ஆர்யா ராஜேந்திரன் - சச்சின் தேவ்: இந்தியாவின் இளம் மேயருக்கும், கேரளாவின் இளம் எம்.எல்.ஏ.வுக்கும் திருமண ஏற்பாடு

ARYA RAJENDRAN

பட மூலாதாரம், ARYA RAJENDRAN

படக்குறிப்பு, ஆர்யா ராஜேந்திரன்

(இன்று (17-02-2022) இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி வலைதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்)

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகர மேயர் எஸ். ஆர்யா ராஜேந்திரன், பாலுச்சேரி எம்.எல்.ஏ சச்சின் தேவ் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக ' தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

22 வயதாகும் ஆர்யா, இந்தியாவின் இளம் மேயராவார். 28 வயதாகும் சச்சின் தேவ் கேரள சட்டமன்றத்தில் இளம் எம்.எல். ஏ ஆவார். இருவரும் பால சங்கம் மற்றும் எஸ்.எஃப்.ஐ அமைப்புகளில் பணியாற்றிய நாட்களில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பேசிய சச்சின் தேவ், இரு குடும்பத்தினருக்கும் இடையே ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. திருமண தேதி உட்பட மற்ற முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றார்.

ஆர்யா பேசுகையில், "நாங்கள் இந்திய மாணவர் சங்கத்தில் (எஸ்.எஃப்.ஐ.) ஒன்றாகப் பணியாற்றிய நாட்களில் இருந்தே நண்பர்களாக இருக்கிறோம். இரு குடும்பங்கள் ஆரம்ப கட்டமாக பேசி வருகின்றனர். மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இது ஒரு சாதாரண திருமண முன்மொழிவுதான்." என்று அவர் கூறினார்.

கோழிக்கோடு நெல்லிக்கோடு பகுதியைச் சேர்ந்த சச்சின் தேவ், முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார்.

புதுச்சேரியில் விரைவில் விமான சேவை தொடங்கப்படும்: தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

Tamilisai Soundararajan

பட மூலாதாரம், FACEBOOK/TAMILISAI SOUNDARARAJAN

படக்குறிப்பு, தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் 126 ஆம் ஆண்டு மாசிமக கடல் தீர்த்தவாரி உற்சவம் புதன்கிழமை (பிப்ரவரி 16) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்று உணவு பரிமாறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர். "இன்றைய கொரோனா காலகட்டத்தில் அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். புதுச்சேரியில் 90 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திவிட்டோம் என்று மக்கள் பயமின்றி அலட்சியமாக உள்ளனர். புதுச்சேரியில் பல தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் தான் இருக்கிறோம் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதால் இறை நம்பிக்கையில் எந்தவிதத்திலும் குறுக்கிடவில்லை.

புதுச்சேரியில் விமான சேவை தொடங்குவதற்கான ஆரம்ப கால நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. நிச்சயம் மிக விரைவில் விமான சேவை தொடங்கப்படும். அதுமட்டுமின்றி, பல நல்ல திட்டங்கள் புதுச்சேரிக்கு வர இருக்கின்றன," என்று தெரிவித்துள்ளார்.

இனி குழந்தைகளுக்கும் தலைக்கவசம் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

இருசக்கர வாகன பயணத்தில் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு தலைக்கவசம் கட்டாயம் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளதாக, 'இந்து தமிழ் திசை' செய்தி தெரிவிக்கிறது. மேலும், குழந்தைகளை அழைத்து செல்லும் போது மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Helmet

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 6 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள், தலைக்கவசம் அணியாததால் ஏற்படுகின்றன.

இந்நிலையில் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் பயணித்தல் அல்லது அமர்ந்து செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் தற்போது வெளியானது.

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129-ன் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பாதுகாப்பு சேணம் அல்லது தலைக்கவசம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மோட்டார் வாகனங்கள் (இரண்டாவது திருத்த) விதிகள் 2022 வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குப் பின் இந்த விதிகள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது இந்து தமிழ்திசை செய்தி.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: