அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நடப்பது என்ன? மதமாற்றக் குற்றச்சாட்டு நிலை என்ன?

தற்கொலை மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்கொலை மாதிரிப் படம்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்துவந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மதமாற்றக் குற்றச்சாட்டுகளை இந்துத்துவ அமைப்புகள் முன்வைக்கின்றன. ஆனால், பள்ளிக்கூடமும் காவல்துறையும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.

இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய குழு, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 1) பேசியிருக்கிறது.

தலைநகர் சென்னையிலிருந்து சுமார் 335 கி.மீ. தூரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓரத்தில் அமைந்திருக்கிறது திருக்காட்டுப்பள்ளி. இங்குள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்புப் படித்துவந்த 17 வயது மாணவி ஒருவர் ஜனவரி 9ஆம் தேதி தற்கொலை முயற்சி மேற்கொண்டதில்,19ஆம் தேதி மரணமடைந்தார்.

அந்த மாணவி படித்துவந்த கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் மதம் மாறச் சொல்லி வலியுறுத்தியதாலேயே மாணவி மரணமடைந்ததாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டிவருகின்றன. ஆனால், மாணவியின் மரணத்தின் பின்னணியில் மதமாற்ற நிர்பந்தம் என்ற காரணம் இல்லை என்கிறது காவல்துறை.

தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் ஒன்றான அரியலூர் மாவட்டத்தின் உள்ளடங்கிய ஒரு சிறறூரைச் சேர்ந்தவர் இந்த மாணவி. இவருடைய தாய் இறந்த பின், தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

உள்ளூர் தனியார் பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்புவரை படித்துவந்த அந்த மாணவி, 2017 - 18ஆம் கல்வி ஆண்டில் திருக்காட்டுப் பள்ளியில் உள்ள இந்த கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு சேர்ந்தார். பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கிப் படித்துவந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 9ஆம் தேதி அந்த மாணவி தொடர்ந்து வாந்தி எடுத்தார். இதற்கு அடுத்த நாள் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அந்த மாணவியை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் தொடர்ந்து வயிற்றில் பிரச்சனை இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் காட்டியுள்ளனர். ஆனால், மாணவியின் உடல்நிலை சரியாகாத நிலையில், அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் ஜனவரி 15ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அவருடைய கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை பலனளிக்காத நிலையில் அந்த மாணவி ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார். இதற்கு அடுத்த நாள் இந்த விவகாரம் பெரிதாக உருவெடுத்தது. மாநில பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை,"இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்." என்று ட்விட்டரில் குற்றம்சாட்டினார்.

அதோடு, அந்த மாணவி பேசும் வீடியோ காட்சியையும் அவர் இணைத்திருந்தார்.

"என் முன்பாகவே என் அம்மாவிடமும் அப்பாவிடமும் உங்க பெண்ணை கிறிஸ்தவராக மாற்றுகிறீர்களா என்று கேட்டார்கள். நாங்களே படிக்க வைக்கிறோம் என்று சொல்லிக் கேட்டார்கள். அதிலிருந்தே திட்டிக்கிட்டே இருப்பாங்க" என்று அந்த மாணவி கூறுவதாக அந்த வீடியோ அமைந்திருக்கும்.

ராக்கேல் மேரி என்ற அருட்சகோதரி அவ்வாறு கேட்டதாகவும் அந்த மாணவி குறிப்பிட்டார். விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.க. தொண்டர்களும் இந்த வீடியோவைப் பரவலாகப் பகிர்ந்தனர்.

விவகாரம் பெரிதாக உருவெடுத்ததையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா வியாழக்கிழமையன்று இரவு செய்தியாளர்களிடம் பேசினார்.

"சிகிச்சையில் இருந்த அந்த மாணவியிடம் மருத்துவர்களின் அனுமதியுடன் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அந்த வாக்குமூலத்தில் மதமாற்றம் தொடர்பாக அந்த மாணவி எந்தவிதத் தகவலும் தெரிவிக்கவில்லை. அதுபோல, அவரது பெற்றோரும் சொல்லவில்லை. மாஜிஸ்திரேட் கொடுத்த தகவலிலும் அதுபோன்ற விஷயம் இல்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை.

வருத்தத்திலிருக்கும் மாணவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்.

இந்நிலையில், அந்த மாணவி சிகிச்சையில் இருப்பது போலவும், அவர் பேசுவது போலவும் சமூக வலைதளங்களில் விடியோ பரப்பப்பட்டு வருகிறது. இது சிறார் சட்டப்படி குற்றம். இதை எடுத்தது, பரப்பியது யார் என்பது குறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

மாணவி நீதித் துறை நடுவருக்கு அளித்த வாக்குமூலத்தின் பிரதி பிபிசிக்குக் கிடைத்தது. அதில் தங்கிப் படித்த விடுதியில் இருந்த சகாய மேரி என்ற வார்டன், இந்த மாணவியை கணக்கு எழுதும்படி தொடர்ந்து துன்புறுத்திவந்ததாகவும், படிக்கவிடாமல் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார். ஏதாவது பொருட்கள் காணாமல் போனால், தன்னை சந்தேகப்பட்டு திட்டுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த முறை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கும் வீட்டுக்கு அனுப்பாமல் கணக்கு வழக்குகளைப் பார்க்கச் சொன்னதாகவும் கூறிய மாணவி, இந்தக் கொடுமை தாங்காமல்தான் தான் 9ஆம் தேதியன்று மாலை விடுதியில் தற்கொலைக்கு முயன்றதாக மாணவி கூறியதாக வாக்குமூலப் பிரதி காட்டுகிறது.

இதற்கிடையில், மாணவியின் பெற்றோர் மாவட்டக் காவல்துறையிடம் மீண்டும் புகார் ஒன்றை அளித்தனர். அந்தப் புகாரில், மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தியதாலேயே மாணவி விஷம் குடித்திருக்கலாம் என்று கூறியிருந்தனர். இதையடுத்து, அது தொடர்பாகவும் வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் துவங்கியிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து, திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனிடம் பிபிசி கேட்டபோது, "மாணவியை வேலை செய்யச் சொல்லி விடுதி வார்டன் டார்ச்சர் செய்வதாக பெற்றோர் முதலில் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாணவியின் பெற்றோர் இரண்டாவதாக நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில், மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

மேலும், முதன் முதலில் இந்த வீடியோவைப் பரப்பியதாக விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த பிரமுகர் முத்துவேல் என்பவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வீடியோவைப் பகிர்ந்த மற்றவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டுவருவதாகவும் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பிபிசியிடம் தெரிவித்தார்.

வருத்தத்தில் உள்ள மாணவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருத்தத்தில் உள்ள மாணவி

இதற்கிடையில், இந்த வழக்கை மத்திய குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சிபிசிஐடி) ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி பெற்றோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மரணப்படுக்கையில் இருந்த மாணவியின் வீடியோவை எடுத்து வெளியிட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் முத்துவேல் காவல்துறையிடம் அந்த போனை ஒப்படைக்க வேண்டுமெனவும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் கூறியது.

இதையடுத்து முத்துவேல் காவல்துறையிடம் அந்த போனை ஒப்படைத்தார். இதற்கு அடுத்த நாள், மாணவியின் மற்றொரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், தன்னை விடுதியில் படிக்கவிடாமல் அதிகம் வேலை வாங்கியதால்தான் தான் விஷத்தை அருந்தியதாக மாணவி தெளிவாகக் கூறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

"எப்பவுமே என்னையவந்து, போர்டிங்கில இருக்க சிஸ்டர் கணக்கு - வழக்கு பார்க்கச் சொல்லுவாங்க. இல்ல சிஸ்டர், நான் லேட்டாதானே வந்தேன், அப்புறமா எழுதித்தாரேன்னு சொன்னாலும் கேக்க மாட்டங்க. பரவாயில்லை எழுதிக் கொடுத்துட்டு உன் வேலையைப் பாருன்னு சொல்லி எழுத வச்சுக்கிட்டே இருப்பாங்க." என்று அந்த மாணவி கூறியிருந்தார்.

மேலும் அந்த வீடியோவை எடுப்பவர் மாணவியிடம் "உன்னைய ஸ்கூல்ல பொட்டுவைக்கக்கூடாது அந்த மாதிரியெல்லாம் ஏதாவது சொல்லுவாங்களா?" என்று கேட்கும்போது, "அதெல்லாம் சொல்ல மாட்டாங்க.." என்று பதிலளிக்கிறார்.

இந்த இரண்டாவது வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட கல்வித் துறை அந்தப் பள்ளியில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் சமர்ப்பித்த அறிக்கையும் ஊடகங்களில் வெளியானது.

"கடந்த பத்தாண்டுகளில் மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் இந்தப் பள்ளியை 16 முறை நேரடியாக ஆய்வுசெய்துள்ளனர். அந்தத் தருணங்களில் மாணவிகளிடமிருந்து மதம் சார்ந்து புகார்கள் ஏதும் வரவில்லை. பள்ளி இயல்பாகவே செயல்பட்டுவந்துள்ளதால், மதம் சார்பான புகார் ஏதும் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கோ, மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கோ வரவில்லை. இந்தப் பள்ளி சிறுபான்மை இனத்தினரால் நடத்தப்பட்டாலும் அதிக அளவில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இப்பள்ளியில் மத ரீதியிலான பிரசாரங்கள் ஏதும் தலைமை ஆசிரியராலோ, மற்ற ஆசிரியர்களாலோ நடத்தப்படவில்லை" என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பாஜக தலைவர் அண்ணாமலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாஜக தலைவர் அண்ணாமலை

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 4 பேர் கொண்ட குழு ஒன்று அமைத்து அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் மத்தியப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிட்ரா தாய் வாக், கர்நாடகத்தைச் சேர்ந்த கீதா விவேகானந்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டாவதாக வெளியான வீடியோவில் மாணவி தான் விஷம் குடித்ததற்கு வேறு காரணத்தைக் கூறுவது, கல்வித் துறையின் அறிக்கையில் மதமாற்றம் இல்லை எனக் கூறப்பட்டிருப்பது ஆகியவை, இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த இந்து அமைப்புகளுக்குப் பின்னடைவாக அமைந்தன.

ஊர் மக்கள் மனு

மேலும், மைக்கல்பட்டியின் ஊர் பொதுமக்கள் சிலர் சேர்ந்து வியாழக்கிழமையன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தங்களுடைய ஊரில் பல்வேறு மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் நிலையில், அதனைக் குலைக்கும் வகையில் பல குழுக்கள் அமைத்து விசாரிப்பதைத் தடுக்க வேண்டுமென்றும் கூறியிருந்தனர்.

இந்த பள்ளிக்கூடத்தின் விடுதி அமைந்துள்ள மைக்கல்பட்டியின் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயராஜும் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனு அளித்த குழுவில் இடம்பெற்றிருந்தார். அவரிடம் கேட்டபோது, விடுதி குறித்து நேர்மறையான கருத்துகளையே தெரிவித்தார்.

"அந்த மாணவி மிகவும் புத்திசாலி. பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண்களை பெற்றிருந்தார். கிறிஸ்துமஸிற்கு விடுதி நிர்வாகமே துணியெடுத்துக் கொடுத்தது. இம்மாதிரி சூழலில் மதமாற்றப் புகார்கள் எழுந்திருப்பது வருத்தமளிக்கிறது. அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லையென்றே கருதுகிறேன்" என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கூட நிர்வாகம், விடுதி நிர்வாகம் விடுத்த செய்திக் குறிப்பில், தங்களுடைய பள்ளிக்கூடம் மிகப் பழமையானது என்றும், இது போன்ற முயற்சிகள் அங்கே நடப்பதில்லையென்றும் கூறப்பட்டிருந்தது. மாணவியின் பெற்றோர் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாணவி உயிரிழந்த விவகாரத்தை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டிருக்கிறது.

பாஜக குழு நேரில் விசாரணை

பாஜக குழு

பட மூலாதாரம், Abinav

படக்குறிப்பு, அரியலூரில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாரிடம் பேசும் பாஜக குழுவினர்

இந்த நிலையில், மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி மேலிடம் நியமித்த குழு, அரியலூருக்கு வந்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோரை பிப்ரவரி 1ஆம் தேதி சந்தித்து பேசியிருக்கிறது.

அந்த கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி நட்டா, மாணவி சம்பவம் குறித்து விசாரிக்க மத்திய பிரதேச எம்.பி சந்தியா ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அக்குழுவில் நடிகையும் தெலங்கானா முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி, கர்நாடகத்தின் கீதா, மகாராஷ்டிராவின் சித்ரா ஆகிய இடம்பெற்றுள்ளனர்.

அரியலூரில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்ற இக்குழு, பெற்றோர், சகோதரர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தியது.

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள விஜயசாந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான், மாணவி தற்கொலை செய்து கொண்டார். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை மூளைச் சலவை செய்து, மதம் மாறச் சொல்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்த தற்கொலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்கிறது. முதலமைச்சர் ஏன் மெளனமாக இருக்கிறார்? இதை திசை திருப்புகிறார்கள். பா.ஜ.க மதத்தை வைத்து அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்து, ஓட்டும் வாங்கும் அவசியம் பாஜகவிற்கு இல்லை.

மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ப்ரியாங்க் கனூங்கோ தலைமையிலான குழு தஞ்சாவூர் மற்றும் அரியலூரில் திங்கட்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது உயிரிழந்த மாணவி படித்த பள்ளியின் விடுதியின் உரிமம் காலாவதியானதாகவும் அது புதுப்பிக்கப்படாமல் இயங்கி வந்ததாகவும் தெரிய வந்ததாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: