அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மேலும் ஒரு வீடியோ வெளியானது

சித்தரிக்கும் படம்

பட மூலாதாரம், Alexey_M / getty images

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளியில் ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்துவந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அந்த மாணவி பேசிய மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார்.

கடந்த ஜனவரி 9ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவியின் வீடியோ ஒன்றை இந்து அமைப்பினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதமாறும்படி தன் பெற்றோரிடம் கூறியதாகவும் தன்னைத் திட்டியும் அதிக வேலை வாங்கியும் கொடுமைப்படுத்தியதாகவும் அந்த மாணவி பேசுவது போன்ற காட்சிகள் அந்த காணொளியில் இடம்பெற்றிருந்தன.

பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த காணொளியைப் பகிர்ந்தனர். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றையும் நடத்தியது.

ஆனால், காவல்துறையைப் பொறுத்தவரை ஜனவரி 15ஆம் தேதி தஞ்சாவூர் நீதித் துறை நடுவரிடம் அந்த மாணவி வாக்குமூலம் அளித்தபோது, விடுதி நிர்வாகி தன்னைத் தொடர்ந்து வேலை வாங்கியதாலேயே தான் விஷம் குடித்ததாகத் தெரிவித்திப்பதைச் சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக சகாய மேரியைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இதற்கிடையில், மாணவி மருத்துவமனையில் இருக்கும்போது அவரிடம் வீடியோ எடுத்த முத்துவேல் என்ற நபரை அழைத்து விசாரித்த காவல்துறை, அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தது.

இருந்தபோதும் இந்து அமைப்புகள் மாணவியின் மரணத்திற்குக் காரணம், மதமாற்ற வற்புறுத்தல்தான் என்று கூறிவந்தன.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் அந்த மாணவியின் மற்றொரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தன்னைத் தொடர்ந்து வேலை பார்க்கச் சொல்வதால் படிப்பு பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில்தான் விஷமருந்தியதாகச் சொல்கிறார் அந்த மாணவி.

அந்த மாணவிக்கும் வீடியோவை எடுத்தவருக்கும் இடையிலான உரையாடலில் பின்வரும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன:

மாணவி:"என் பேர் .... எங்கப்பா பேரு முருகானந்தம், எங்கம்மா பேரு சரண்யா. நான் மைக்கல் பள்ளிக்கூடத்தில் 8வது முதல் 12வது படிக்கிறேன். எப்பவுமே நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுப்பேன். இந்த வருஷம் என் குடும்ப சூழ்நிலையால ஸ்கூலுக்கு என்னால போக முடியலை.

அரியலூர் மாணவியின் தற்கொலைக்கு மதமாற்ற அழுத்தமே காரணம் என்று கூறி பாஜகவினர் சென்னை வள்ளுவர் கோட்ட உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

பட மூலாதாரம், Bjp tamil nadu twitter page

படக்குறிப்பு, அரியலூர் மாணவியின் தற்கொலைக்கு மதமாற்ற அழுத்தமே காரணம் என்று கூறி பாஜகவினர் சென்னை வள்ளுவர் கோட்ட உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

எப்பவுமே என்னையவந்து, போர்டிங்கில இருக்க சிஸ்டர் கணக்கு - வழக்கு பார்க்கச் சொல்லுவாங்க. இல்ல சிஸ்டர், நான் லேட்டாதானே வந்தேன், அப்புறமா எழுதித்தாரேன்னு சொன்னாலும் கேக்க மாட்டங்க.

பரவாயில்லை எழுதிக் கொடுத்துட்டு உன் வேலையைப் பாருன்னு சொல்லி எழுத வச்சுக்கிட்டே இருப்பாங்க.

நான் கரெக்ட்டா எழுதினாலும் அது தப்பு தப்புன்னு சொல்லி, ஒரு கணக்கை ஒரு மணி நேரம் எழுத வைச்சிருவாங்க. இதுனால படிப்புல கான்சன்ட்ரேஷன் பண்ணவே முடியல. இதுனால நான் மார்க் கம்மியா எடுத்துக்கிட்டே இருந்தேன். இப்படியே போய்க்கிட்டிருந்தா என்னால படிக்க முடியாதுன்னு நினைச்சுத்தான் நான் விஷத்தைக் குடிச்சிட்டேன்.

