டாடா வசமான ஏர் இந்தியா: மீண்டும் திரும்பிய வரலாறு - முக்கிய தகவல்கள்

டாடா

பட மூலாதாரம், TATA

ஏர் இந்தியாவை டாடா குழுமம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி முறைப்படி தனது வசமாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான பங்குகள் பரிவர்த்தனை, பணப்பரிவர்த்தனை நடைமுறைகள் முறைப்படி முடிந்துள்ளன. இதனால் வாடிக்கையாளருக்கு என்ன நன்மை? டாடா குழுமத்துக்கு இதனால் என்ன லாபம்? வாருங்கள் அறியலாம்.

ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் இந்திய அரசு ஜனவரி 27ஆம் தேதி அதிகாரபூர்வமாக ஒப்படைத்த சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த விமான நிறுவனத்தின் காக்பிட் குழு உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றனர்.

அவர்கள் தங்களுடைய அனைத்து பைலட்டுகளுக்கும் பகிர்ந்த ஓர் சுற்றறிக்கையில், இன்றைய விமான சேவையின்போது கீழ்கண்ட வரிகளை அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி அன்றைய தினம் பிற்பகலுக்குப் பிறகு ஏர் இந்தியா விமான சேவையில் பயணம் செய்த பயணிகள் இந்த வரிகளை கேட்டனர்.

"அன்புள்ள விருந்தினர்களே, வரலாற்று சிறப்புமிக்க இந்த விமான நிறுவனத்தின் சேவையில் உங்களை வரவேற்கும் வேளையில், இன்றைய நாள் ஒரு சிறப்பு நிகழ்வைக் குறிக்கிறது. ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு இன்று ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக டாடா குழுமத்தின் ஒரு அங்கமாகியிருக்கிறது. ஏர் இந்தியாவின் எதிர்காலத்துக்கு உங்களை வரவேற்கிறோம்" என்று விமானிகளை பைலட்டுகள் வரவேற்றனர்.

68 ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழக்கிழமை (ஜனவரி 27) ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் வசமாகியிருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக டாடா குழுமத்துடன் பங்குகள் கொள்முதல் ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசு கையெழுத்திட்டது.

அந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை செயல்வடிவம் பெற்ற நிலையில், டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன், ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களை அணுகி, நாட்டிற்குத் தேவையான விமான நிறுவனத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.

டாடா

பட மூலாதாரம், TATA

டாடா குழுமம் விமான நிறுவனத்தின் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட பிறகு, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், ஊழியர்களுக்கு எழுதிய வரவேற்புக் கடிதத்தில் "ஏர் இந்தியாவின் சாதுர்யமான கடந்த காலத்தை" பிரதிபலித்தார்.

"டாடாஸ் ஏலத்தை வென்ற நாள் முதல் அனைவரின் வாயும் ஒரு வார்த்தையை உதிர்த்தது.. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் டாடா குடும்பத்தில் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம் என அனைவரும் கூறினர். அது நடந்துள்ளது," என்று கடிதத்தில் கூறியிருக்கிறார் சந்திரசேகன்.

"இன்று ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் நம்மீதே உள்ளது. நாம் இணைந்து என்ன சாதிப்போம் என்று உலகம் காத்திருக்கிறது. நமது நாட்டிற்குத் தேவையான விமான சேவையை உருவாக்க நாம் எதிர்காலத்தை நோக்க வேண்டும், "என்று சந்திரசேகரன் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்த நிலையில், ஏர் இந்தியாவின் தலைவர் பொறுப்பை என். சந்திரசேகரன் கவனிப்பார் என்று அறிவித்திருக்கிறது டாடா சன்ஸ் நிறுவனம்.

இந்த டாடா நிறுவனம், ஏர் இந்தியாவை மீண்டும் வாங்கியதில் என்ன சிறப்பம்சம்? இதை அறிய அந்த நிறுவனத்தின் கடந்த கால வரலாறை நாமும் திரும்பிப் பார்க்க வேண்டும்.

அக்டோபர் 15, 1932: ஏர் இந்தியா, ஆரம்பத்தில் டாடா ஏர்லைன்ஸ் என்று அழைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முதலாவது சேவை கராச்சி-ஆமதாபாத்-பம்பாய் இடையே நடைபெற்றது. ஜே.ஆர்.டி டாடா தாமே இயக்கிய டி ஹவில்லேண்ட் புஸ் மோத் விமானத்தில் கடிதங்களை சுமந்து வரும் கார்கோ சேவையை வழங்கினார்.

1933: முதலாம் ஆண்டு நிறைவில் டாடா நிறுவன விமானங்கள், 2,57,495 கி.மீ தூரத்துக்கு வானில் பறந்திருந்தன. 10 டன்னுக்கும் அதிகமான கடிதங்களை நகரங்களுக்கு இடையே பரிமாற்றம் செய்தது. அதே ஆண்டு உள்நாட்டில் மிக நீளமான சேவையாக பம்பாய் - திருவனந்தபுரம் இடையிலான ஆறு இருக்கைகள் கொண்ட மைல்ஸ் மெர்லின் சேவையை வழங்கியது டாடா ஏர் சர்வீஸ்.

ஆகஸ்ட் 1946: டாடா ஏர்லைன்ஸ் முறைப்படி பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக ஏர் இந்தியா என பெயர் மாற்றம் ஏற்பட்டது.

மார்ச் 8, 1948: சுதந்திர இந்தியாவின் அரசாங்கம், ஏர் இந்தியா நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை வாங்கியது. அப்போது ஏர் இந்தியா என்ற பெயர் மீண்டும் மாற்றப்பட்ட ஏர் இந்தியா இன்டர்நேஷனல் ஆனது.

மார்ச் 1953: இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர்-இந்தியா இன்டர்நேஷனல் என்ற பெயரில் அனைத்து பொதுத்துறை விமான நிறுவனங்களை இயக்க இந்திய நாடாளுமன்றத்தால் ஏர் கார்ப்பரேஷன் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு விமான நிறுவனங்களிலும் அரசுக்கு பெரும்பான்மை பங்குகள் இருந்தன.

ஆகஸ்ட் 1953: ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமான வணிகம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

ரத்தன் டாடா

பட மூலாதாரம், JRD TATA

1962: விமான சேவையின் 30ஆம் ஆண்டு விழாவையொட்டி கராச்சி - மும்பை இடையே தனியாக லியோபார்ட் மோத் பிளேனை இயக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் டாடா.

1978: பம்பாய் கடற்கரையில் 213 பேரைக் கொன்ற விமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸில் தனது பதவியை ராஜிநாமா செய்யும்படி அதன் தலைவர் ஜேஆர்டி டாடாவை மத்தியில் ஆட்சியில் இருந்த மொராஜி தேசாய் அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

ஏர் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 1980: பிறகு ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி அரசாங்கம், ஜேஆர்டி டாடாவை விமான நிறுவனங்களின் வாரியக்குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமித்தது. ஆனால் நிறுவனத்தின் தலைவர் பதவியை டாடா இழந்தார்.

நவம்பர் 23 1993: நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது ஜேஆர்டி டாடாவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தனது 89ஆவது வயதில் அவர் காலமானார். அவர் இறப்பையடுத்து நாடாளுமன்ற அலுவல்கள் ஒரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. அவையில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது அரிதான நிகழ்வாக கருதப்பட்டது.

2001: ஜேஆர்டியின் வாரிசான ரத்தன் டாடாவால் நடத்தப்படும் டாடா சன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து ஏர் இந்தியா நிறுவனத்தில் 40 சதவீத பங்குகளை ஏலம் எடுத்தது. இது அரசாங்கத்தின் பங்கு விலக்குக்கான முதல் முயற்சியாகக் கருதப்பட்டது. ஆனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பின்வாங்கியது.

2007-2012: மன்மோகன் சிங் அரசாங்கம் ஏர் இந்தியாவை 2007இல் இந்தியன் ஏர்லைன்ஸுடன் இணைத்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விமான சேவையின் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கும் அப்போதைய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த காலகட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனம் ரூ. 20 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்து ரூ.43 ஆயிரம் கோடி கடனில் இருந்தது.

2018: நரேந்திர மோதி அரசாங்கம் விமான நிறுவனங்களின் 76 சதவீத பங்குகளை விற்க புதிய பங்கு விற்பனை திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் ஒரு நிறுவனம் கூட ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.

2020: ஏர் இந்தியா பங்குகளை விற்க மூன்றாவது முறையாக முயற்சி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. இந்த நேரத்தில், நரேந்திர மோதி அரசாங்கம் கடன் சுமையில் உள்ள விமான நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்கும் திட்டத்தை முன்மொழிந்தது.

செப்டம்பர் 2021: ஸ்பைஸ்ஜெட் நிறுவனர் அஜய் சிங்கும் டாடா சன்ஸ் நிறுவனமும் ஏலத்தில் பங்கெடுக்க முன்வந்தன.

அக்டோபர் 8, 2021: 18,0000 கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றதாக இந்திய அரசு அறிவித்தது.

ஜனவரி 27, 2022: டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக மத்திய அரசால் ஒப்படைக்கப்பட்டது. மகாராஜா மீண்டும் அதன் தொடக்க கால உரிமையாளரின் கைவசம் வந்தது.

மார்ச் 14, 2022: ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு என். சந்திரசேகரனை நியமித்தது டாடா சன்ஸ்..

ஏர் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

2003-04க்குப் பிறகு விமான துறையில் நடைபெறும் மிகப்பெரிய தனியார்மயமாக்கலாக இந்த நடவடிக்கை இருக்கும். அதே வேளையில், டாடா குழுமத்தின் வசம் இருக்கும் விமான நிறுவனங்களில் ஏர் இந்தியா மூன்றாவது நிறுவனமாக இருக்கும். டாடாவுக்கு ஏற்கெனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடனான கூட்டு முயற்சியாக ஏர் ஏசியா இந்தியாவும் விஸ்தாரா ஏர்லைன்ஸும் உல்ளன.

தற்போது, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உள்நாட்டு விமான நிலையங்களில் 4,400 நிறுத்துமிடங்களும் 1,800 சர்வதேச விமான நிலையங்களில் நிறுத்துமிடங்களும் உள்ளன. இது தவிர, வெளிநாடுகளில் 900 நிறுத்துமிடங்களை ஏர் இந்தியா தன் வசம் வைத்துள்ளது.

ஏர் இந்தியாவசம் இப்போது 141 விமானங்கள் உள்ளன. அதில் 42 விமானங்கள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட்டவை. மீதமுள்ளவை சொந்தமான விமானங்கள். இந்த விமானங்களைக் கொண்டே நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை லாபகரமானதாக டாடா சன்ஸ் நிறுவனம் மாற்ற வேண்டும். இந்தப் பணிகள் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

காணொளிக் குறிப்பு, டாடா வசமான ஏர் இந்தியா - பழைய வரலாறு கைகொடுக்குமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: