மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி: பேசப்படும் அளவுக்கு மக்களால் விரும்பி வாங்கப்படுகிறதா?

பாரம்பரிய நெல் சாகுபடி லாபகரமானதா?
படக்குறிப்பு, கருப்புக்கவுனி அரிசி (புழுங்கல்)
    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

இயற்கை வேளாண்மை என்பது லாபகரமான ஒன்று என்பதே ஊடகங்கள், சமூக ஊடகங்களில் பரவிக் கிடக்கும் தகவல்கள் நமக்கு உணர்த்தும் செய்தியாக உள்ளது. ஆனால், உண்மை நிலை என்னவென்று பார்க்க முற்பட்டால், கள நிலவரம் கவலை அளிப்பதாகவே உள்ளது.

இயற்கை வேளாண்மையில், குறிப்பாக பாரம்பரிய நெல் ரகங்களை மீட்போம் என்ற முழக்கத்துடன் சென்ற விவசாயிகள் பலரும் இன்று நஷ்டத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக கள நிலவரம் கூறுகிறது.

கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்ட இயற்கை விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்துள்ளார்கள்.

அவர்களின் நஷ்டத்திற்கு என்ன காரணம்? பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடுவதில் உள்ள சவால்கள் என்ன? பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்புகளை அறிந்திருக்கும் அளவுக்கு அவற்றை அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்துகிறார்களா?

இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

இயற்கை வேளாண் பரப்பளவு: இந்தியா 5வது இடம்

மக்களை பசி, பட்டினியில் இருந்து மீட்க விவசாயத்தில் வேதிம உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திய அதே உலகம், இன்று ரசாயனங்களின் ஆபத்தை உணர்ந்து இயற்கைக்குத் திரும்புவோம் என்று உரக்க முழங்குகிறது.

உலகின் அந்த முன்னெடுப்பு இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. அரசு தரும் புள்ளிவிவரங்களே அதை நிரூபிக்கின்றன. உலகளவில் இயற்கை வேளாண்மையில் இந்தியா 5வது இடத்தை வகிக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, இயற்கை வேளாண்மையில் தமிழ்நாடு 14வது இடத்தில் இருக்கிறது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இயற்கை வேளாண்மை கொள்கையின்படி, தமிழ்நாட்டில் 31,629 ஹெக்டேர் இயற்கை வேளாண் விளைநிலம் உள்ளது.

அதில் 14,086 ஹெக்டேர் விளைநிலம் இயற்கை வேளாண்மைக்குத் திரும்பிவிட்டன; 17,542 ஹெக்டேர் விளைநிலம் இயற்கை வேளாண்மைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரிய நெல் ரகங்கள் விலை போகிறதா?

இயற்கை வேளாண் பரப்பளவு அடிப்படையில் தமிழ்நாட்டில், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களே முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இயற்கை வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 11வது இடத்தில் இருக்கிறது. 2020-21ஆம் நிதியாண்டில் 4,223 மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு 108 கோடி ரூபாய் ஈட்டியிருப்பதாக இயற்கை வேளாண் கொள்கை கூறுகிறது.

மக்களுக்குப் பாதுகாப்பான உணவை உறுதி செய்ய 'ரசாயனம் இல்லா இயற்கை வேளாண்மையை' நோக்கி விவசாயிகள் திரும்புவதை அது ஊக்குவிக்கிறது.

அரசின் நடவடிக்கைகளாலும், தன்னார்வ அமைப்புகளின் முன்னெடுப்புகளாலும் இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, அருகிப்போன பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்புகளை அறிந்த விவசாயிகள் அவற்றை மீட்டெடுக்க முன்வந்தனர்.

இயற்கை வேளாண்மை மூலம் கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் பலவற்றையும் அவர்கள் மீட்டெடுத்தனர்.

ஆனால், அவை இன்று சந்தையில் விலை போகின்றனவா? விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கிறதா? இதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

பாரம்பரிய நெல் சாகுபடி லாபகரமானதா?
படக்குறிப்பு, பாரம்பரிய கருப்புக்கவுனி நெல்

"இயற்கை வேளாண் பரப்பு அதிகரித்த அளவுக்கு விற்பனை உயரவில்லை"

இதுகுறித்து, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடனான சந்திப்புக்குப் பிறகு அதிகம் அறியப்பட்ட 'அக்ரிசக்தி' நிறுவனர் செல்வமுரளியுடன் பேசினோம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கணினி வல்லுநரான இவர், விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார். அத்துடன், அக்ரிசக்தி அங்காடி என்ற பெயரில் வேளாண் விளைபொருட்களை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இயற்கை வேளாண்மை, குறிப்பாக பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடியின் கள எதார்த்தத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், "என்னுடைய அனுபவத்தில், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை மீதான மோகம் அதிகரித்துள்ளது. இயற்கை வேளாண்மையின் மீது ஏராளமானோர் தங்களது கவனத்தைத் திருப்பியுள்ளனர். இதனால் இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தியாகும் பொருட்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது," என்று கூறுகிறார்.

ஆனால், அதற்கான சந்தை வாய்ப்பு அதற்கேற்ப அதிகரித்ததாகத் தெரியவில்லை எனக் கூறும் செல்வமுரளி, இந்தியாவில் விவசாயப் பொருட்கள் விளைச்சலுக்குப் பிந்தைய பிரச்னைகளால் ஆண்டுதோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

"விவசாயம் செய்வதில் உள்ள பிரச்னைகள் பற்றி நாம் பேசும் அளவுக்கு, விளைந்த பொருட்களை சந்தைப்படுத்துவதில் உள்ள பிரச்னைகள், இழப்புகள் குறித்துப் பேசுவதே இல்லை. அதிலும், இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கு இந்த சவால் இன்னும் அதிகம்."

பாரம்பரிய நெல் சாகுபடி லாபகரமானதா?
படக்குறிப்பு, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையுடன் அக்ரிசக்தி நிறுவனர் செல்வமுரளி

இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கு ஆயுள் மிகவும் குறைவு; எளிதில் பூச்சிகள், வண்டுகள் அரித்துவிடும் எனவும் செல்வமுரளி கூறுகிறார்.

"அவை 10 முதல் 15 நாட்களில் கெட்டுவிடும். நம்மூரில் கருப்புக் கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றி சமூக ஊடகங்களிலும், வெளியிலும் பலரும் பெருமையாகப் பேசுகின்றனர். அதைப் பார்க்கும்போது பாரம்பரிய நெல் ரகங்களுக்கு சந்தையில் கடும் கிராக்கி நிலவுகிறதா என்று பார்த்தால் அதுதான் இல்லை."

கருப்புக் கவுனி அரிசி மட்டும் தமிழ்நாட்டில் 500 டன் அளவுக்கு விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாகவும், இயற்கை வேளாண் விளைபொருட்களை வாங்கி விற்கும் தனக்கு நாள்தோறும் 10 முதல் 15 தொலைபேசி அழைப்புகள் இதுதொடர்பாக வருவதாகவும் கூறுகிறார் செல்வமுரளி.

"அழைப்பில் வரும் இயற்கை விவசாயிகள் பலரும் தங்களிடம் உள்ள கருப்புக் கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசியை விற்றுத் தருமாறு கேட்கின்றனர். ஆனால், அவற்றுக்கான சந்தை வாய்ப்பு இல்லை என்பதால் என்னால் அதைச் செய்து தர முடிவதில்லை," என்கிறார் அவர்.

"சந்தையில் குவியும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்க ஆளில்லை"

சேலத்தில் 'பசுமைக்குடில்' என்ற பெயரில் இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து வரும் ஆரண்யா அல்லி என்பவரும் அதை ஆமோதிக்கிறார்.

தனது சொந்த விவசாய நிலத்தில் மட்டுமின்றி, நெருங்கிய உறவினர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்களின் விளைநிலங்களில் இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்படும் பாரம்பரிய நெல், காய்கறிகள், மஞ்சள், கீரை போன்ற அனைத்தையும் இவர் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்.

மஞ்சள் போன்ற சில பொருட்களை மதிப்புக் கூட்டியும் இவர் விற்பனை செய்து வருகிறார். இயற்கை வேளாண்மை செய்ய ஆர்வத்துடன் வருபவர்களுக்கு அதுகுறித்த ஆலோசனைகளையும் இவர் வழங்குகிறார்.

பாரம்பரிய நெல் ரகங்கள் விற்பனை குறித்து ஆரண்யா அல்லியிடம் கேட்ட போது, "நான் கடந்த 18 ஆண்டுகளாக இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறேன். ஆண்டுதோறும் இயற்கை வேளாண் விளைபொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனால், இயற்கை வேளாண்மைக்கு மாற விவசாயிகளிடையே காணப்படும் ஆர்வத்திற்கு ஏற்ப, அந்த விளைபொருட்களை பயன்படுத்தும் மனப்பான்மை பொதுமக்களிடையே வளரவில்லை," என்று கூறினார்.

இதனால், இயற்கை வேளாண் விளைபொருட்கள் சந்தையில் குவியும் அதேநேரத்தில், அவற்றை வாங்க ஆளில்லாமல் போய்விட்டதாகவு அவர் வருத்தம் தெரிவித்தார்.

"கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார் போன்ற ஒவ்வொரு பாரம்பரிய நெல் ரகமும் அதன் தனிச்சிறப்போடு மக்கள் மனதில் பதிந்துவிட்ட நிலையில், குழியடிச்சான் அரிசி போன்ற பிரபலம் அல்லாத பாரம்பரிய நெல் ரகங்களை வாங்க ஆளில்லை," என்கிறார் ஆரண்யா அல்லி.

பாரம்பரிய நெல் சாகுபடி லாபகரமானதா?
படக்குறிப்பு, ஆரண்யா அல்லி, இயற்கை வேளாண் விளைபொருள் விற்பனையாளர்

60 மூட்டை கருப்புக் கவுனி அரிசி தேக்கம் - வியாபாரி

தன்னிடமே 60 மூட்டை கருப்புக் கவுனி அரிசி விற்பனையாகாமல் தேங்கியுள்ளதாகவும், தன்னுடைய வியாபார தொடர்புகள் மூலம் வரும் நாட்களில் அதை தன்னால் விற்பனை செய்துவிட முடியும் என நம்புவதாகவும் ஆரண்யா கூறுகிறார்.

அதேபோல் அவரது கூற்றின்படி, நேரடியாக சந்தைப்படுத்தக் கூடிய இயற்கை விவசாயிகளுக்கு பிரச்னை இல்லை. ஆனால், அந்த நிலையில் எல்லா இயற்கை விவசாயிகளும் இல்லை.

குறிப்பாக, புதிதாக இயற்கை வேளாண்மைக்கு மாறிய விவசாயிகளுக்கு அதற்கான சந்தை வாய்ப்புகள் தெரியவில்லை. அதைச் சாதகமாக பயன்படுத்தி "மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்கும்போது அவர்கள் கொடுக்கத் தயாராக இல்லை. ஆனால், இயற்கை வேளாண் விளைபொருட்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாத்து வைப்பதும் முடியாத காரியம் என்பதால் அவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது," என்று கூறினார்.

பாரம்பரிய நெல் சாகுபடி லாபகரமானதா?
படக்குறிப்பு, கருப்புக் கவுனி அரிசி (பச்சரிசி)

150 மூட்டை நெல், 60 மூட்டை அரிசி தேக்கம் - இயற்கை விவசாயி

அடுத்தபடியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள பாரூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி தரணிதரனிடம் இதுகுறித்துப் பேசினோம்.

சொந்த ஊருக்கு அருகேயுள்ள அரசம்பட்டியில் 'நம்மாழ்வார் மக்கள் அங்காடி' என்ற பெயரில் இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் கடையையும் அவர் நடத்தி வருகிறார்.

பாரம்பரிய நெல் ரகங்கள் விற்பனை குறித்து அவர் கூறுகையில், "5 ஆண்டுகளுக்கு முன்பு வரை கருப்புக் கவுனி அரிசி கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் விலை போனது. இப்போது அதுவே 140 ரூபாய் தான் விலை போகிறது.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பது குறித்த விழிப்புணர்வால் பலரும் எங்களிடம் நேரில் வந்து விதை நெல் வாங்கிச் செல்கின்றனர். ஆனால் அவற்றை விற்பனை செய்யும் வழி தெரியாமல் அவர்கள் தவிக்கின்றனர்," என்று கள நிலவரம் குறித்து விளக்கினார்.

பாரம்பரிய நெல் சாகுபடி லாபகரமானதா?
படக்குறிப்பு, இயற்கை விவசாயி தரணிதரன்

"பயிரிடும் பரப்பை 15 ஏக்கரில் இருந்து 3 ஏக்கராக குறைத்துவிட்டேன்"

தன்னிடமே இன்று 150 மூட்டை பாரம்பரிய நெல் ரகங்கள் தேங்கியுள்ளதாகக் கூறும் தரனிதரன், தலா 25 கிலோ அளவில் 60 சிப்பம் கருப்புக்கவுனி அரிசி கடந்த 6 மாதங்களாக விற்காமல் தேங்கியிருப்பதாகக் கூறினார்.

"பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையான முறையில் விளைவிக்கப்படுவதால் பூச்சி, வண்டு தாக்குதல் அதிகம் இருக்கும். இதனால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவற்றைப் பிரித்து எடுத்து சுத்தம் செய்து மீண்டும் மூட்டையாக்கும்போது 2 முதல் 3 சிப்பம் வரை குறைந்துவிடும்.

ஏற்கெனவே என் நிலத்தில் விளைந்தவையே இன்னும் விற்காமல் தேங்கியிருப்பதால், கடந்த ஆண்டு வரை 15 ஏக்கரில் பயிரிட்டு வந்த நான் இந்த ஆண்டு அதை 3 ஏக்கராக குறைத்துவிட்டேன்," என்றார்.