வீடியோ எடுப்பவர்: உன் பேரென்னம்மா?

மாணவி: (தன் பெயரைச் சொல்கிறார்)

வீடியோ எடுப்பவர்: அந்த சிஸ்டர் பெயரென்ன?

மாணவி: சகாய மேரி

வீடியோ எடுப்பவர்: ஃபாதர் பெயரென்ன?

மாணவி: ஃபாதர்லாம் யாரும் இல்லை.

வீடியோ எடுப்பவர்: ஹெட் மாஸ்டர் யாரும் கிடையாதா?

மாணவி: அவங்கள்ளாம் எதும் செய்யல..

வீடியோ எடுப்பவர்: அவுங்க பெயரென்னன்னு கேட்டேன்..

மாணவி: ஆரோக்கிய மேரி

வீடியோ எடுப்பவர்: உங்களை வேற வேலை செய்யச் சொல்லுவங்களா?

மாணவி: கேட் பூட்டச் சொல்லுவாங்க. எல்லா வேலையும் என்னையவே செய்யச் சொல்லுவாங்க.

வீடியோ எடுப்பவர்: வேறென்ன வேலையைச் செய்யச் சொல்லுவாங்க?

மாணவி: காலையில கேட் திறக்கிறதுல இருந்து எல்லாரும் சாப்பிட்ட பிறகு கேட்ட மூடுற வரைக்கும் எல்லா வேலையையும் என்னையவே செய்யச் சொல்லுவங்க.

வீடியோ எடுப்பவர்: அவர் பேரு...

மாணவி: நீதான் பொறுப்பா இருக்க அப்படின்னு சொல்லுவாங்க..

வீடியோ எடுப்பவர்: உன்னைய ஸ்கூல்ல பொட்டுவைக்கக்கூடாது அந்த மாதிரியெல்லாம் ஏதாவது சொல்லுவாங்களா?

மாணவி: அதெல்லாம் சொல்ல மாட்டாங்க..

வீடியோ எடுப்பவர்: பொங்கலுக்கு ஊருக்கு வந்தியா?

மாணவி: அப்படியெல்லாம் கேட்டா, நீ படிக்கனும் இங்கேயே இரு அப்படினு சொல்லுவாங்க. அங்கேயே இருக்க வைச்சிருவாங்க

வீடியோ எடுப்பவர்: இப்ப பொங்கலுக்குக்கூட ஊருக்கு வரலையா?

மாணவி: இப்ப உடம்பு சரியில்லைனு சொல்லி அனுப்பி வைச்சிட்டாங்க.

வீடியோ எடுப்பவர்: நீ மருந்து சாப்பிட்டது அவங்களுக்குத் தெரியுமா?

மாணவி: தெரியாது".

காணொளிக் குறிப்பு, அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன? முழு விவரம் இதோ

புதிதாக வெளியாகியிருக்கும் இந்த வீடியோ, முத்துவேலின் ஃபோனிலிருந்து மீட்கப்பட்ட வீடியோக்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. மேலும் சில வீடியோக்கள் எடுக்கப்பட்டு அவை அழிக்கப்பட்டதாகவும் அவற்றை மீட்க காவல்துறை முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்துபோன மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில், வீடியோவை எடுத்தவர் அந்த போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, முத்துவேல் நேரில் விசாரணைக்கு ஆஜராகி, போனை ஒப்படைத்தார்.

மாணவியின் பெற்றோர் முதன்முதலில் ஜனவரி 15ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, ஜனவரி 16ஆம் தேதி நீதித்துறை நடுவர் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றார். இந்த நிலையில், மாணவி ஜனவரி 19ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, ஒரு வீடியோ வெளியானது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ரக்கேல் மேரி என்பவர் தன்னை மதம் மாற்றும்படி பெற்றோரிடம் கேட்டதாக மாணவி கூறியிருந்தார்.

இதை அடிப்படையாக வைத்து, மதமாற வற்புறுத்தியதால் தங்கள் மகள் உயிரிழந்ததாக பெற்றோர் மீண்டும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் 62 வயதான சகாய மேரி கைதுசெய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு வெள்ளிக்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: