நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திருச்சி மாநகராட்சியை வெல்லப் போவது யார்?

- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருச்சி மாநகராட்சியைக் கைப்பற்றுவதில் தி.மு.க, அ.தி.மு.க இடையே நேரடிப் போட்டி இருந்தாலும், `முடிவைத் தீர்மானிப்பதில் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும் பங்கு வகிக்கலாம்' என்கின்றன அரசியல் கட்சிகள்.
`போக்குவரத்து நெரிசல், பாதாள சாக்கடைத் திட்டக் குளறுபடி என ஏராளமான பிரச்னைகள் உள்ளன. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே கடந்த காலங்களில் போதிய அக்கறை செலுத்தவில்லை' என்கின்றனர் திருச்சி மக்கள்.
தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க என அரசியல் கட்சிகள் பலரும் மலைக்கோட்டையைக் கைப்பற்றும் நோக்கில் கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
சென்னை, கோவை, மதுரை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக திருச்சி மாநகராட்சி பேசப்பட்டாலும் நகரின் உள்கட்டமைப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இங்குள்ள 65 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ், த.மா.கா, அ.தி.மு.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களே மேயராக பதவி வகித்ததால் இந்தமுறை மாநகராட்சியைக் கைப்பற்றுவதில் தி.மு.க மும்முரமாக உள்ளது. அதற்கேற்ப 50 வார்டுகளில் தி.மு.க போட்டியிடுகிறது.
கடந்த 1994 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் மேயர் பதவி என்பது பெண்களுக்கே ஒதுக்கப்பட்டு வந்தது. தற்போது பொதுப்பிரிவினருக்கு என ஒதுக்கப்பட்டதால் முதல்முறையாக ஆண் வேட்பாளர் ஒருவர், திருச்சி மேயராகப் பதவி வகிக்க இருக்கிறார்.
அரசியல் கட்சிகளின் பிரசார வியூகம்
இந்தமுறை தனது ஆதரவாளர்களில் ஒருவருக்கு மேயர் பதவியைப் பெற்றுத் தந்துவிடும் நோக்கில் அமைச்சர் கே.என்.நேரு, பிரசாரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்துக்கு என ரிங் ரோடு, மேம்பாலம், புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் எனப் புதுப்புது திட்டங்களை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளதால், `மலைக்கோட்டையை தி.மு.க பிடிக்கும்' என அக்கட்சியினர் பேசி வருகிறார்கள்.
அதேநேரம், அ.தி.மு.கவை பொறுத்தவரையில் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறது. `பா.ஜ.க தங்கள் கூட்டணியில் இல்லாததால் நகரில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகளும் தங்கள் பக்கம் வரலாம்' என அவர்கள் நம்புகின்றனர்.
தி.மு.கவின் பொங்கல் பரிசுத் தொகுப்பு சர்ச்சையை முன்வைத்தே அ.தி.மு.க வேட்பாளர்கள், மக்களிடம் வாக்கு சேகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இவர்களுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு, மற்றும் மேற்கு ஆகிய தொகுதிகளில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றதால், மாநகராட்சியில் ஓரளவு வெல்ல முடியும் என அக்கட்சியின் வேட்பாளர்கள் நம்புகின்றனர்.
களநிலவரம் என்ன?
உண்மையில் களநிலவரம் எப்படியிருக்கிறது? தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் மீதான மக்களின் பார்வை எப்படியிருக்கிறது என்பதை அறிய மலைக்கோட்டை நகரை வலம் வந்தோம்.
`` திருச்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை. அதன் கழிவுகள் காவிரியில் கலக்கின்றன. அது இன்னொரு கூவமாக மாறிவிடக் கூடாது. பாதாள சாக்கடையை சுத்திகரிக்கும் வகையில் பஞ்சப்பூரில் உள்ள நீரேற்று நிலையமும் செயல்படாமல் உள்ளது. அனைத்து சாக்கடைகளும் காவிரிக்குத்தான் செல்கின்றன. இங்கிருந்து ராமநாதபுரம் வரையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செல்கிறது. ஆனால், திருச்சி மக்களுக்கே வெயில் காலத்தில் குடிநீர் கிடைப்பதில்லை'' என்கிறார் சமூக ஆர்வலர் சதீஷ்குமார்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` நகரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. முக்கியமான மூன்று சாலைகளிலும் நெரிசல் அதிகமாக உள்ளது. சாலை வசதிகளுக்கு ஏற்ப முறையான பாலங்கள் இல்லை. சத்திரம் பேருந்து நிலையம் போதுமான அளவுக்கு இல்லை. மத்திய பேருந்து நிலையமும் அப்படித்தான். கூடவே, இணைப்பு பேருந்து நிலையங்களும் சிக்கலான நிலையில்தான் உள்ளன. ஒரு காலத்தில் கலை உலகின் தொட்டிலாக திருச்சி இருந்தது. ஆனால், இங்கு கலை நிகழ்ச்சிகளுக்கு என்று பெரிய அரங்கம் எதுவும் இல்லை. இலக்கிய கூட்டங்களையும் நடத்த முடியவில்லை'' என்கிறார்.
நாள்தோறும் இரவு நேரத்தில் பாதாள சாக்கடைகளையும் ஆவின் நிறுவன கழிவுகளையும் திறந்துவிடுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதாகக் கூறும் சதீஷ்குமார், `` மருத்துவக் கழிவுகளை உய்ய கொண்டான் கால்வாயில் திறந்துவிட்டு சாக்கடையாக மாற்றுகின்றனர். இதற்கான மாற்று ஏற்பாடுகள் இல்லை. நகரில் பசுமை என்பது குறைந்து வருகிறது. அனைத்து அரச மரங்களையும் வெட்டி வீழ்த்திவிட்டனர். அதற்கு மாற்றாக எந்த மரங்களையும் நடவில்லை. நகரில் வெப்பம் கூடிக் கொண்டே போகிறது. உள்ளாட்சி அமைப்பினர் முயற்சி எடுத்தால் நகரம் சிறப்பாக மாறும்'' என்கிறார்.
முடங்கிய வணிக வளாகம்
அதேபோல், நகரின் நெரிசலுக்கு முக்கியக் காரணமாக காந்தி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு மாற்றாக கள்ளிக்குடியில் 40 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் ஒன்றைக் கட்டுவதற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இந்த வளாகத்தைக் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். ஆனால், போக்குவரத்து வசதி இல்லாதது, தூரம் ஆகிய காரணங்களால் வியாபாரிகள் அந்த இடத்துக்கு இடம்பெயரவில்லை. அந்த இடத்தில் காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையம், வங்கி, உணவகம் என அனைத்து ஏற்பாடுகள் இருந்தும் வளாகம் முடங்கியே கிடக்கிறது. அங்குள்ள பதப்படுத்தும் மையத்தை ஆப்பிள் வியாபாரிகள் மட்டுமே பயன்படுத்தி வருவதாக அங்கிருந்த ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வளாகத்தைப் பயன்படுத்துவது தொடர்பான மாற்று வழிகளை ஆலோசிக்காமல் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் அருகிலேயே மார்க்கெட்டையும் அரசு அமைக்க உள்ளது.
வெளிப்படைத்தன்மை இல்லை
``பஞ்சப்பூர் வணிக வளாகத்தில் யாருக்கெல்லாம் இடம் கொடுக்கப் போகிறார்கள் என்ற விவரம் எதுவும் வெளிப்படையாக இல்லை'' என்கிறார், திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன்.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியவர், `` 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மார்க்கெட் இயங்கி வருகிறது. காந்தி மார்கெட்டை சீரமைத்துத் தருவதாக தி.மு.க எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் எந்தவகையில் சீரமைக்கப் போகிறார் எனத் தெரிவிக்கவில்லை. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த 5 வியாபாரிகளுக்கும் இடம் தருவதாகச் சொன்னார்கள். இன்று வரையில் தரவில்லை. இந்த மார்க்கெட்டை சீரமைத்தாலும் சில்லறை வியாபாரிகள் இங்கேயே இருக்க வேண்டும் எனக் கூறி வருகிறோம்'' என்கிறார்.
மேலும், `` எங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாததால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என முடிவு செய்தோம். பிறகு வியாபாரிகள் ஒன்று சேர்ந்து வேண்டாம் என முடிவெடுத்தனர். இந்த மார்க்கெட்டை நம்பித்தான் மாநகராட்சி உள்ளது. அந்தளவுக்கு ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் இந்த மார்க்கெட்டை முழுமையாக சீரமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்'' என்கிறார்.
காந்தி மார்க்கெட்டை நம்பியே சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உள்பட பலரும் உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு காய்கறிகள் வருகின்றன. இந்த மார்க்கெட்டை நம்பி மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளதாகவும் அவர்களின் வாழ்வாதாரம் பறிபோகாத அளவில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கமலக்கண்ணன் கூறுகிறார்.
தொழில்துறையினர் சொல்வது என்ன?
அடுத்ததாக, பாரத மிகுமின் நிலையமான பெல், ஹெச்ஏபிபி, ஓஎஃப்டி எனப்படும் படைக்கலன் தொழிற்சாலைகள், பொன்மலை ரயில்வே பணிமனை மத்திய அரசின் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ``வேளாண் தொழிலுக்கு அடுத்தபடியாக இயந்திர உற்பத்தி இருந்தாலும் அதனைப் பெருக்குவதற்கு ஏற்ற தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படவில்லை'' என்கிறார், திருச்சி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஷ்ணன்.

