கனடா எல்லையில் குஜராத்திகள் இறந்தது எப்படி? போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்

The Patel family

பட மூலாதாரம், BBC Gujarati

படக்குறிப்பு, இந்தக் குடும்பம் 11 மணிநேரம் உறைபனி குளிரில் நடந்திருக்கலாம் என்கிறது கனடா போலீஸ்
    • எழுதியவர், ஹோல்லி ஹோண்டரெச்
    • பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன்

கனடா-அமெரிக்க எல்லையில் இருந்து சில அடி தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு இந்தியர்களின் மரணத்தை அந்த நாடுகளுக்குள் ஆள் கடத்திக் கொண்டு வரும் செயல்பாடுடன் தொடர்புடையது என்று கனடிய அதிகாரிகள் நம்புகின்றனர்.

கனடாவின் மனிடோபாவில் கடும் குளிரின் காரணமாக ஜெகதீஷ் படேல் (39), வைஷைல்பென் படேல் (37), மற்றும் அவர்களது குழந்தைகள் விஹாங்கி (11), தர்க்மிக் (3) ஆகியோர் உயிரிழந்தனர். படேலின் குடும்பம் நடந்தே எல்லையை கடக்க முயன்ற இரவில் அங்கு வெப்பநிலை -35C (-31F) ஆக குறைந்திருந்தது.

ஜனவரி 19ஆம் தேதி எல்லைக்கு வடக்கே ஒரு வயலில் இந்த குடும்பத்தினரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவர்களின் அடையாளங்கள் கனடாவின் இந்திய தூதரகத்திடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கனடிய போலீஸ் (RCMP) மூலம் அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய கனடா காவல்துறை கண்காணிப்பாளர் ராப் ஹில், படேல் குடும்பம் முதலில் ஜனவரி 12ஆம் தேதி டொராண்டோவிற்கு விமானத்தில் வந்தடைந்ததாக கூறினார்.

அங்கிருந்து, ஜனவரி 18 அல்லது அதையொட்டிய நாட்களில் எமர்சன் - எல்லை நகருக்கு செல்லும் முன், அந்த குடும்பம் மேற்கு நோக்கி மனிடோபா மாகாணத்துக்குச் சென்றனர். மறுநாள் இரவு அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

"எமர்சனில் உள்ள கனடா-அமெரிக்க எல்லைக்கு அருகில் கைவிடப்பட்ட வாகனம் எதுவும் காணப்படவில்லை. அதை வைத்து படேலின் குடும்பம் நடை பயணமாகவே இந்த பாதையில் வந்திருக்க வேண்டும். இந்த பயணத்தை தொடங்கும் முன் யாரோ அவர்களை இறந்த இடத்துக்கு அருகே விட்டுச் சென்றிருக்க வேண்டும்," என்று காவல்துறை நம்புகிறது.

கனடா குடியேறிகள்

பட மூலாதாரம், RCMP Manitoba

படக்குறிப்பு, அடர்த்தியான உறைபனியில் செல்ல போலீசார் ஸ்னோமொபைல்களையும் பனிப்பரப்பில் ஓடும் வாகனங்களையும் பயன்படுத்தினர்.

"கனடாவை பற்றி முன் அறிமுகமில்லாத ஒரு குடும்பத்துக்கு இந்த பயணம் மிக நீண்டதாக இருந்திருக்கும்" என்று அதிகாரி ஹில் கூறினார்.

இந்த குடும்பத்தின் பயணத்திற்கு யாரோ ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனவரி 19ஆம் தேதி மாலையில் எல்லை கண்காணிப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட சில இந்தியர்கள் அடங்கிய குழுவுடன் படேல் குடும்பம் வந்ததா என்பது குறித்து கனடா காவல்துறை கருத்து தெரிவிக்கவில்லை.

அந்த குழுவை கடத்தி வந்ததாக 47 வயதான ஃபுளோரிடாவில் வசிக்கும் ஸ்டீவ் ஷாண்ட் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அந்த நபர் 15 இருக்கைகள் கொண்ட வேனை ஓட்டி வந்தபோது எல்லை அதிகாரிகளிடம் பிடிபட்டிருக்கிறார். படேல் குடும்பம் நள்ளிரவில் வந்ததாக சந்தேகிக்கப்படும் நாளில்தான் அவரும் பிடிபட்டிருக்கிறார்.

அவரது காரில் இரு இந்திய பயணிகளும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், படேல் குடும்பத்தின் மரணம் மனிடோபாவில் உள்ள இந்திய சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மனிடோபாவின் இந்திய சங்கத்தின் தலைவர் ராமன்தீப் கிரேவால் பிபிசியிடம் கூறுகையில், "ஏதோ தவறு நடந்துவிட்டது போன்ற குற்ற உணர்வு பொதுவாக எழுகிறது. படேலின் குடும்பம் கனடாவின் குளிர்கால இரவில் எதற்காக நடந்தே வந்தனர் என்ற கேள்விகள் உள்ளன. அந்த குடும்பம் 11 மணி நேரம் நடந்ததாக வதந்திகள் வருகின்றன," என்றார் கிரேவால்.

"அத்தகைய கடுமையான குளிரில் உங்களால் அத்தனை மணி நேரம் உறைந்திருக்க முடியாது," என்று அவர் கூறினார்.

இதுபோன்ற கேள்விகளை வின்னிபெக்கில் உள்ள இந்திய சமூகங்களும் எழுப்புகின்றன.

இந்த வாரம் படேல் குடும்பத்திற்காக மெய்நிகர் வடிவில் அஞ்சலி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார் அங்குள்ள இந்திய வம்சாவளியினரான ஹேமந்த் ஷா.

கனடா அமெரிக்கா எல்லை

பட மூலாதாரம், Getty Images

"இங்கு நிறைய படேல் குடும்பங்கள் உள்ளன, நிறைய இந்திய-கனடியர்கள் உள்ளனர். எல்லோரும் இந்த சம்பவம் பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு கதையை சொல்கிறார்கள்," என்றார் அவர்.

அமெரிக்காவின் தென் பகுதி எல்லையில் இதுபோன்ற ஆபத்தான எல்லையை சிலர் கடப்பது பொதுவாக காணப்படும் நிகழ்வுகள் என்றாலும், வடக்கிலிருந்து இந்த வகையான பயணம் அரிதாகவே காணப்படுகிறது.

"கனடாவில் இப்படியொரு மரணத்தை நான் பார்த்ததே இல்லை" என்ற ஷா, "இது நான் கேள்விப்படாதது," என்கிறார்.

இதற்கிடையே, படேல் குடும்பம் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து பயணம் செய்து எப்படி கனடாவிற்கு வந்தது என்பது குறித்து அந்நாட்டு காவல்துறை ஒரு "விரிவான" விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இறந்து போன குடும்பத்தினருக்கு கனடாவிலோ அமெரிக்காவிலோ குடும்பம் இருந்ததா என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த விஷயத்தில் கனடிய அதிகாரிகளுக்கு உதவ இந்திய தூதரகம் அதன் மூத்த அதிகாரி தலைமையிலான சிறப்புக் குழுவை மனிடோபாவுக்கு அனுப்பியிருக்கிறது.

டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இறந்து போனவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கான ஆதரவை வழங்க முன்வந்துள்ளது.

கடந்த வாரம், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் படேல் வழக்கை தாங்களும் விசாரித்து வருவதாகக் கூறினார்.

கனடா அமெரிக்கா எல்லை

பட மூலாதாரம், Getty Images

மேலும் "மிகப்பெரிய அளவில் நடக்கும் ஆள் கடத்தல் நடவடிக்கையில் [ஸ்டீவ்] ஷாண்டுக்கு பங்கு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது," என அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, ஷாண்ட் கைது செய்யப்பட்ட அதே இடத்தில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆள் கடத்தல் தொடர்பான மூன்று சமீபத்திய சம்பவங்கள் நடந்துள்ளன.

இத்தகைய பயணத்தைப் பற்றி சிந்திக்கும் மற்ற குடும்பங்களும் இதுபோன்ற ஆபத்தான பயணம் பற்றி மறுபரிசீலனை செய்யலாம் என்று நம்புவதாக இந்திய சங்கத்தின் கிரேவால் கூறினார்.

"சட்டவிரோதமாக எல்லையை கடக்க இதே வழியை பின்பற்றுபவர் யாராக இருந்தாலும், தயவு செய்து எல்லையை கடக்க முயற்சிக்காதீர்கள்... உங்களுக்கு உதவி செய்வதாக கூறுவோரின் பேச்சை கேட்காதீர்கள்," என்கிறார் கிரேவால்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: