தமிழ்நாடு நூற்பாலைகள்: தொடர் நஷ்டம்; காலவரையற்ற வேலை நிறுத்தம் - தொழிலாளர்கள் நிலை என்ன?

பட மூலாதாரம், Jayabal
தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள் சந்திந்து வரும் தொடர் நஷ்டத்தினை தவிர்க்க, தென் இந்திய நூற்பாலைகளின் கூட்டமைப்பு சார்பில் ஜூலை 15ம் தேதி முதல் சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் காலவரையற்ற உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன. இவர்கள் கடந்த மே மாதம் முதல் 50% உற்பத்தி நிறுத்தம் செய்திருந்த நிலையில், ஜூலை 15 முதல் முழு உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னணி என்ன ?
பருத்தியிலிருந்து கிடைக்கும் பஞ்சை மூலப் பொருளாக் கொண்டு நூலாக உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நூற்பாலைகள். சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளின் சங்கமான தென்னிந்திய நூற்பாலைகள் கூட்டமைப்பின் அவசரக்கூட்டம் ஜூலை 13ம் தேதி கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் உற்பத்தி நிறுத்தம் மற்றும் நூல் விற்பனை நிறுத்தம் செய்வதாக ஏகமனதாக முடிவு செய்தனர்.
கூட்டத்தின் முடிவில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் நாட்டில் நூற்பாலைத்தொழில் பல மாதங்களாக வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் முதல் முறையாக, நூல் மற்றும் துணி வகைகளின் ஏற்றுமதி 28% குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் வழிகாட்டுதலின்படி குறைந்தபட்சம் பஞ்சிலிருந்து நூல் மாற்றத்திற்கான விலை (conversion cost) ஒரு கிலோவிற்கு ரூ 2 ஆக இருக்க வேண்டும் என்றும், ஆனால், இன்றைய சூழலில் ரூ 1 மட்டும்தான் கிடைப்பதாகவும், இதனால், கிலோவிற்கு ரூ 40 நஷ்டம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்தனர்.
நஷ்டம் ஏற்பட காரணம் என்ன ?
இந்தியாவில் தேவையைவிட உற்பத்தி அதிகமாக இருப்பதும், அதனால், கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவைவிட விற்பனை விலை மிகக்குறைவாக உள்ளதுமே நூற்பாலைகள் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணமாக கூறுகிறார் தென்னிந்திய நூற்பாலைகள் கூட்டமைப்பின் கெளரவ செயலாளர் எஸ். ஜெகதீஷ் சந்திரன்.
இதுகுறித்து விரிவாக பிபிசியிடம் பேசிய ஜெகதீஷ், “ஒரு கிலோ பருத்தியின் கொள்முதல் விலை ரூ.152 முதல் ரூ.194 ஆக உள்ளது. இந்த பருத்தியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 40ஆம் நம்பர் (40’s Count) தரத்திலான நூல் விலை கிலோ ரூ 235க்கு விற்கப்படுகிறது. கொள்முதல் விலையிலிருந்து ரூ 40 முதல் 45 வரைதான் உற்பத்தி செய்த நூலை வற்க முடிகிறது. ஆனால், அந்த நூலை உற்பத்தி செய்வதற்கான ஆள் கூலி, மின் கட்டணம், வரி உள்ளிட்ட செலவினங்களை சேர்த்து ரூ.80 வரை செலவாகிறது. இதனால், ஒரு கிலோவிற்கு ரூ 40க்கும் மேல் நஷ்டம் ஏற்படுகிறது.
சுமார் 10,000 கதிர்கள் (spindles) கொண்ட ஆலை ஒன்றில் 2500 கிலோ நூல் தயாரிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரையில் நாம் அதிகம் உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால், மக்கள் மத்தியில் தேவையில்லாததால், நூல்களுக்கான விலை கிடைப்பதில்லை. இந்தியாவில் தேவையை விட இருப்பு அதிகம் இருப்பதற்கான இன்னுமொரு முக்கியக்காரணம், நாம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது சுமார் 28% குறைந்துள்ளது.
இதற்கு காரணம், இந்தியாவில் உற்பத்தி செய்யும் நூல்களின் விலை, ஏற்றுமதி செய்வதற்காக மற்ற நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு இல்லை. ஏற்கனவே உள்ள உற்பத்திச்செலவைத்தாண்டி 11% ஏற்றுமதி வரி விதிக்கப்படுவதால், ஏற்றுமதி செய்வதற்கும் உகந்த சூழல் இல்லை,” என்கிறார் ஜெகதீஷ்
தமிழ்நாட்டில் சுமார் 600 நூற்பாலைகளில், 100க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறிய ஜெகதீஸ், எஞ்சியுள்ள நூற்பாலைகளும் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்படுவதாக தெரிவித்தார்.
“இந்த சூழல் எப்போது மாறும் என்று தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்குள் நிலைமை சீரானால், மூடப்பட்டுள்ள நூற்பாலைகள் மீண்டும் திறந்து தொழில் செய்ய முடியும், இரண்டு மாதங்களுக்கு மேலானால், அவர்கள் நிரந்திரமாக மூடுவதை தவிர வேறு வழியில்லை. தற்போது உற்பத்தியை நிறுத்தியிருக்கும் எங்களைப்போன்ற சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளின் நிலையும் அதுதான்,” என்றார்.
ஓபன் எண்ட்(ஓஇ) ஆலைகளின் நிலை என்ன ?

பட மூலாதாரம், Jayabal
சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே, கழிவுப் பஞ்சை மூலப் பொருளாகக்கொண்டு நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட்(ஓஇ) ஆலைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர்.
தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 600 ஓபன் எண்ட் நூற்பாலைகளில், 300 ஆலைகள் கலர் நூல் தயாரிப்பிலும், 300 ஆலைகள் கிரே நூல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிறு குறு நடுத்தர நூற்பாலைகளைப்போலவே, ஓபன் எண்ட் ஆலைகளும் நஷ்டத்தில் இயக்க முடியாமல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால், “மின்சாரத்திற்கான தேவை அதிகம் இருக்கும் நேரங்களில் (Peak Hours) 10% முதல் 20% அதிக மின் கட்டணம் என்பது சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் மட்டுமின்றி, ஓபன் எண்ட் ஆலைகளையும் கடுமையாக பாதித்துள்ளது,” என்கிறார்.
“பெரிய நிறுவனங்களால் சொந்தமாக காற்றாலை அமைத்து அதன் மூலமாகவோ, அல்லது சூரிய ஆற்றல் (Solar Energy) மூலமாகவோ மின்சாரம் சேமித்து பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், சிறு குறு நிறுவனங்கள் முழுக்க முழுக்க அரசின் மின்சாரத்தையே நம்பியிருக்கிறோம். அதேவேளையில், நாங்கள் 24 மணிநேரமும் செயல்படும் ஆலைகளாக உள்ளோம். அதனால், சுதந்திர இந்தியாவில் நாங்கள் இதுவரை பார்த்திடாத அளவிற்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது. நஷ்டத்திற்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம்,” என்றார்.

பட மூலாதாரம், Jayabal
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா ஒரே நாடாக இருந்தாலும், மாநிலத்திற்கு மாநிலம் ஜவுளிக்கொள்கைகள் வேறுபடுவதால், மாநிலங்களிடையே போட்டி நிலவுவதாகவும், அதில் தமிழ் நாடு அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
“தமிழ் நாட்டில் பருத்தி விளைச்சல் மிகவும் குறைவு. சில காலங்களில் பருத்தி விளைச்சலே இருக்காது. ஆனால், இங்குள்ள தொழில்முனைவோரின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் திறனால், மற்ற மாநிலங்களில் விளையும் பருத்தியைப் பெற்று, இங்கு ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டோம். ஆனால், தற்போது எந்தெந்த மாநிலங்களில் பருத்தி விளைகிறதோ அங்கேயே ஜவுளி உற்பத்தி தொழில் துவங்க பல்வேறு மானியங்களை அந்தந்த மாநில அரசுகள் தருவதால், அந்த மாநிலத்தில் இருப்பவர்களால் லாபகரமாக இயங்க முடிகிறது,” என்கிறார்.
இதனை விரிவாக விளக்கிய அவர், “ இந்தியாவைப் பொறுத்தவரையில் சந்தையில் எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும் பருத்தி கொள்முதல் விலையும், நூல் உற்பத்தி செய்வதற்கான செலவும், நூல் விற்பனை விலையும் ஒன்றுதான். ஆனால், ஜவுளித்தொழிலுக்கு ஒவ்வொரு மாநிலமும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு வகையில் மானியங்கள் கொடுப்பதால், குஜராத், பஞ்சாப், மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ளவர்களால் லாபகரமாக இயக்க முடிகிறது. அதாவது, அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை, அவர்கள் பெறும் மானியத்தின் மூலம் ஈடு செய்து லாபம் ஈட்டுகிறார்கள்,” என்றார்.
தொடர்ந்து பேசிய ஜெயபால், இந்தியாவில் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு பதிலாக, சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றார்.
இதனை ஒப்புக்கொண்ட ஜெகதீஷ், ஒரு ஹெக்டேரில் விளையும் பருத்தி விளைச்சளையும் அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
“பருத்தி விளைச்சலில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், நாம் ஒரு ஹெக்டேருக்கு 350 கிலோ முதல் 450 கிலோ பருத்திதான் விளைவிற்கிறோம். ஆனால், இதே சர்வதேச அரங்கில் நம்முடன் போட்டியிடும் நாடுகளில், ஹெக்டருக்கு 750 கிலோ முதல் 1000 கிலோ வரை விளைவிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு பருத்தி விலை முதல் நூல் விலை வரை, அனைத்தும் குறைவானதாகவும், சர்வதேச சந்தையில் போட்டிபோடும் வகையிலும் உள்ளது,” என்றார்.

பட மூலாதாரம், Jayabal
தொழிலாளர்களின் நிலை என்ன ?
ஆலைகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை தவிர்க்க உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தியுள்ளநிலையில், செய்வதறியாது தவிக்கின்றனர் ஆலைகளில் பணியாற்றும் நூற்பாலைத் தொழிலாளர்கள்.
“கொரோனா காலத்தில் வாங்கிய கடன்களையே தற்போதுதான் திரும்பச் செலுத்தி வந்தேன். தற்போது, ஆலைகள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அடுத்து வரும் நாட்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது,” என்கிறார் நூற்பாலையில் பணியாற்றும் தங்கராஜ்.
தமிழ் நாட்டின் மேற்கு மாவட்டத்தில் உள்ள நூற்பாலை தொழிலாளர்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ 350 முதல் ரூ500 வரை கூலியாக வழங்கப்படுகிறது.
“ஒருவர் 10 வருடத்திற்கு மேல் வேலை செய்திருந்தால்தான், ரூ 500 கூலி கொடுப்பார்கள். இல்லையேன்றால், ரூ 350ல் முதல் ரூ 400 வரைதான் கூலி கிடைக்கும். இந்த கூலி உற்பத்தி காலத்தில் வழங்கப்படுவது. தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பளத்தை குறைத்து கொடுக்கிறார்களா அல்லது சம்பளமே இல்லை என சொல்லப்போகிறார்களா என்பது அவர்கள் மாதச்சம்பளம் கொடுக்கும்போதுதான் தெரியும்,” என்றார் தங்கராஜ்.
தொழிலாளர்களின் சம்பளம் குறித்து கேட்டபோது, தொழிலாளர்களின் நலனை தொழில் நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும் என்றார், ஜெகதீஷ். “அதிக நஷ்டத்தில் இயக்கிய காலத்திலேயே, தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உரிய நேரத்தில் கொடுத்துள்ளோம். தற்போது உற்பத்தி நிறுத்தத்தால், அவ்வளவு நஷ்டம் இல்லை என்பதால், அவர்களுக்கு தேவையானதை நாங்கள் எப்போதும் பார்த்துக்கொள்வோம்,” என்றார்.
இதுகுறித்து தமிழ் நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர். காந்தியிடம் கேட்டபோது, துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் நூற்பாலை உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும், என்றார்.
“இதில், மத்திய அரசு மற்றும் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு துறைகள் சம்மந்தப்பட்டுள்ளதால், துறை சார்ந்த மத்திய அரசு அதிகாரிகளுடன் ஒரு பேச்சு வார்த்தைக்கும், மாநில அரசுடன் ஒரு பேச்சு வார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவில், அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












