பாஜக Vs அதிமுக: "குட்டியைவிட்டு ஆழம் பார்க்கும் பா.ஜ.க" - ஜெயக்குமார் காட்டம்

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
அ.தி.மு.க குறித்து பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட கருத்துகளுக்கு அதன் மாநிலத் தலைவர் மன்னிப்பு கோரியிருந்தாலும் அந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகவே தொடர்கிறது.
இந்த விவகாரத்தில், ` பா.ஜ.கவின் சித்தாந்தம், கொள்கை என்பது வேறு. அது எப்படி வேண்டுமானாலும் போகட்டும். எங்களை சீண்டாமல் இருந்தால் போதும்,' என்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
அரியலூர் மாணவியின் மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 25ஆம் தேதி தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய நயினார் நாகேந்திரன், `தமிழ்நாடு சட்டசபையில் பா.ஜ.க எதிர்கட்சியாக இல்லை என்றாலும் துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசுவதற்கு அ.தி.மு.கவில் ஒரு எம்.எல்.ஏகூட இல்லை' என விமர்சனம் செய்திருந்தார்.
இந்தப் பேச்சு குறித்து அ.தி.மு.க மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் ராஜ் சத்யன் கூறுகையில், `அ.தி.மு.கவின் தோள் மேல் ஏறிக்கொண்டு பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை நயினார் நாகேந்திரன் ராஜிநாமா செய்துவிட்டு தங்களின் ஆண்மையை நிரூபிக்கட்டும்' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
`நெல்லை தொகுதிக்கு பா.ஜ.க வேட்பாளரை அறிவித்தபோது ஒரு பைசா கூட வாங்காமல் தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். அ.தி.மு.க கூட்டணி இருந்ததால்தான் அவர்களால் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது. நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க என்ற ஒன்று இல்லலே இல்லை. அவர்கள் தென்காசி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்தான் உள்ளனர்,' என அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவனும் விமர்சனம் செய்திருந்தார்.
அ.தி.மு.க தரப்பில் விமர்சனம் கிளம்பவே, `நான் கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நான் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது' என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார்.
மேலும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அளித்த விளக்கத்திலும், ` நயினார் நாகேந்திரன் கூறிய வார்த்தைகள் பா.ஜ.கவின் நிலைப்பாடு அல்ல. அவரது வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்தேன். எதிர்கட்சியாக அ.தி.மு.க சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கூட்டணியில் எந்தவித சலனமும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம்' என்றார்.

``அ.தி.மு.க, பா.ஜ.க மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா?'' என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
``நயினாரின் பேச்சு கண்டிக்கத்தது. எங்களுக்கு எல்லாவிதமான சித்து விளையாட்டுகளும் தெரியும். கூட்டணி தர்மத்தை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதுபோன்ற பேச்சுக்களை அக்கட்சித் தலைமை தடுத்திருக்க வேண்டும். தோழமையோடு உள்ள ஒரு கட்சியைப் பற்றி இதுபோன்று விமர்சனம் செய்வது என்பது கூட்டணி தர்மத்துக்கு உகந்தது அல்ல. எங்களின் ஐ.டி அணியும் விமர்சனம் செய்துள்ளது," என்று ஜெயக்குமார் கூறினார்.
`ஆண்மை இருந்தால் அ.தி.மு.க தயவு இல்லாமல் வெற்றி பெற்று வந்திருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம்' என அ.தி.மு.க ஐ.டி அணி குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், "இதேபோல நூறு சொற்களை எங்களாலும் பேச முடியும். எனவே, குட்டியைவிட்டு ஆழம் பார்க்கும் கதையை பா.ஜ.க செய்யக் கூடாது. இதை தெரிந்து செய்தார்களா என்பது அவர்களின் மனசாட்சிக்கே வெளிச்சம். அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். இணை ஒருங்கிணைப்பாளரிடமும் அவர் பேசியுள்ளார். அத்துடன் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது,'' என்று தெரிவித்தார்.
குட்டியைவிட்டு ஆழம் பார்க்கிறார்கள் என்றால், யாரை சொல்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டோம்.
``ஒவ்வொரு கட்சியும் தாங்கள் வளரவேண்டும் என நினைப்பார்கள். அதற்காக அவர்கள் கட்சியின் கொள்கைகளைக் கூறிவிட்டுப் போகட்டும். எந்தத் தேர்தல் வந்தாலும் எங்கள் தலைமையில்தான் கூட்டணி வைக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் எங்களின் தலைமையில்தான் கூட்டணி தொடர்கிறது. மக்கள் செல்வாக்கைப் பெற்றுள்ள இயக்கம் இது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் இக்கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. சட்டமன்றத்தில் எங்கள் எம்.எல்.ஏக்கள் எந்தளவுக்குப் பேசுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். எனக்கு சட்டமன்றம் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றம் இருக்கிறது. எங்களுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர்'' என்று அவர் பதிலளித்தார்.
இதையடுத்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

`சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, `நாங்கள்தான் பிரதான கட்சி' என பா.ஜ.க கூறிவந்தது. அதன் தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரன் அப்படி பேசியதாக கருதுகிறார்களா?
அது உண்மைக்கு மாறான விஷயம். சட்டமன்ற குறிப்புகளை எடுத்து அவர்களைப் படிக்கச் சொல்லுங்கள். சட்டமன்றத்தில் நயினார் தூங்கிக் கொண்டிருந்தாரா? எங்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சட்டமன்றத்தில் என்ன பேசினார்கள் என்பது அவைக் குறிப்பில் இருக்கிறது. அதைப் படித்துப் பார்க்கட்டும்.
துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பயன்படுத்திய அதே வார்த்தைகளைத்தான் நயினாரும் பயன்படுத்துகிறார். நாடாளுமன்றத்தில் அ.தி.மு.கவினரை `முதுகெலும்பற்றவர்கள்' என டி.ஆர்.பாலு விமர்சித்தார். ஒரு கட்சியை விமர்சிப்பதற்கு இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியானதா?
ஒரு வார்த்தையை உபயோகித்தால் எங்களால் 100 வார்த்தைகளை உபயோகப்படுத்த முடியும். எங்களுக்கும் வார்த்தை சித்து விளையாட்டுகள் தெரியும். குருமூர்த்தி எந்தளவுக்கு வாங்கிக் கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் பா.ஜ.கவை சேர்த்துக் கொண்டு போட்டியிட்டோம். அவர்கள் நான்கு இடங்களில் வென்றனர். ஒரு தலைமையின்கீழ் போட்டியிடும்போதுதான் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. இதற்கு முன்பு பா.ம.க, எங்களோடு கூட்டணியில் நின்றதால்தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்தது. அதேபோல், ம.தி.மு.கவுக்கும் அங்கீகாரம் கிடைத்தது. இதுபோல பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அவரவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நாங்கள் இமயமலையைப் போன்றவர்கள்.

அண்ணாமலை வருத்தம் தெரிவித்துவிட்டதால், விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?
இனிமேல் பேச மாட்டார்கள் என நம்புகிறோம். அவர்களின் சிந்தாந்தம், கொள்கை என்பது வேறு. அது எப்படி வேண்டுமானாலும் போகட்டும். அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களை சீண்டாமல் இருந்தால் போதும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதுபோதிய அவகாசத்தை எதிர்க்கட்சிகளுக்குக் கொடுத்திருக்கிறதா?
இவர்கள் மனமுவந்து தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு குளறுபடி, சட்டம் ஒழுங்கு எனப் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மக்களுக்கு அறிவித்தபடி ஒரு சதவீத வாக்குறுதியைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. தி.மு.க மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறுவோம். இதுவே, எங்கள் கூட்டணிக்கு வெற்றியை ஈட்டித் தரும்.
அதேநேரம், 19 ஆம் தேதியன்று தேர்தல் வைத்துவிட்டு 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்பது சரியான விஷயம். ஆனால், நான்காம் தேதி மறைமுகத் தேர்தல் வரவுள்ளது. அதற்குப் பத்து நாள்கள் அவகாசம் உள்ளது. இந்த பத்து நாள்களுக்குள் அதிகாரத்தைப் பயன்படுத்தி குதிரைப் பேரம் நடத்துவதற்குத் தி.மு.க தயாராகும். ஐந்து பேர் வென்றாலும் அதை வைத்து மற்றவர்களை விலைக்கு வாங்குவதற்கு முயற்சி செய்வார்கள்.
ஊரக உள்ளாட்சியில் 90 சதவீத இடங்களில் தி.மு.க வென்றது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அ.தி.மு.கவுக்கு எந்தவகையில் சாதகமாக உள்ளது?
தி.மு.க மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. ஊரக உள்ளாட்சியில் மக்களுக்கு ஏராளமான பரிசுப் பொருள்களைக் கொடுத்தனர். வாக்குக்கு 500, 1000 ரூபாய் எனக் கொடுத்தனர். பல இடங்களில் வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதன்மூலம் அவர்கள் செயற்கையான வெற்றியைப் பெற்றனர். உள்ளாட்சியில் 85 சதவீத ஒன்றிய கவுன்சிலர் இடங்களையும் 95 சதவீதம் மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் வென்றதாகக் கூறினர். இவையெல்லாம் உலக அதிசயங்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது நியாயமான வெற்றியைப் பெற்றோம். அவர்களும் வெற்றி பெற்றார்கள். இப்போது தி.மு.க அரசின் மீது மக்களிடம் கடும் அதிருப்தி உள்ளது. இந்தமுறை ஒரு போலியான வெற்றியைப் பெறுவதற்கு முயற்சி செய்வார்கள். நாங்களும் விழிப்புடன் இருக்கிறோம்.
பிற செய்திகள்:
- அகில இந்திய சமூக நீதி சம்மேளனத்தை உருவாக்குவோம்: மு.க. ஸ்டாலின்
- ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் வட இந்திய மாணவர்களின் கோபம் ஏன்?
- உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தால் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடை- அமெரிக்கா
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடக்கும்
- பத்ம விருதுகளை நிராகரித்த புத்ததேவ், சந்தியா - என்ன பின்னணி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












