வைத்து நடத்தப்படும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நேரத்தில் நரியை வைத்து நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கும் தடை என தவறான செய்திகள் வந்தன.

இதையடுத்து வனத்துறையினரும் நரியை பிடிப்பது வனத்துறை சட்டப்படி குற்றம் என்ன வருடந்தோறும் எங்களை எச்சரிக்கை செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

அதே போல நரி முகத்தில் விழிக்கும் நரியாட்ட பொங்கல் திருவிழாவை "நரி ஜல்லிக்கட்டு" என தவறாக சித்திரித்து செய்திகள் வெளியிட்டதால் பத்திரிக்கையாளர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை, என்று ஊர் மக்கள் குறிப்பிட்டனர்.

ஊர் கட்டுப்பாடு

நரி பொங்கல்

"இந்த நிகழ்வை செல்பேசியில் படம் பிடிக்க அனுமதி இல்லை.. இனிமேலாவது நரியை தெய்வமாக வழிபடும் கிராம மக்களுக்கு துணையாக வனத்துறையினர் இருக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்," அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து பிபிசி தமிழுக்காக வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகனிடம் பேசினோம்.

காணொளிக் குறிப்பு, வீட்டில் குழந்தை போல வளரும் அணில்

"வன விலங்குகளை பாதுகாக்கும் வன உயிர் பாதுகாப்பு சட்டம் 1972 ஆம் ஆண்டு நிறைவேறிய போது இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பழைய காலங்களில் நரியைப் பிடித்துவந்து அதை கயிற்றில் கட்டி ஊர் முழுவதும் சுற்றி வலம் வருவார்கள். இது வங்காநரி ஜல்லிக்கட்டு என்பார்கள் ஆனால் தற்போது சின்ன நாயக்கன் பாளையத்தில் நடந்திருப்பது அதுபோன்ற ஒரு செயல் அல்ல," என்றார்.

"இந்த பகுதி மக்கள் நரியை பிடித்து வந்து மாலை போட்டு, பொட்டு வைத்து தெய்வமாக வழிபடுகிறார்கள். ஊர் மக்கள் கட்டி வைக்கப்பட்ட நரியை வழிபடுகிறார்கள். திரும்பவும் பிடித்து வந்த பகுதியிலேயே விட்டுவிட்டதாக நாங்கள் விசாரணை செய்ததில் தகவல் கிடைத்திருக்கிறது," என்று அவர் கூறினார்.

ஆனால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி இப்படி செய்வதும் கூட தவறுதான். இதில் தொடர்புடையவர்கள் மீது வனத்துறை விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த பகுதியில் நரிகளை தேடி ஊர் மக்கள் வனப்பகுதிக்கு செல்வதில்லை. கிராமத்தினர் வசிக்கும் பகுதியிலேயே உள்ள சின்ன கரடு, வயல்வெளி குன்று ஆகிய பகுதியிலேயே அவற்றை எளிதாக பிடித்து வருகிறார்கள்.

களத்தில் உள்ளவர்களிடம் பேசியபோதும், இறை வழிபாடு முடிந்தவுடன் பிடிக்கப்பட்ட நரியை மீண்டும் எங்கு பிடித்தார்களோ அங்கேயே கொண்டு சென்று விட்டுவடுவதை ஊர்மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: