அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
அரியலூரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டதாலேயே தற்கொலைக்கு முயன்றதாக சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் அப்படியேதும் அவர் கூறவில்லையென்கிறது காவல்துறை.
அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 9ஆம் தேதி அந்த மாணவி தங்கும் விடுதியில் தொடர்ந்து வாந்தி எடுத்தார். இதற்கு அடுத்த நாள் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அந்த மாணவியை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் தொடர்ந்து வயிற்றில் பிரச்சனை இருக்கவே, அருகில் உள்ள மருத்துவமனையில் காட்டியுள்ளனர்.
ஆனால், ஏதும் சரியாகாத நிலையில், அவரை விசாரித்தபோது தான் பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் ஜனவரி 15ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், அதற்குள் அவருடைய கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவி இரண்டு வருடங்களுக்கு முன்பாக தன்னை பள்ளியில் மதமாறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அதற்கு தான் ஒத்துவராததால் திட்டியும் அதிக வேலை வாங்கியும் கொடுமைப்படுத்தியதாக பேசுவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் சிலரால் பகிரப்பட்டது.
சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த காணொளியைப் பகிர்ந்தனர்.
இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி தஞ்சாவூர் நீதித் துறை நடுவரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மாணவி தங்கியிருந்த விடுதி நிர்வாகி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அந்த மாணவி ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் மிகப் பெரிதாக உருவெடுத்தது. ஏற்கெனவே தஞ்சாவூரைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளின் உள்ளூர் பிரமுகர்கள் தலையிட்டு, மத மாற்றம் செய்ய முயற்சித்ததால்தான் மாணவி உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்து, பள்ளிக்கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.
இதற்கிடையில் இது தொடர்பாக ட்வீட் ஒன்றை வெளியிட்ட மாநில பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை,"இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்," என்று குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், ㅤ
அத்துடன், அந்த மாணவி பேசும் வீடியோ காட்சியையும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் இணைத்திருந்தார்.
இந்த விவகாரம் பெரிதாக உருவெடுத்ததையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிப்ரியா வியாழக்கிழமையன்று இரவில் செய்தியாளர்களிடம் பேசினார்.
"சிகிச்சையில் இருந்த அந்த மாணவியிடம் மருத்துவர்களின் அனுமதியுடன் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அந்த வாக்குமூலத்தில் மதமாற்றம் தொடர்பாக அந்த மாணவி எந்தவிதத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அதுபோல, அவரது பெற்றோரும் சொல்லவில்லை. மாஜிஸ்திரேட் கொடுத்த தகவலிலும் அதுபோன்ற தகவல் இல்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை," என்றார்.
இந்த நிலையில், அந்த மாணவி சிகிச்சையில் இருப்பது போலவும், அவர் பேசுவது போலவும் சமூக வலைதளங்களில் விடியோ பரப்பப்பட்டு வருகிறது. இது சிறார் சட்டப்படி குற்றம். இதை எடுத்தது, பரப்பியது யார் என்பது குறித்து மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், மாணவியின் பெற்றோர் மீண்டும் புகார் ஒன்றை அளித்தனர். அந்தப் புகாரில், மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தியதாலேயே மாணவி விஷம் குடித்திருக்கலாம் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து, அது தொடர்பாகவும் வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் துவங்கியிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில், மாணவி நீதித் துறை நடுவருக்கு அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
அதில், மாணவி தங்கிப் படித்த விடுதியில் இருந்த சகாய மேரி என்ற வார்டன், இந்த மாணவியை கணக்கு எழுதும்படி தொடர்ந்து துன்புறுத்திவந்ததாகவும், படிக்க விடாமல் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.
ஏதாவது பொருட்கள் காணாமல் போனால், தன்னை சந்தேகப்பட்டு திட்டுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த முறை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கும் வீட்டுக்கு அனுப்பாமல் கணக்கு வழக்குகளைப் பார்க்கச் சொன்னதாகவும் கூறிய மாணவி, இந்தக் கொடுமை தாங்காமல்தான் தான் 9ஆம் தேதியன்று மாலை விடுதியில் இருந்த களைக்கொல்லி மருந்து எடுத்து சாப்பிட்டுவிட்டதாக மாணவி கூறியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விடுதி அமைந்துள்ள மைக்கல்பட்டியின் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயராஜிடம் கேட்டபோது, விடுதி குறித்து நேர்மறையான கருத்துகளையே தெரிவித்தார்.
"அந்த மாணவி மிகவும் புத்திசாலி. பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண்களை பெற்றிருந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விடுதி நிர்வாகமே துணி எடுத்துக் கொடுத்தது. இம்மாதிரி சூழலில் மதமாற்ற புகார்கள் எழுந்திருப்பது வருத்தமளிக்கிறது. அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லையென்றே கருதுகிறேன்" என்று கூறினார்.

பட மூலாதாரம், Balakrishnan FB
இந்த விவகாரம் குறித்து, திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனிடம் பிபிசி கேட்டபோது, "மாணவியை வேலை செய்யச் சொல்லி விடுதி வார்டன் துன்புறுத்தியதாக பெற்றோர் முதலில் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாணவியின் பெற்றோர் இரண்டாவதாக நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில், மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
மேலும், மாணவி பேசிய வீடியோவை முதலில் சமூக ஊடகங்களில் பரப்பியதாக விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த பிரமுகர் முத்துவேல் என்பவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்த மற்றவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்," என்று .ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இப்போது மாணவியின் பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ளது. அவரது உடல் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கூட நிர்வாகம், விடுதி நிர்வாகம் ஆகியோரது கருத்தைப் பெற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. மாணவியின் தந்தையும் அழைப்புகளை எடுக்கவில்லை.
பிற செய்திகள்:
- உ.பி தேர்தலில் களமிறங்கும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
- நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்
- ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