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசியவர், ``மிகுந்த நெரிசலாக சாலைகள் இருப்பதால் தொழில்துறையினருக்கு சிரமமாக உள்ளது. ரிங் சாலை அமைத்துக் கொடுத்தால் பொருள்கள் வந்து செல்வதற்கு எளிதாக இருக்கும். சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு விற்பனைக்காக தனியாக ஓர் இடம் ஒதுக்க வேண்டும். திருச்சியில் வர்த்தக மையம் ஒன்று அமைக்க உள்ளோம். அதற்கு சாலை வசதிகள் செய்து தந்தால் வெளிநாட்டினரை ஈர்க்க முடியும். மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் உதவியாக இருக்கும்'' என்கிறார்.
``மத்திய அரசின் `ஒரு நாடு ஒரு பொருள்' என்ற அடிப்படையில் திருச்சியில் வாழையை எடுத்துள்ளனர். அந்தத் தொழிலைச் செய்பவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவை எல்லாம் பேச்சளவிலேயே உள்ளன. உணவு சார்ந்த தொழில்களை அரசு செய்யச் சொல்கிறது. ஆனால், தொழிற்பேட்டையில் அதற்கான இடவசதி இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்துக்கு வருகிறவர்கள் எடுக்கின்ற முயற்சிகள்தான் திருச்சியை மேம்படுத்தும்'' என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
"900 கோடி ரூபாய் வீண்"
தேர்தல் நிலவரம் தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் துணை மேயரும் தி.மு.க வேட்பாளருமான அன்பழகன், `` பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் வணிக வளாகமும் கொண்டு வரப்பட உள்ளது. அங்கிருந்து குடமுருட்டி வரையில் சாலைகள் போடப்பட உள்ளன. அண்ணா சிலை முதல் காந்தி சிலை வரையில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்தப் பணிகள் நடைபெற உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சியில் இல்லை. அ.தி.மு.க தரப்பில் மேயர் இருந்தாலும் எதையும் செய்யவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் 900 கோடி ரூபாயை வீணடித்துவிட்டனர். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளான கழிப்பிட வசதிகள்கூட அவர்கள் செய்து தரவில்லை'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய அன்பழகன், `` உய்யகொண்டான் கால்வாயை தூர்வாரவில்லை. தற்போது அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அங்கு கழிவுநீர் கலக்காமல் கால்வாய் கட்டும் திட்டமும் உள்ளது. 2016 ஆம் ஆண்டே எங்களின் கனவுத் திட்டமாக இது இருந்தது. நாங்கள் ஆளும்கட்சியாக இருப்பதால் பணிகளை எளிதில் நிறைவேற்றுவோம் என மக்கள் நம்புகின்றனர்'' என்கிறார்.
``கள்ளிக்குடி வணிக வளாகம் முடங்கியே கிடக்கிறதே?'' என்றோம். ``ஆமாம். அதனை என்ன செய்வது என்பது குறித்தும் அமைச்சரிடம் பேசி முடிவெடுப்போம்'' என்கிறார்.
அ.தி.மு.கவின் நம்பிக்கை
``கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் இருந்தும் எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை என தி.மு.க குற்றம் சுமத்துகிறதே?'' என முன்னாள் துணை மேயரும் அ.தி.மு.க வேட்பாளருமான ஜெ.சீனிவாசனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` தவறான தகவல் இது. திருச்சி மாநகராட்சி மற்றும் கொள்ளிடம் ஆற்றை இணைக்கும் பாலமானது 84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 15 சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக விஸ்தரிக்கப்பட்ட திருவெறும்பூர் உள்பட 5 வார்டுகளில் பாதாள சாக்கடைகள் பணிகள் நடந்து வருகின்றன. இதையெல்லாம் நேரில் பார்த்தாலே தெரியும். திருச்சி மாநகராட்சி முழுக்க எல்.இ.டி விளக்குகள் ஜொலிப்பதற்கு அ.தி.மு.க அரசுதான் காரணம்'' என்கிறார்.
மேலும், ``தேர்தலைப் பொறுத்தவரையில் தி.மு.கவை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. நேர்மையான வழியில் தேர்தலை எதிர்கொள்கிறோம். திருச்சியில் அ.தி.மு.கவின் வெற்றி எளிதானதாக இருக்கும். இந்தமுறை நாங்கள் வெற்றி பெறுவதற்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு குளறுபடி ஒன்று போதும். மக்களை தி.மு.க ஏமாற்றிவிட்டது. குறிப்பாக, மகளிர் மத்தியில் ஆளும்கட்சி மீதான கோபம் உள்ளது'' என்கிறார்.

பிற செய்திகள்:
- நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த இளம் பேய் சுறா
- பாகிஸ்தானில் குரானை எரித்ததாக கும்பல் கொலை; மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட நபர்
- நரேந்திர மோதி ஆட்சியில் ரூ.5.35 லட்சம் கோடி வங்கி மோசடி - ராகுல் காந்தி
- மேற்குவங்க விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த ட்வீட் - சர்ச்சையானது ஏன்?
- அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர், ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் யார்யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













