தமிழ்நாடு விவசாயம்: அதிக வருவாய் தரும் விதைப்பண்ணை அமைப்பது எப்படி?

- எழுதியவர், ஏ.எம்.சுதாகர்
- பதவி, பிபிசி தமிழ்
விதைப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் மேம்பட்ட வருவாய் ஈட்ட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்டம் உருவாகியிருக்கிறது.
கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமல்லாமல், பருவநிலையும் அவர்கள் விதைப் பண்ணைகளை தேர்வு செய்ய காரணமாக உள்ளது.
நெல், நிலக்கடலை, துவரை, பாசிப்பயறு, ஆமணக்கு உள்ளிட்ட அனைத்து பயிர்களின் விதைகளையும் உற்பத்தி செய்து, ஆண்டு முழுவதும் வருமானம் பெறுவதாக இவர்கள் கூறுகின்றனர்.
விதைப்பண்ணை அமைப்பது எப்படி?

விதைசான்றுத் துறை, விதைச்சட்டம் 1966 பிரிவு 8ன்படி கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் வகையில் 1979ம் ஆண்டு முதல் விதைப்பண்ணை முறை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான விதைகளுக்கு சான்று அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விதைப்பண்ணை திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த விதைப்பண்ணைகளில், மத்திய அரசு அனுமதித்துள்ள விதைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
அரசு, அரசு சார்பு, தனியார் மற்றும் விவசாய குழுக்கள் விதைச்சான்று அலுவலகத்தில் விதை உற்பத்தியாளராக பதிவு செய்துகொள்ள முடியும்.
உற்பத்தியாளராக பதிவு செய்ய எந்தவித கட்டணமும் இல்லை. அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம், உதவி விதை அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொண்டு, விதைப்பண்ணை உற்பத்தியாளராக பதிவு செய்துகொள்ளளாம்.
விதை உற்பத்தியை தொடங்கலாம். விதை சான்று அலுவலர்களின் வழிக்காட்டுதலின்படி தரமான விதைகளை உற்பத்தி செய்து, வேளாண் துறைக்கே நேரடியாக விற்பனை செய்யலாம். பதிவு செய்தவுடன் பூக்கும் பருவம், அறுவடை காலங்களில் வேளாண் விதை சான்று அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு செய்வார்கள். அதில் பயிர் விலகு தூரம் மற்றும் கலப்பு, விதைமூலம் பரவும் நோய் இருக்கின்றதா? உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்வார்கள். உற்பத்தி செய்யும் விதைகளை சுத்திகரித்து தரமான விதைகளுக்கு மட்டுமே வேளாண்துறையின் சான்று அளிக்கப்படும்
விதைகளின் வகைகள்

அரசால் அனுமதிக்கப்பட்ட விதைகளை உற்பத்தி செய்ய வல்லுநர் விதை, சான்று விதை, ஆதார விதை என 3 வகைகளில் விதைகளை உற்பத்தி செய்யலாம். வல்லுநர் விதை என்பது ஆராய்ச்சி நிலையங்களில், அறிவியல் நிலையங்களில், அரசு விதைப்பண்ணைகளில் விதைச் சான்று அலுவலர்களின் நேரடி பார்வையில் உற்பத்தி செய்யப்படும் தரமான விதைகள் ஆகும்.
வல்லுநர் விதைகளை விவசாயிகளின் தோட்டத்திலோ அல்லது அரசு பண்ணைகளிலோ நட்டு, விதையாக உற்பத்தி செய்து, திரும்பவும் வேளாண் விரிவாக்க அலுவலகத்திற்கு கொண்டு செல்லும்போது அவற்றை சான்றிதழ் விதை, ஆதார விதை என்று அழைக்கிறார்கள்.
அவ்வாறு பெறப்படும் விதைகளை யாரிடம் இருந்து வாங்குகிறோமோ, அவர்களின் ரசீது, விதைச்சான்று பதிவு, வயலின் வரைபடம் இணைத்து படிவம் 1 என்ற படிவத்துடன் பதிவு செய்யப்படும். அப்படி செய்யப்படும் பதிவுகளுக்கு ஒரு பயிருக்கு ரூபாய் 25 கொடுக்க வேண்டும். ஆனால் 25 ஏக்கர் வரை ஒரே விதைப் பண்ணையாக பதிவுசெய்துகொள்ளலாம். அதேபோல, வயல் ஆய்வு கட்டணம் 50 அல்லது 60 ரூபாய்தான் வரும்.
விதைப்பண்ணை விவசாயிகளின் அனுபவம்

விதைகளை உற்பத்தி செய்யும் விதைப்பண்ணை விவசாயம் மாற்று முறையாக மட்டுமின்றி, லாபகரமானதாகவும் இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் விதைப்பண்ணைகள் இருந்தாலும் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வகையான விதைகளையும் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டம் புது சத்திரத்தை சேர்ந்த சதீஷ்குமார் தனது அனுபவத்தை பிபிசி தமிழிடம் கூறுகையில்,
''எங்க அப்பா காலத்தில், உளுந்து, துவரை, நெல், பருத்தி, பாசிப்பயிறு, கடலை போன்றவைகளை விவசாயம் செய்து வந்தோம். அப்போது, வெளி சந்தையில் இருந்து அப்பா, விதைகளை வாங்கி வந்து விவசாயம் செய்வார். ஆனால், தற்போது, தமிழ்நாடு அரசின் வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து விதைகளை, வாங்கி விவசாயம் செய்கிறேன். இதனால், நல்ல தரமான விதைகளை என்னால் உற்பத்தி செய்ய முடிகிறது. இதன் மூலம், அவர்களும் தரமான விதைகளை விற்பனை செய்கின்றனர். விதையின் முளைப்பு திறன் 95 சதவீதம் என்று சொல்கிறார்கள். அதுபோலவே, 95 சதவீதம் முளைப்பு திறன் அந்த விதைகளுக்கும் இருக்கிறது.

