நியூட்ரினோ திட்டத்தால் தேனி அருகே என்ன பாதிப்பு வரும்? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?

பட மூலாதாரம், BBC/Getty Images
- எழுதியவர், க.சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
தேனி மாவட்டத்தில் மலையைக் குடைந்து அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் என்றும், புலிகள் நடமாட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்திய அரசு சார்பாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த தேசிய புலிகள் ஆணையம் ஆட்சேபனை இல்லையென்று தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட இந்த நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அதில், தமிழ்நாடு அரசு பிப்ரவரி 17 அன்று தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "புலிகள் வலசைப் பாதையில் இந்தத் திட்டம் வருவதால், நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பெரியார் புலிகள் காப்பகம் மற்றும் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவின் தாவர மற்றும் உயிரின வளங்கள் பாதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இத்திட்டத்திற்கு தடையில்லாச் சான்று (NoC)வழங்கி இரண்டு நாள் கழித்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் இதைத் தெரிவித்துள்ளது.
நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பரப்பு கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் அமைந்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத் துறையின் முதல்நிலை செயலாளர் சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், "இந்தத் திட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள கடினமான பாறைகளை வெடிக்க வைத்துத் தகர்க்க வேண்டியுள்ளது.
அதற்குப் பெரிய அளவில் அதிகத் திறன் வாய்ந்த வெடிகுண்டுகள் தேவைப்படும். சுரங்கம் அமைக்கும் பணியில் 600,000 கன மீட்டருக்கு சார்னோகைட் பாறைகளைத் தோண்ட வேண்டியிருக்கும்.
மலை உச்சியிலிருந்து 1000 மீட்டர் ஆழத்துக்கு திட்டத்திற்கான குகை அமைக்க வேண்டியிருக்கும். அதற்கான கட்டுமானப் பணிகளின் போது, வாகனங்கள், மனித நடமாட்டம் தேவைப்படும். அதோடு, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கழிவுகள் காட்டுப் பகுதிக்குள் குவியும். இது அப்பகுதியின் சூழலியல் பாதுகாப்பைப் பாதிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வெடிகுண்டுகள் பயன்பாடு
மேலும், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், "திட்டம் வரவுள்ள பகுதியான மதிகெட்டான் சோலை மற்றும் பெரியார் புலிகள் காப்பகத்தின் வழித்தடப் பாதையில் அமைந்துள்ளதால், டாடா ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இந்தத் திட்டத்திற்கான காட்டுயிர் வாரிய அனுமதியை வழங்க முடியாது என்று மாவட்ட வனத்துறை அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.
திட்டம் வரவுள்ள பகுதி, உலக அளவில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் போடி மலையாகும். இது புலிகள் வாழக்கூடிய மேகமலை திருவில்லிப்புத்தூர் புலிகள் காப்பகத்தை கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக விளங்குகிறது. இந்த இணைப்புப் பகுதி புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதற்கும் அவற்றின் இனப்பெருக்க பரவலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்த மலையில் மிகச் சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால் கூட, புலிகளின் நடமாட்டம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இந்த மலைப்பகுதியை புலிகள் தவிர்க்கக்கூடிய அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும்.
மேலும், இந்த மலைப் பகுதியானது வைகை அணைக்கு நீர் தரக்கூடிய பெரியாறு நதியின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக விளங்குகிறது.
திட்டத்திற்காக அமைக்கப்படும் குகை, நிலப்பரப்பிலிருந்து ஒரு கிலோமீட்டர் ஆழத்திற்கு பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டாலும் கூட, அதை அமைப்பதற்கான பணியின்போது வெடிபொருள் மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதால், புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் நடமாட்டம் பெரிய அளவில் பாதிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், டாடா ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்தத் திட்டம் மதிகெட்டான் சோலை மற்றும் புலிகள் வலசைப் பாதையில் இடம் பெற்றிருந்தாலும் கூட, இது நிலத்திற்கு அடியில் வருவதால், இதனால் எவ்விதப் பாதிப்பும் இருக்காது என்றும் இதைச் செயல்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என்று தேசிய புலிகள் ஆணையம் கூறியுள்ளதாக தெரிவித்தது.
2021 மே 20-ஆம் தேதியன்று தமிழ்நாடு வனத்துறையிடம் டாடா ஆராய்ச்சி நிறுவனம் இதற்காக விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பம் தற்போது தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்திடம் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
"அரசியல் பின்னணியால் தடுக்கப்பட்டுள்ளது"
தமிழ்நாடு அரசின் இந்த முடிவு குறித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், "அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கது. நியூட்ரினோ ஆய்வகக் கட்டமைப்பு மலைக்கு அடியில் நடந்தாலும் கூட, அதன் கட்டுமானக் கழிவுகள், குண்டு வெடிப்பது போன்றவை நடப்பதால் சூழலியல் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறி தமிழ்நாடு அரசு அனுமதியை மறுத்துள்ளது. 13 ஆண்டுகளாக அந்த மக்கள் போராடியதற்குக் கிடைத்துள்ள வெற்றியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்," என்று கூறினார்.
நியூட்ரினோ திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை அமல்படுத்துவதால் ஏற்படக்கூடிய நேர்மறையான விளைவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் ஸ்டீஃபன், "இது ஓர் அடிப்படை ஆராய்ச்சி. இதன்மூலமாக அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயனடைவார்கள். தமிழ்நாடு அறிவியல் துறையில் முன்னேற்றம் அடையும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
இதுகுறித்த தேவையற்ற அச்சம் மக்களிடையே பரவியுள்ளது. எந்தக் கதிர்வீச்சும் இதிலிருந்து வெளிப்படாது. கதிர்வீச்சு வரக்கூடிய எந்தப் பொருளையும் இதில் பயன்படுத்தப் போவதில்லை. அதுமட்டுமின்றி, இது மலைக்கு அடியில்தான் வருகிறது. அங்குள்ள பாறைகள் சார்னோகைட் எனப்படும் கடினப் பாறைகள். அவற்றைக் குடைந்து இதைச் செய்வதல் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. இருப்பினும் அரசியல் காரணங்களால் இது தடுக்கப்பட்டுள்ளது," என்றார்.
மேலும், "இந்தப் பேரண்டம் எப்படி உருவானது, இதன் அடிப்படைக் கட்டமைப்பு என்ன போன்றவற்றை இந்த ஆய்வுகளில் புரிந்துகொள்ள முடியும். இந்த ஆய்வுகளின் பாதையில் நம்மால் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் காண முடியும். எதிர்காலத்திற்கான அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கே இது வித்திடலாம்," என்கிறார் பேரா.ஸ்டீஃபன்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













