தவெக போன்ற கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் எப்படி ஒதுக்கப்படுகிறது? 4 முக்கிய தகவல்

பட மூலாதாரம், TVK
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் எப்படி சின்னங்களை ஒதுக்கீடு செய்கிறது?
தேர்தல் ஆணையம் ஆணையில் என்ன கூறியுள்ளது?
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி, அதற்கான அறிவிப்பை ஜனவரி 22ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். அதே அறிவிப்பில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்தும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் எல்லாம் விசில் சின்னமும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் டார்ச்லைட் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இருந்தபோதும், இந்தக் கட்சிகள் போட்டியிடாத தொகுதிகளில், அந்தச் சின்னம் வேறு யாருக்காவது ஒதுக்கீடு செய்யப்படலாம் என்பதையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இந்தச் சின்னம் இப்போதைக்கு இந்தத் தேர்தலில் மட்டும்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அரசியல் கட்சிகள் பொதுவான சின்னத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்களில் போட்டியிட பொதுவான சின்னம், 'The Election Symbols (Reservation and Allotment) Order 1968'-ல் வரையறுக்கப்பட்ட விதிகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தரமாக ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்தச் சின்னம் வேறு கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது. பதிவுசெய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பொதுவான சின்னத்தைப் பெற சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன்படி, ஒரு கட்சி பொதுச் சின்னத்திற்காக விண்ணப்பிக்கும்போது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் பிரிவு 29Aன் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சட்டமன்றம் அல்லது மக்களவையின் பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பிருந்து தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சட்டப்பேரவையோ, மக்களவையோ கலைக்கப்பட்டால், அவை கலைக்கப்பட்ட தேதியிலிருந்து, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
வரவிருக்கும் தேர்தலில் அந்தக் கட்சி இரண்டு மக்களவைத் தொகுதி அல்லது ஐந்து சதவிகித சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆனால், இரண்டு முறை மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும். மூன்றாவது முறையும் இந்தச் சலுகையைப் பெற வேண்டுமானால், அந்தக் கட்சி போட்டியிட்ட மாநிலத்தில் பதிவான, மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தது ஒரு சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், கடந்த 3 நிதியாண்டுகளில் பெறப்பட்ட நன்கொடை விவரங்கள், தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு கணக்கு வழக்குகளை அந்தந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால், கட்சி கடைசியாகப் போட்டியிட்ட இரண்டு தேர்தல்களுக்கான தேர்தல் செலவின அறிக்கைகளை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டு கட்சிகள் ஒரு தேர்தலில் ஒரே சின்னத்தை கோரினால்?
பதிவு செய்யப்பட்ட ஆனால், அங்கீகரிக்கப்படாத இரண்டு கட்சிகள் ஒரு தேர்தலில் ஒரே சின்னத்தை பொது சின்னமாக அளிக்க வேண்டுமெனக் கோரியிருந்தால், அந்தச் சின்னம் யாருக்கு அளிக்கப்படும்?
சின்னங்கள் ஆணையின் விதி 10 B, ஒரு 'பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு இரண்டு பொதுத் தேர்தல்களுக்கு ஒரு பொதுவான சின்னத்தைப் பயன்படுத்தும் சலுகையை வழங்குகிறது.
ஒரு கட்சி இதற்கு முன் இப்படி பொதுச் சின்னத்தைப் பெற்றபோது, அந்த மாநிலத்தில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் 1% பெற்றிருந்தால் மட்டுமே அடுத்தடுத்த தேர்தல்களில் பொதுச் சின்னத்தைப் பெறத் தகுதி பெறும். அப்படி தகுதி பெற்றாலும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி இப்படிச் சின்னத்தைப் பெறுவதில் சிக்கலைச் சந்தித்தது. அந்தக் கட்சி அதற்கு முந்தைய இரு தேர்தல்களில் 'கரும்பு விவசாயி' சின்னத்தில் போட்டியிட்டு ஒரு சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக அந்தக் கட்சி 'கரும்பு விவசாயி' சின்னத்திற்கு விண்ணப்பித்தபோது, அந்தக் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அதே சின்னத்தைக் கோரியிருந்த 'பாரதிய பிரஜா ஐக்யதா' என்ற கட்சிக்கு அந்தச் சின்னம் ஒதுக்கப்பட்டது. இத்தனைக்கும் அந்தக் கட்சி தமிழ்நாட்டில் அதுவரை போட்டியிட்டதில்லை.

பட மூலாதாரம், NTK
நாம் தமிழர் கட்சிக்கு முன்பாகவே, அந்தக் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தைக் கோரியதால், அக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
"ஒரு அவையின் பதவிக் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பிலிருந்து தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்பு வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி, நவம்பர் மாதத் துவக்கத்தில் சின்னத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். நாங்கள் நவம்பர் 13ஆம் தேதி விண்ணப்பித்தோம். ஆனால், பாரதிய பிரஜா ஐக்யதா கட்சி நவம்பர் 10ஆம் தேதி விண்ணப்பித்ததாகக் கூறி அக்கட்சிக்கு சின்னம் வழங்கப்பட்டது" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளரான பாக்கியராசன்.
அதே நேரம், ஒரே நாளில் இரு பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஒரே பொதுச் சின்னத்தைக் கோரினால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.

2024ஆம் ஆண்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பொதுச் சின்னமாக பானை சின்னத்தைக் கோரியது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் வென்றும் பொதுச் சின்னமாக பானை சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தது. குறைந்தபட்ச நிபந்தனையான ஒரு சதவிகித வாக்குகளை அக்கட்சி பெறவில்லையென காரணம் கூறப்பட்டது.
இருந்தபோதும், அக்கட்சியின் வேட்பாளர்கள் தொல். திருமாவளவனும் து. ரவிக்குமாரும் போட்டியிட்ட தொகுதிகளில் சுயேச்சைகளுக்கான சின்னம் என்ற அடிப்படையில், அந்தந்த தொகுதிகளில் உள்ள தேர்தல் அதிகாரிகளால் அவர்களுக்கு பானை சின்னமே ஒதுக்கப்பட்டது.
சாதாரணமான பார்வையில், 6% அதிகமான வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருந்த விசிகவுக்கும் 2024ல் பொதுச் சின்னத்தை ஒதுக்க மறுத்தது முரணானதாகத் தெரியலாம்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தால் என்ன நன்மை?
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தால் நிரந்தர பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வரிசையில் முதலில் இடம்பெறுவார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












