பசுவின் முன்னால் சிறுநீர் கழித்ததாக இளைஞர் மீது தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images
(இன்று 30.01.2022 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
மத்தியபிரதேசத்தின் ராட்லம் மாவட்டத்தில், பசு மாட்டின் முன்னால் சிறுநீர் கழித்ததாக ஒருவரை மற்றொருவர் திட்டி, தாக்கியதாக, 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.அந்த நபர் திரும்பத்திரும்ப மன்னிப்பு கோரியும், தாக்குதல் நடத்தியவர் நிறுத்தவில்லை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. அதைத் தொடர்ந்து, தாக்கப்பட்டவர் யார் என்று போலீசார் தேடினர்.அதில் அந்த நபர் பெயர் சைபுதீன் பாட்லிவாலா என்று தெரியவந்தது. அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தாக்கியதாக சந்தேகிக்கப்படும் வீரேந்திர ரதோட் என்பவரை கைது செய்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்

பட மூலாதாரம், Getty Images
பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது குறித்த செய்தியை 'இந்து தமிழ் திசை' நாளிதழ் வெளியிட்டுள்ளது.
பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டி செம்பாகவுண்டர் காலனியை சேர்ந்தவர் சுனிதா, இவரது கணவர் முருகன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆடு வளர்த்தும், தென்னை நார் தொழிற்சாலையில் கூலி வேலைக்கு சென்றும் மகன்களை சுனிதா காப்பாற்றி வருகிறார்.இவரது இரண்டாவது மகன் யுவன்ராஜ் (18) சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று, அதே ஆண்டு நீட் தேர்வு எழுதிய யுவன்ராஜ் 155 மதிப்பெண்கள் பெற்றார். கலந்தாய்வில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்ததால் பல லட்ச ரூபாய் செலவாகும் என்பதால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. இதனால் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று, கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதினார். இதில் 279 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் தேர்தலில் களமிறங்கும் இரு முன்னாள் முதல்வர்களின் மகள்கள்

பட மூலாதாரம், ECI
உத்தரகண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் இருவரின் மகள்கள் களமிறங்குவது குறித்து, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைக்கு வரும் பிப்.14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புவன் சந்திர கந்தூரியின் மகள் ரிது கந்தூரி பூஷணை, புகழ் பெற்ற கோட்வார் தொகுதியில் பாஜக நிறுத்தியுள்ளது.
அதுபோல, மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்தின் மகள் அனுபாமா ராவத்தை ஹரித்வார் ஊரகத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.
முன்னாள் ராணுவ அதிகாரியான புவன் சந்திர கந்தூரி கடந்த 2012-ம் ஆண்டு முதல்வரான அவர், ஆட்சி முடிவில் கோட்வார் தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திர சிங் நேகியிடம் 4,623 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்.
ஹரீஷ் ராவத்தும் கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக ஆட்சி முடிவில் ஹரித்வார் ஊரகத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேபாளர் சுவாமி யதீஷ்வரானந்திடம் 12,278 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்.
இந்த நிலையில், வரும் பேரவைத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் வெற்றியைச் சந்தித்த நேகி மற்றும் யதீஷ்வரானந்துக்கு எதிராக, அவர்களிடம் தோல்வியுற்ற முன்னாள் முதல்வர்களின் மகள்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் துப்பட்டா சிக்கி சிறுமி உயிரிழப்பு
அன்னூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் தலை துண்டாகி மாணவி ஒருவர் உயிரிழந்ததாக, 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி தர்ஷனா. 5-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், தர்ஷனாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, அவருடைய தாய் வசந்தி சிறுமி தர்ஷனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்து, அருகே வசித்து வரும் விக்னேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிகிச்சை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வாகனத்தின் நடுவில் அமர்ந்திருந்த தர்ஷனா கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா, அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது.இதில் தர்ஷனாவின் கழுத்து இறுகியதால் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- அமெரிக்காவில் புரட்டி எடுக்கும் பனிப்பொழிவு: 'வெடிகுண்டு பனிப்புயல்' வரும் என எச்சரிக்கை
- முரசொலி: ஆளுநர் ஆர்.என். ரவி மீது திமுக நாளிதழில் கடும் தாக்கு - பின்னணி என்ன?
- 61 வயதில் நீட் தேர்வில் வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்: மருத்துவ படிப்பு மறுக்கப்பட்டது ஏன்?
- பதற்றத்தை உருவாக்காதீர்கள்: மேற்கு நாடுகளை கேட்கும் யுக்ரேன் அதிபர்
- அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நடப்பது என்ன? மதமாற்றக் குற்றச்சாட்டு நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












