இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

இந்தி பாடம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என்றும் இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுவது மாநில அரசின் கொள்கை முடிவு என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அறக்கட்டளை ஒன்றின் சார்பில் அர்ஜுன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தன்னுடைய மனுவில், "தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடப்பதும் மாநில அரசும் அதனை எதிர்ப்பதும் தவறு. மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக்கொண்டால் மாணவர்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கும். தேசிய கல்விக் கொள்கையை அரசியலாக்கக்கூடாது; அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத், நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கேள்வி

அப்போது நீதிபதிகள், "எத்தனை மொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்பது மாநில அரசின் முடிவுதான் என்றாலும், கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது நல்ல விஷயம்தானே," என்று கூறினர்.

"தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் அப்படித்தானே இருக்கிறது," எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

"தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றால் இந்தி தெரியாவிட்டால் சிரமமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மும்மொழிக் கொள்கையை அரசு ஏன் அனுமதிக்கக்கூடாது" எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அரசு விளக்கம்

இந்த வழக்கில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர், "இந்தியைக் கற்றுக்கொள்ள யாருக்கும் தடை விதிக்கவில்லை. அதே நேரத்தில் இரு மொழிக் கொள்கையை அமல்படுத்துவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு" என்று தெரிவித்தார்.

இது தொடர்பான விளக்கத்தை விரிவான பதில் மனுவாகத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: