பொது சிவில் சட்டம்: பழங்குடிகள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எந்த வகையில் அச்சுறுத்துகிறது?

- எழுதியவர், சுபைர் அகமது
- பதவி, பிபிசி நியூஸ்
'ஹோ' என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த அனில் ஜோன்கோ, ஜார்கண்ட் மாநிலத்தின் சாய்பாசாவில் வசிக்கிறார். ஒரு சிறிய பழங்குடி கிராமத்தில் தனது பூர்வீக வீட்டில் வசிக்கும் அனிலுடன் அவரது சகோதரியும் வசித்துவருகிறார்.
சாய்பாசாவில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் வசிப்பவரகள் பொதுவான அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
இது போன்ற ஒரு சூழ்நிலையில் வசித்து வரும் 40 வயதான அனில் ஜோன்கோ, தற்போது நில உரிமை தொடர்பான ஒரு சட்டப் பிரச்னையில் சிக்கியுள்ளார். இதனால் சற்று வருத்தமடைந்துள்ள அவர், நீதிமன்ற விசாரணைக்குச் செல்வதற்கு முன்பாக, தனது பெற்றோரின் கல்லறைக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.
பழங்குடியினருக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருவதால், விரைவில் தீர்ப்பு கிடைத்துவிடும் என அவர் நம்புகிறார். இந்த நீதிமன்றத்தில் பழங்குடியினரின் குடும்ப விவகாரங்கள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன.
இந்த நீதிமன்றம் 'மன்கி-முண்டா நியாய பஞ்ச்' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய முறையில் செயல்படும் ஒரு பஞ்சாயத்து ஆகும். பிப்ரவரி 2021ல் தொடங்கப்பட்ட இந்த நிதிமன்றத்தில் தான் அனில் ஜோன்கோ தனது வழக்கை நடத்திவருகிறார்.
பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றம் குறித்து அனில் ஜோன்கோ பேசியபோது, “மங்கி முண்டா நியாய பஞ்ச் பற்றி முதன்முறையாக கேள்விப்பட்டேன். எனது கிராமம் தொடர்பான நிலத்தகராறு வழக்கு இந்த நியாய பஞ்ச்சில் நடக்கிறது. அங்கு சென்ற பின் தான், இதுபற்றி அறிந்தேன்," என்கிறார்.

அவருக்கு இந்த 'நியாய பஞ்ச்' (நீதி வழங்கும் பஞ்சாயத்து)மிகவும் பிடித்திருக்கிறது. ஏனென்றால் இந்த நீதிப் பஞ்சாயத்தில், அவர்களின் சொந்த பகுதி மக்கள் அனைவருக்கும் தேவையான நியாயம் விரைவாக வழங்கப்படுகிறது. மேலும், அங்கு 'ஹோ' பழங்குடியின மொழியில் மட்டுமே வழக்கு விசாரணைகள் நடைபெறுகின்றன.
இந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞரோ, நீதிபதியோ இல்லை. முடிவு மூன்று நீதிபதிகளின் கையில் உள்ளது. ஒருவர் பிரதிவாதியால் பரிந்துரைக்கப்படுகிறார். மற்றொருவர் மனுதாரரால் பரிந்துரைக்கப்படுகிறார். மற்றும் மூன்றாவது நபர் உள்ளூர் நிர்வாகத்தால் நியமிக்கப்படுகிறார். இந்த நீதிபதி வழக்கு விசாரணைக்குத் தலைமை தாங்குகிறார்.
இந்நீதிமன்றத்தின் முடிவு துணைக்கோட்ட நடுவர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
பழங்குடியினருக்கு நிலத் தகராறுகள் மற்றும் குடும்ப விவகாரங்களைத் தீர்ப்பதற்கு தனிச் சட்டங்கள் மற்றும் தனி நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் இப்போது அரசு பொது சிவில் சட்டம் (UCC) இயற்ற விரும்புகிறது. அதாவது நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் சிவில் விஷயங்களில் ஒரே சட்டம் பொருந்த வேண்டும் என்று மாற்ற விரும்புகிறது.

