டெல்லியில் அய்யாக்கண்ணு குழுவினரை தடுத்த போலீஸ் - டவர் மீது ஏறிய விவசாயிகள் - என்ன நடந்தது?

அய்யாக்கண்ணு போராட்டம்
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு போராட்டம் நடத்த வந்த விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் ரயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி, இன்று மாலையே அவர்கள் ரயில் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

விவசாய விளை பொருள்களுக்கு உற்பத்தி விலையை விட இரண்டு மடங்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும், உர விலையை கட்டுப்படுத்த வேண்டும், கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பிற்கு நிதி ஒதுக்கி, பணிகளைத் உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிப்ரவரி 14ம் தேதி காலை 6.30 மணியளவில் புது டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

அங்கிருந்து ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால்,டெல்லி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையிலேயே அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியில்லை என்று அவர்களிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுத்தான் டெல்லிக்கு போராட வந்துள்ளதாக விவசாயிகள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் காவல்துறையினர் விவசாயிகளுக்கு அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து ரயில் நிலையத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அங்கேயே தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனர்.

அய்யாக்கண்ணு போராட்டம்

போராட்டம் நடத்த வந்த விவசாயிகள் அனைவரையும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, காவல் துறையினர் தெரிவித்தனர். இதற்கு முதலில் மறுத்த அய்யாக்கண்ணு, நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சம்மதித்தார்.

இதையடுத்து, சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு விவசாயிகளை பேருந்துகளில் ஏற்றி டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு காவல் துறையினர் அழைத்து வந்தனர். அங்கிருந்து சண்டீகர் - மதுரை அதிவிரைவு ரயிலில் அனுப்பி வைக்க திட்டமிட்டனர். அதன்படி, விவசாயிகளும் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஆனால், பிற்பகலில் 2.15 மணியளவில் வர வேண்டிய ரயில் சில மணி நேரம் தாமதமாகியது. இதையடுத்து தடுத்து வைத்துள்ள தங்களுக்கு காவல்துறையினர் சார்பில் சரியாக உணவு வழங்கப்படவில்லை என்று கூறிம் மதிய வேளையிலும் உணவு தரவில்லை என்றும் கூறி விவசாயிகள் கூச்சலிட்டனர்.

ரயில் நிலையம் அருகே டவரில் ஏறி போராட்டம்

அய்யாக்கண்ணு போராட்டம்

அப்போது, "ரயில் வர தாமதமாவதால், அனைவரும் நாளை காலையில் புறப்படலாம், அதுவரை இங்கேயே தங்கியிருங்கள். விவசாயிகளுக்கு தனி பெட்டி ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறோம்," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, திட்டமிட்டபடி அதே ரயிலில் தனி பெட்டி ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறோம். அதற்கான முழு கட்டணத்தையும் விவசாயிகள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அய்யாக்கண்ணு உள்ளிட்ட 60 விவசாயிகள் மட்டுமே தற்போது தமிழ்நாடு திரும்புகிறோம். அவர்களுக்கு மட்டுமான கட்டணத்தை மட்டும் செலுத்துகிறோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆனால், ஒரு பெட்டிக்கான கொள்ளவு உள்ள 90 பயணிகளுக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அய்யாக்கண்ணு தலைமையில் அனைத்து விவசாயிகளும் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி, சாலையில் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது விவசாயிகள் திருச்சி அகிலன், நாமக்கல் ராமகிருஷ்ணன் இருவரும் அங்கிருந்த டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், இருவரையும் கெஞ்சி கிழே இறக்கினர்.

அப்போது கோரிக்கைகளை முழங்கியபடி விவசாயிகள் பேரணியாக புறப்பட்ட முயன்றனர். ஆனால் மீண்டும் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை சமாதானம் செய்து, மீண்டும் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கே அழைத்துச் சென்றனர். இதையடுத்து மாலையில் அவர்களை ரயிலில் அனுப்பி வைத்தனர்.

மீண்டும் போராட்டம் நடத்த வருவோம் - அய்யாக்கண்ணு

இது குறித்து பிபிசி தமிழிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், "கடந்த மக்களவை தேர்தலில் ஒரு கிலோ நெல்லுக்கு 54 ரூபாய் கொடுப்பதாக பிரதமர் கூறினார். ஆனால், ஒரு கிலோவிற்கு ரூ. 20.60 கொடுத்துள்ளார். கரும்பு ஒரு டன்னுக்கு 8, 100 ரூபாய் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால், கொடுப்பது ரூ. 2, 900 தான்," என்றார்.

"அதிலும் நிலுவை 10 ஆயிரம் கோடி ரூபாய். கோதாவரி - காவிரி இணைப்பு குறித்து அறிவிப்பு மட்டும் செய்கிறாகள். ஆனால், நிதி ஒதுக்காமல் ஏமாற்றுகிறார்கள். விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றுவதை, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று போராட்டம் நடத்தவே டெல்லிக்கு வந்தோம். டெல்லியைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டோம். ஆனால், எங்களை தடுத்து விட்டனர். நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்த கூட அனுமதிக்கவில்லை. உச்சநீதிமன்ற அனுமதி பெற்று, மீண்டும் போராட்டம் நடத்த டெல்லிக்கு வருவோம்.'' என்றார் அய்யாக்கண்ணு.

காணொளிக் குறிப்பு, அதிக வருவாய் தரும் விதைப்பண்ணை அமைப்பது எப்படி?
பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: