அரியலூர் மாணவி தற்கொலை: தஞ்சாவூர் பள்ளியில் மத பிரசாரம் நடக்கவில்லை என தமிழ்நாடு கல்வித் துறை அறிக்கை

பட மூலாதாரம், Getty Images
அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் திருக்காட்டுப்பள்ளி கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களால் மதப் பிரசாரம் செய்யப்படவில்லையென கூறும் பள்ளிக் கல்வித் துறையின் விசாரணை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார். கடந்த ஜனவரி 9ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19ஆம் தேதி உயிரிழந்தார்.
அந்த மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாலேயே அவர் விஷம் குடித்ததாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வந்தன. இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில், அந்த மாணவி பேசும் வேறு ஒரு வீடியோ நேற்று வெளியானது. அதில் விடுதியில் தன்னை அதிகமாக வேலை வாங்கியதால் தன்னால் நன்றாகப் படிக்க முடியாது என்ற அச்சத்தில் தற்கொலைசெய்து கொண்டதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஒரு வீடியோ சம்பந்தப்பட்ட மாணவியின் வீடியோ ஒன்றை இந்து அமைப்பினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதமாறும்படி தன் பெற்றோரிடம் கூறியதாக அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
நேற்று வெளியான வீடியோவில், பள்ளி விடுதியில் தன்னைத் திட்டியும் அதிக வேலை வாங்கியும் கொடுமைப்படுத்தியதாகவும் அதனாலேயே விஷத்தைக் குடித்ததாகவும் அந்த மாணவி பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் இந்த விவகாரம் குறித்து மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்தில் 16 முறை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது, மதப் பிரசாரம் நடந்ததாகத் தெரியவில்லையெனக் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அந்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியமான கருத்துகள்:
1. தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அந்த தனியார் கிறிஸ்தவப் பள்ளியில் 2017 - 18ஆம் ஆண்டில் அந்த மாணவி எட்டாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். அந்த மாணவி அதற்கு முன்பாக திருச்சி மாவட்டம் வடுகர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்புவரை படித்துள்ளார்.
2. அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் தந்தையார் பெயர் எஸ். முருகானந்தம். பள்ளிச் சான்றிதழ்களில் இவருடைய தாயார் பெயர் கனிமொழி என இடம்பெற்றுள்ளது. ஆனால், மாணவியின் ஏழாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழில் தாயார் சரண்யா எனக் கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில், சரண்யா என்பவர் முருகானந்தத்தின் இரண்டாம் மனைவி என்பது தெரியவந்துள்ளது.
3. ஜனவரி 15ஆம் தேதி காவலர்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் சென்று விசாரணை நடத்தியபோது அம்மாணவி களைக்கொல்லி பூச்சி மருந்தை உட்கொண்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக பள்ளியின் தலைமை ஆசிரியை சகோதரி ஆரோக்கிய மேரி தெரிவித்திருக்கிறார்.
4. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மதத்தைப் பொறுத்தவரை, கடந்த பத்து ஆண்டுகளில் படித்த இந்து மாணவர்கள் 5,270 பேர். கிறிஸ்தவ மாணவர்கள் 2,290 பேர். இஸ்லாமிய மாணவர்கள் 179 பேர். இந்தப் பள்ளிக் கூடத்தில் கிறிஸ்தவ மாணவர்களைவிட இந்து மாணவர்களே அதிகம் படித்துவருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
5. 2020 மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நீண்ட விடுமுறையை அறிவித்தபோது மற்ற மாணவிகள் தங்கள் தாய் தந்தையரிடம் சென்றுவிட்ட நிலையில், இந்த மாணவி மட்டும் மதக் கன்னிகைகளின் விடுதியிலேயே தங்கி தொடர்ந்து பயின்று வந்திருக்கிறார்.
6. கொரோனா காலத்திற்குப் பிறகு காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டபோது, 487 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
7. 2020- 21ல் பதினொன்றாம் வகுப்புப் படிக்கும்போது நேரடி வகுப்பு நடந்த 18 நாட்கள் மட்டும் பங்கேற்றுள்ளார். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவில்லை.
8. 12ஆம் வகுப்பில் செப்டம்பர் மாதத்திலிருந்து அந்தந்த மாதங்களின் பாதி நாட்கள் மதக் கன்னிகைகளின் விடுதியில் தங்கி கல்வி பயின்றுள்ளார்.
9. ஜனவரி 15ஆம் தேதி அந்த மாணவிக்கு வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டதும் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
10. கடந்த பத்தாண்டுகளில் மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் இந்தப் பள்ளியை 16 முறை நேரடியாக ஆய்வுசெய்துள்ளனர். அந்தத் தருணங்களில் மாணவிகளிடமிருந்து மதம் சார்ந்து புகார்கள் ஏதும் வரவில்லை. பள்ளி இயல்பாகவே செயல்பட்டுவந்துள்ளதால், மதம் சார்பான புகார் ஏதும் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கோ, மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கோ வரவில்லை. இந்தப் பள்ளி சிறுபான்மை இனத்தினரால் நடத்தப்பட்டாலும் அதிக அளவில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இப்பள்ளியில் மத ரீதியிலான பிரசாரங்கள் ஏதும் தலைமை ஆசிரியராலோ, மற்ற ஆசிரியர்களாலோ நடத்தப்படவில்லை.
குழு அமைத்த பாஜக
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 4 பேரைக் கொண்டுள்ள குழு ஒன்று அமைத்து அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் மத்தியப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிட்ரா தாய் வாக், கர்நாடகத்தைச் சேர்ந்த கீதா விவேகானந்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விவகாரத்தை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டுமென மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு இன்று பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வருகிறது.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்? - அடிப்படை தகவல்கள்
- 'கடவுள் என் ப்ராவை அளவெடுக்கிறார்' - நடிகை மீது விசாரணைக்கு உத்தரவிட்ட பாஜக அமைச்சர்
- தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை சாத்தியமா?
- டாடா வசமான ஏர் இந்தியா: மீண்டும் திரும்பிய வரலாறு - முக்கிய தகவல்கள்
- தமிழ்நாடு ஆளுநருக்கு தங்கம் தென்னரசு எதிர்வினை - நீட், மொழிக்கொள்கை விவகாரம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