அதேபோல பூக்கும் பருவத்தில் ஒரே நேரத்தில் எல்லா செடிகளிலும் பூக்கள் வருகின்றன. விதைகளில் கலப்பு இருக்காது. இதனால் மகசூல் அதிகமாகி தற்போது முழு மகசூல் கிடைக்கிறது. ஆனால், வெளிமார்க்கெட்டில் வாங்கும் விதைகள் மூலம் 5 மூட்டைகள் மகசூல் வந்தால், வேளாண் துறை விதைகளில் 8 மூட்டை வரை தரமான மகசூல் கிடைக்கிறது. வெளி மார்க்கெட்டில் வாங்கும் விதையில் ஒரு ஏக்கருக்கு 800 கிலோதான் கிடைக்கும். ஆனால் இந்த தரமான விதையில் இருந்து 1200 கிலோவரை விதை கிடைக்கும். வெளிமார்க்கெட்டில் வாங்கி வந்து உற்பத்தி செய்யப்படும் விதைகளில் இருந்து ரூபாய் 65,000 கிடைத்தால், விதைப்பண்ணையில் இருந்து வரும் விதை விற்பனையில் ரூபாய் 20,000 கூடுதலாக கிடைக்கும். அதனால், தற்போது செய்துவரும் விதை உற்பத்தி மாற்று விவசாயம் நல்ல வருமானம் தருகிறது'' என்கிறார்.
ஆதார விலையை உயர்த்த கோரிக்கை

விதைப்பண்ணையின் மூலம் லாபம் அதிகம் கிடைத்தாலும் ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளையும் எதிர்கொள்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கல்குறிச்சியில் விதை பண்ணை விவசாயம் செய்து வரும் விவசாயி முருகேசன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இன்றைய காலக்கட்டத்தில் விதை உற்பத்தி செய்வது விவசாயிகளுக்கு லாபகரமான தொழில்தான். வேளாண் அலுவலகத்தின் மூலம் வாங்கப்படும் அனைத்து சான்றிதழ் பெற்ற விதைகளும், தரமானதுதான். அதனால்தான் எங்களாலும், தரமான விதைகளை உற்பத்தி செய்யமுடிகிறது. வெளிமார்க்கெட்டில் வாங்கும் விதைகள் ஒரே அளவில் சீராக இருக்காது. நாங்கள் விதை உற்பத்தி செய்யும்போது வேளாண்துறை மூலம் அடிக்கடி களஆய்வு செய்கிறார்கள். அதனால், தரமான விதைகளை வாங்கி தரமான விதைகளை உற்பத்திசெய்து மீண்டும் வேளாண் துறைக்கே கொடுக்கிறோம்.
ஆனாலும், எங்கள் விவசாயத்திலும் சில இடர்பாடுகள் உள்ளன. குறிப்பாக, ஆள் பற்றாக்குறை. நிறைய வேலை ஆட்கள் தேவைப்படுவதால், கூடுதல் செலவும் ஆகிறது. எனவே ஆதார விலையை அரசு உயர்த்திக் கொடுக்க வேண்டும். விதை உற்பத்திக்கு உண்டான ஊக்கத் தொகையையும் அதிகப்படுத்தி கொடுத்தால், மேலும் பல விவசாயிகள் ஆர்வமாக விதை உற்பத்தி தொழிலை செய்வார்கள்.'' என்றார்.
இரண்டு மடங்கு உற்பத்தி, 3 மடங்கு லாபம்

நாமக்கல் விதை சான்று உதவி இயக்குனர் (பொறுப்பு) ஹேமலதாவிடம் பேசுகையில், ''விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணை வித்துக்கள், பருத்தி உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் விதை உற்பத்தி செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,182 விவசாயிகள் விதைப்பண்ணை அமைக்க பதிவு செய்துள்ளனர். அவர்கள் மூலம் 2, 120 ஏக்கரில் 3,659 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து, பெறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 1,005 விவசாயிகள் பதிவுசெய்துள்ளனர். வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் விவசாயிகள் தரமான விதைகளைப் பெற்று, இரு மடங்கு உற்பத்தி செய்து 3 மடங்கு லாபம் பெறலாம்,'' என்றார்.
பிற செய்திகள்:
- கேரளாவில் 40 மணி நேரத்திற்கும் மேல் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு
- சசிகலா மீதான ஊழல் வழக்கு: ஐஜி ரூபா குற்றச்சாட்டால் என்ன நடக்கும்?
- பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள்: ஒப்புக்கொண்ட முன்னாள் போப்
- ஹிஜாப் Vs காவி துண்டு: கர்நாடகாவில் தீவிரமாகும் ஆடை விவகாரம் - அடுத்தது என்ன
- பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
- கோடநாடு எஸ்டேட்: ஸ்டாலின் அரசுக்கு ஆதாரத்தை திரட்டுவதில் பின்னடைவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்