"பாரம்பரிய அரிசி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லை"

பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடும் இயற்கை விவசாயிகளின் பிரச்னை குறித்துப் பேசிய 'அக்ரிசக்தி' செல்வமுரளி, கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற அரிசி ரகங்களை சந்தையில் விற்க முடியாமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளதாக விளக்கினார்.

"அவற்றின் விலை மிகவும் அதிகம் என்பது ஒன்று. அந்த அரிசிகளை அன்றாட வாழ்க்கையில் எப்படி உணவாக்குவது என்ற அடிப்படைப் புரிதல் நம் சமூகத்திடம் இல்லாமல் இருப்பது அடுத்த காரணம்."

கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா அரிசி ஆகியவை கல் போன்று கடினமானவை, பெரிதாக ருசி இருக்காது. ஆனால், "நம் மக்கள் மிகச் சிறிய அரிசி ரகங்களைச் சோறாக்கி பழகிவிட்டார்கள். அதுபோல பாரம்பரிய நெல் ரகங்களை எளிதில் உணவுக்குப் பயன்படுத்திவிட முடியாது," எனக் கூறினார்.

பாரம்பரிய நெல் சாகுபடி லாபகரமானதா?
பாரம்பரிய நெல் சாகுபடி லாபகரமானதா?

கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா ஆகியவற்றை கஞ்சியாகவோ, புட்டாகவோ சாப்பிடலாம். இட்லி, தோசையாகக் கூட தயார் செய்து சாப்பிடலாம்.

கஞ்சியோ, புட்டோ அதற்கான மாவு தயாரிப்பதற்கே அந்த அரிசிகளை குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டியிருக்கும். அப்படியானால்தான், அந்த அரிசிகள் இலகுவானதாக மாறும். அதன் பிறகே அவற்றை உடைத்து பவுடராக்க முடியும்.

இந்நிலையில், கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற அரிசிகளை அன்றாட வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துவது என்றே நம் மக்களுக்குத் தெரியவில்லை என்பதால்தான் சந்தையில் அவை விற்பனையாவதில்லை என்கிறார் செல்வமுரளி.

அத்துடன், கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா ஆகிய அரிசி ரகங்கள் சில்லறை விற்பனையில் 190 ரூபாய்க்கு விற்கப்படுவதால் அவற்றை தங்களது உணவுக்கான தெரிவுகளில் ஒன்றாகக் கூட சாமான்யர்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான அரிசிகள் 3 மாத பயிராகவே விளைவிக்கப்படுகின்றன. ஆனால், கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்றவை 160 நாள் பயிர்கள். அவற்றை அவ்வளவு குறைந்த விலைக்கு கொடுக்க முடியாது." என்று கூறுகிறார்.

பாரம்பரிய நெல் சாகுபடி லாபகரமானதா?
படக்குறிப்பு, அக்ரிசக்தி நிறுவனர் செல்வமுரளி

நீரிழிவுக்கு முடிவு கட்ட பாரம்பரிய அரிசி பயன்பாடை அரசே ஊக்குவிக்கலாம்

மேலும் தொடர்ந்த அவர், "இந்த அரிசி ரகங்கள் நம்மூருக்கு மிகவும் அவசியமானவை. கேரளாவில் புட்டு அன்றாட உணவில் இடம் பிடித்துவிட்டதைப் போன்ற நிலை தமிழ்நாட்டிலும் உருவானால் நிலைமை மேம்படும். பாரம்பரிய நெல் ரகங்களைப் பயன்படுத்தி புதுப்புது உணவு வகைகளை அறிமுகப்படுத்தலாம்," என்கிறார்.

'நீரிழிவு இல்லாத சிங்கப்பூர்' என்ற இலக்கை நோக்கி அந்நாடு பயணிக்கிறது. ஹோட்டல்களில் இட்லி சாப்பிட்டால் இத்தனை கலோரியை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள வழிவகை செய்திருக்கிறார்கள். அத்துடன், நடந்து செல்லும் தொலைவுக்கு ஏற்ப சலுகைகளையும் அவர்கள் வழங்குகிறார்கள்.

உலகின் நீரிழிவு நோய் தலைநகரம் என்று அழைக்கப்படும் இந்தியா நீரிழிவு நோயை விரட்டியடிக்க வேண்டுமென்றால் இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் அவசியம் தேவை எனக் கூறுகிறார் அவர்.

சிங்கப்பூரைப் போன்று "இந்தியாவிலும் அதற்கான முன்னெடுப்புகளை செய்யலாம். அத்துடன், வேளாண் விளைப்பொருட்களை கெடாமல் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகளை அதிகப்படுத்தி, கூடுதல் வழிவகைகளைக் காணவேண்டும். அப்படிச் செய்தால், பாரம்பரிய அரிசி ரகங்களை காப்பதுடன், நீரிழிவு நோயில் இருந்தும் மக்களை விடுவிக்கலாம்," என்று வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: