திருவள்ளூர் சாமியாரின் ஆசிரமத்தில் விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவி - என்ன நடந்தது?

சித்தரிப்பு படம்

பட மூலாதாரம், Getty Images

திருவள்ளூர் மாவட்டத்தில் சாமியார் ஒருவரின் ஆசிரமத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `இருபது ஆண்டுகளாக சாமியார் அந்தப் பகுதியில் ஆசிரமம் நடத்தி வந்தாலும் இதுவரையில் பாலியல் புகார்கள் எதுவும் வந்ததில்லை. என்ன நடந்தது என தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள், திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதியன்று வெள்ளாத்துக்கோட்டையில் உள்ள முனுசாமி என்ற சாமியாருக்குச் சொந்தமான ஓடைக்கரை ஆசிரமத்துக்கு தனது பெரியம்மாவுடன் மாணவி சென்றுள்ளார்.

அன்று இரவு ஆசிரமத்திலேயே உணவை சாப்பிட்டு மாணவியும் அவரது உறவினர்களும் உறங்கியுள்ளனர். இந்நிலையில், மாணவி விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்ததை சிலர் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெரியம்மாள் முதலுதவி சிகிச்சையைக் கொடுத்துள்ளார். இதன்பின்னர், வெங்கல் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலன் கொடுக்காததால், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 16 ஆம் தேதி காலையில் மாணவி இறந்துவிட்டார்.

இதையடுத்து பென்னலூர்பேட்டை காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், `மாணவிக்கு பேய் பிடித்திருந்ததால் சிகிச்சைக்காக சாமியாரிடம் கூட்டிச் சென்றோம். மாணவியின் இறப்புக்கு சாமியாரே காரணம், அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறி மாணவியின் உறவினர்கள் போராடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் சாமியார் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, காவல்துறை வட்டாரத்தில் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` கடந்த 14 ஆம் தேதி மதியம் ஓடைக்கரை ஆசிரமத்துக்கு மாணவி, அவரது தங்கை ஆகியோர் அவரது பெரியம்மாவுடன் வந்துள்ளனர். அங்கு மாணவியின் பெரியம்மாள் மகள் குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அன்று இரவே அந்த மாணவி விஷம் குடித்துவிட்டதாகத் தெரிகிறது. வெங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்கு வேண்டிய மருத்துவர்கள் உள்ளதாகக் கூறி மாணவியின் உறவினர்கள்தான் அழைத்துச் சென்றுள்ளனர். இதன்பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் மாணவியைக் காப்பாற்ற முடியவில்லை'' என்கின்றனர்.

தொடர்ந்து பேசுகையில், `` ஒவ்வோர் ஆண்டும் பவுர்ணமி அன்று ஆசிரமத்துக்கு வருவதை மாணவியும் அவரது உறவினர்களும் வழக்கமாக வைத்துள்ளனர். சிவன், காளி ஆகிய கடவுள்களை வைத்து அந்த சாமியார் பூஜை செய்து வருகிறார். அந்தப் பகுதியில் 20 ஆண்டுகளாக சாமியார் வசித்து வருகிறார். இதுவரையில் பாலியல்ரீதியாக எந்தப் புகாரும் வந்ததில்லை. மாணவிக்கு பேய் பிடித்ததாகக் கூறி விவகாரத்தை அவரது உறவினர்கள் திசை திருப்புவதாகவும் சந்தேகம் உள்ளது. மாணவிக்கு தனிப்பட்ட பிரச்னைகள் இருந்ததா.. காதல் விவகாரமா என்பதெல்லாம் விசாரணையில் தெரியவரும். சாமியாரிடம் விசாரணை நடக்கும்போது முழு விவரங்களும் தெரியவரும்'' என்கின்றனர்.

இதுதொடர்பாக, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி சாரதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``முனுசாமி என்பவர் வைத்தியம் செய்து வருகிறார். மக்களுக்கு அருள்வாக்கும் கூறுவார். முனுசாமியிடம் விசாரணை நடத்தினால்தான் முழு விவரமும் தெரியவரும். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேல் தற்போது சொல்வதற்கு எதுவும் இல்லை'' என்றார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: