பாகிஸ்தானை ஒதுக்கிவிட்டு செளதி அரேபியா இந்தியாவை நெருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், சல்மான் ராவி
- பதவி, பிபிசி செய்தியாளர்
செளதி அரேபியாவின் ராணுவ தளபதி இந்த வாரம் இந்தியா வந்தார். செளதி அரேபிய ராணுவ தளபதியின் முதல் இந்திய வருகை இது என்பதால் அவரது மூன்று நாள் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்பு, செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது, பிரதமர் நரேந்திர மோதி நெறிமுறைகளை மீறி விமான நிலையத்திற்குச் சென்று அவரை அன்புடன் அரவணைத்து வரவேற்றார்.
முகமது பின் சல்மானின் இந்தப்பயணம் வெறும் சம்பிரதாய பயணம் மட்டுமல்ல, செயல்தந்திர மற்றும் தூதாண்மை வட்டாரங்களில் பல செய்திகளை இது கொண்டு சேர்த்தது. முகமது பின் சல்மான் செளதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, அதாவது 2019 அக்டோபர் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோதியும் செளதி அரேபியாவுக்குச் சென்றார்.
இந்த பயணத்தின் போது, இந்தியா மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையே ஒரு 'செயல்தந்திர கூட்டாளித்துவ சபை' நிறுவப்பட்டது.
செளதி அரேபியாவுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளின் மையப்புள்ளியாக கச்சா எண்ணெய் உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த உறவுகள் கச்சா எண்ணெயை கடந்து செயல்திட்ட ஒத்துழைப்புக்கு வந்துள்ளன என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோதி, செளதி அரேபியா பயணத்தின் போது, 'அரப் நியூஸ்' ஆங்கில நாளிதழிடம் பேசுகையில், 'செளதி அரேபியாவுக்கும், இந்தியாவுக்கும் பாதுகாப்பு விஷயத்தில் ஒரே மாதிரியான கவலைகள் உள்ளன' என தெளிவுபடுத்தினார். பாதுகாப்பு அமைப்பு முறைகளை நிறுவுவது குறித்து பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையேயான செயல்தந்திர ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
2020 டிசம்பரில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்எம் நர்வானே செளதி அரேபியா சென்றார். இந்திய ராணுவத் தலைவர் ஒருவர் அந்த நாட்டிற்குச்செல்வது இதுவே முதல் முறை.
மேலும் இந்த வாரம் செவ்வாய்கிழமை, செளதி அரேபிய ராணுவத்தின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஃபஹத் பின் அப்துல்லா முகமது அல்-முத்தைரும் இந்தியா வந்தார். இந்தியாவுக்கு வருகை தரும் செளதி அரேபியாவின் முதல் ராணுவ தளபதி இவர்தான்.
முக்கியத்துவம் என்ன?
இன்று வரையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் மிகவும் வெற்றிகரமானது வளைகுடா நாடுகள் அதாவது மத்திய ஆசியாவுக்கான கொள்கைகளே என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் சர்வதேச விவகாரங்கள் துறையின் தலைவரும், செயல்திட்ட விவகார நிபுணருமான ஹர்ஷ் வி பந்த் பிபிசியிடம் கூறினார்.
கொரோனா தொற்று காலத்திலும்கூட, இந்தியா மற்றும் செளதி அரேபியாவின் ராணுவ அதிகாரிகள், ஒருவர் மற்றவர் நாட்டில்' பயிற்சி பெற்று வந்ததாக 'செளதி கெசட்' கூறுகிறது.
இந்தியாவுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையேயான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவும் இந்த ஆண்டு வருவது ஒரு தற்செயல் நிகழ்வு. இதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு இரு நாட்டு ராணுவங்களும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. கடந்த ஆண்டு இரு நாட்டு கடற்படைகளும் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன.

பட மூலாதாரம், Getty Images
உறவில் மாற்றம் ஏற்பட என்ன காரணம்?
மத்திய கிழக்கு நிலைமை மூன்று விஷயங்களின் அடிப்படையிலானது - இஸ்ரேல், இரான் மற்றும் அமெரிக்கா என்று ஹர்ஷ் பந்த் மற்றும் அவரைப் போன்ற செயல்தந்திர விவகார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இப்போது பல வளைகுடா நாடுகள் இஸ்ரேல் தொடர்பான தங்கள் கொள்கையை மாற்றிக்கொண்டு தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக்கொண்டுள்ளன.
ஜமால் கஷோக்ஜி விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, செளதி அரேபியாவிடமிருந்து விலகி நிற்கத் தொடங்கியுள்ளன. மத்திய கிழக்கில் நடக்கும் ஒருமுனைப்படுத்தலுக்கு இரண்டு மையங்கள் உள்ளன. அவை இரான் மற்றும் செளதி அரேபியா. எனவே இப்போது செளதி அரேபியா செயல்தந்திர ரீதியாக தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்கிறது. அதற்கு இந்தியா தான் சிறந்த வழி.
கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவிற்கும் செளதி அரேபியாவிற்கும் இடையே உளவுத்துறை தகவல் பரிமாற்றம், சைபர் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தகவல்களை பகிர்ந்து கொள்வது போன்ற பாதுகாப்பு சம்மந்தமாக நிறைய நடவடிக்கைகள் நடந்துள்ளன என்று பந்த் கூறுகிறார்.
மேலும் உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களால், ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை நீக்குவதாக இந்தியா அறிவித்தபோது, செளதி அரேபியா இந்தியாவுடன் நின்றதாக தூதரக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது தவிர, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்றும் செளதி அரேபியா தெளிவுபடுத்தியுள்ளது.
செளதி அரேபியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் உறவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பல திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது.
பாகிஸ்தானின் நிலை

பட மூலாதாரம், Getty Images
செளதி அரேபியாவும், பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டதாக ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.
ஆனால் தற்போது பாகிஸ்தானை பொருட்படுத்தாமல் செளதி அரேபியா இந்தியாவுடன் உத்திசார் உறவை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. அது இந்தியாவை நெருங்கி வருகிறது. இதன் பெருமை முகமது பின் சல்மான் மற்றும் பிரதமர் நரேந்திர மோதியையே சாரும்.
முன்னதாக இந்தியா செளதி அரேபியாவுடன் வர்த்தக உறவுகளை மட்டுமே கொண்டிருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர், ஏனெனில் இந்தியா 18 சதவிகித கச்சா எண்ணெயை அங்கிருந்து இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் இப்போது இந்த உறவுகள் எண்ணெய்க்கு அப்பால் சென்றுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்கள் மற்றும் பீரங்கிகள், செளதி அரேபியாவின் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஃபஹத் பின் அப்துல்லா முகமது அல்-முத்தாயரிடம் காட்டப்பட்டது.
பாதுகாப்பு தொடர்பான 'ஸ்டார்ட்-அப்கள்' மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட்டின் 25 சதவிகிதத்தை ஒதுக்கியுள்ளதாக செளதி அரேபிய ராணுவ தளபதியுடன் வந்திருந்த ராணுவக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
மத்திய கிழக்கின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு செளதி அரேபியா இன்னும் செயல்தந்திர ரீதியாக வலுவாக மாற விரும்புகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவுடன் சிறந்த உறவை ஏற்படுத்த அந்த நாட்டிற்கு எந்தத்தடையும் இல்லை.
மூத்த பத்திரிகையாளர் மனோஜ் ஜோஷி, வெளியுறவு கொள்கைகள் மற்றும் செயல்தந்திர விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். உறவுகளில் இந்த மாற்றம் செளதி அரேபியாவால் தொடங்கப்பட்டது என்று அவர் கூறுகிறார். ஒரு காலத்தில் போர் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் தொடர்பாக, பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு முழுப் படையணி செளதி அரேபியாவில் நிறுத்தப்பட்டிருந்தது.
"முகமது பின் சல்மான் பல மாற்றங்களைச் செய்யத் தொடங்கினார். பாகிஸ்தானின் படைப்பிரிவு அகற்றப்பட்டது, செளதி அரேபியா தனது ராணுவத்தை நவீனப்படுத்துகிறது. அமெரிக்கா கூட அங்கு நிறுத்தியிருந்த 'பேட்ரியாட் ஏவுகணைகளை' அகற்றியுள்ளது. இப்போது செளதி அரேபியா தனது எண்ணெய்க்குப் பிந்தைய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது," என்கிறார் ஜோஷி.
எந்த இஸ்லாமிய நாட்டையும் நம்பாததால், செளதி அரேபியா இந்தியாவுடன் சிறந்த உத்திசார் உறவை உருவாக்க விரும்புகிறது என்று அவர் கருதுகிறார். செளதி அரேபியா இப்போது இஸ்லாமிய நாடுகளிடம் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. ஏனெனில் இந்த நாடுகளில் முஸ்லிம்களின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே வலுவான மோதல் உள்ளது.
அமெரிக்காவுடனான செளதி அரேபியாவின் உறவுகள் மிகவும் சிக்கலானதாகவே இருந்ததை செயல்தந்திர வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அதே சமயம் இந்தியாவுடனான உறவுகள் எப்போதும் சுமுகமாகவே உள்ளன. எனவே, செளதி அரேபியா இந்தியாவுடனான தனது உறவை மேலும் முன்னெடுத்துச் செல்லும். மேலும் வரும் நாட்களில் இந்தியாவில் அதிக முதலீடு செய்யவும் அது விரும்புகிறது. செளதி அரேபிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
செளதி அரேபியா தனது 'தோற்றத்தை' வேகமாக மாற்றி வருவதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் பன்முகத்தன்மை கொண்டுவரக்கூடிய குறைந்தபட்சம் 14 முதல் 15 துறைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், இந்தியாவின் முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அரவிந்த் குப்தா பிபிசியிடம் தெரிவித்தார்.
"முகமது பின் சல்மான் இந்த திசையில் வேகமாக செயல்பட்டு வருகிறார். செளதி அரேபியா மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளும் இந்தியாவுடன் சிறந்த உறவை உருவாக்க முன்னோக்கி வருகின்றன. இந்தியாவும் இந்த திசையில் நகர்கிறது. இது தூதாண்மை ரீதியில் ஒரு பெரிய வெற்றி," என்று அரவிந்த் குப்தா கூறினார்.

பிற செய்திகள்:
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
- "தேர்தலில் வெற்றிபெற பணத்தையும் பரிசுப் பொருள்களையும் வாரியிறைக்கும் கட்சிகள்"
- திருவள்ளூர் சாமியாரின் ஆசிரமத்தில் விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவி - என்ன நடந்தது?
- கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடாவில் அவசரநிலை
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