பொது சிவில் சட்டம் குறித்து கடுமையான அதிருப்தி தெரிவிக்கும் பழங்குடியினர்
பொது சிவில் சட்டத்துக்கு ஜார்கண்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், அவர்களின் பாரம்பரியம் மிக்க பழங்கால வாழ்க்கை அழிந்துவிடும் என்றும், சாய்பாசாவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தால் எந்தப் பயனும் ஏற்படாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அப்பகுதி வழக்கறிஞர் ஷீத்தல் தேவ்கம் இது தொடர்பாகப் பேசியபோது, "நானும் 'ஹோ' பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் தான். நானும் இங்கிருந்து தான் வந்துள்ளேன். இங்குள்ள பழக்கவழக்கங்கள் எனக்கும் பொருந்தும். அவை என்னுடையவை- என் மக்களுடையவை. எனவே எனது பார்வையில் இந்த வழக்கு என்பது நிலம் தொடர்பான ஒரு விஷயம். இது ஒரு வழக்காக தற்போது நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. பொது சிவில் சட்டம் வந்தால், பெரும்பாலான விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அது ஒரு பிரச்சனையாகிவிடும்," என்றார்.
உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், நாடு முழுவதும் சுமார் 750 பழங்குடி சமூகங்கள் உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் 32 பழங்குடியினங்கள் இருக்கின்றன. அவர்களின் பழக்கவழக்கங்களையும், நிலத்தையும் காப்பாற்ற, ஆங்கிலேயர் காலத்திலிருந்தே சில சிறப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
திருமணம், வாரிசுரிமை, தத்தெடுப்பு, குழந்தை பராமரிப்பு, ஜீவனாம்சம், பலதார மணம் மற்றும் வாரிசு தொடர்பான விஷயங்கள் தனிப்பட்ட சட்டத்தின் கீழ் வருகின்றன. மக்கள் பொதுவாக முஸ்லீம் தனிநபர் சட்டம் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால் பழங்குடியினர் உள்பட பல சமூகங்களில் பல்வேறு தனிப்பட்ட சட்டங்கள் உள்ளன.

பல பழங்குடியின குழுக்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தங்கள் பாரம்பரியத்தை பாதிக்கும் என்று அஞ்சுகின்றன. உதாரணமாக, ஜார்க்கண்டில், பழங்குடியினரின் சொத்து மற்றும் மரபுகளைப் பாதுகாக்க பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து மூன்று சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
வில்கின்சன் சட்டம்: 1837 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ், பழங்குடியினருக்கு இடையே நிலம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கான நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த சட்டத்தின் அடிப்படையில் தான், பழங்குடியின மரபுகள் மற்றும் நடைமுறைகளின்படி, பிப்ரவரி 2021 இல் சாய்பாசாவின் 'மன்கி முண்டா நியாய் பஞ்ச்' உருவாக்கப்பட்டது.
சோட்டாநாக்பூர் குத்தகை சட்டம் : இந்த சட்டம் 1908 இல் இயற்றப்பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது. பழங்குடியினரின் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்துவதற்கு எதிராக இந்த சட்டம் அவர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகிறது.
சந்தால் பரகானா குத்தகைச் சட்டம்: 1876 இல் இயற்றப்பட்ட இந்தச் சட்டம், மாவட்ட துணை ஆட்சியரின் அனுமதியின்றி சந்தால் பழங்குடியினரின் நிலங்கள் பிற இனத்தைச் சேர்ந்த தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதைத் தடை செய்கிறது.
இவை தவிர, அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பத்து மாநிலங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், அந்த மாநிலங்களில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் அவர்களுடைய பாரம்பரியங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது பற்றி பேசப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் அவர்களின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க மாவட்ட கவுன்சில்கள் உள்ளன. ஐந்தாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களில் ஜார்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை அடங்கும்.

அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை, பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் மேகாலயா, திரிபுரா, மிசோரம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் தன்னாட்சியுடன் கூடிய மாவட்ட கவுன்சில்களை ஏற்படுத்துவதற்கு உரிமை வழங்குகிறது.
ஜார்க்கண்டில் பழங்குடியினரின் உரிமைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் சமூக ஆர்வலர் தயாமணி பர்லா, பொது சிவில் சட்டம் பற்றி கூறுகையில், "ஏற்கெனவே ஐந்தாவது அட்டணையில் குறிப்பிடப்பட்டுள்ள சோட்டாநாக்பூர் சட்டம், சந்தால் பரகானா குத்தகைச் சட்டம், கானாஸ் சட்டம் போன்றவை பழங்குடிகளான எங்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் கிராம சபைகளுக்கு என தனி உரிமைகள் உள்ளன. இது போன்ற ஒரு சூழ்நிலையில், நாடு முழுவதும் ஒரே சட்டத்தை எப்படி அமல்படுத்துவது? " என்று கேட்கிறார்.
இந்த விவகாரம் நிலம்-சொத்து குறித்தது மட்டும் அல்ல என்பதை விளக்குகிறார் தயாமணி. இது குறித்துப் பேசும் அவர், "திருமணம் செய்வது, எங்கள் சொத்துக்களுக்கு யார் வாரிசாக வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கு எங்கள் சொந்த வழக்கச் சட்டம் உள்ளது. இந்த நாட்டில் 140 கோடி மக்கள் உள்ளனர். இப்போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி ஒரே சட்டத்தின் கீழ் நிற்க வைப்பீர்கள்?" என்று கேட்கிறார்.

பழங்குடியின பெண்களுக்கு சொத்துகளை அடைவதற்கான வாரிசு உரிமைகள் என்ன?
பழங்குடியினரின் வாழ்வில் நிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அந்த நிலம் பறிக்கப்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
திருமணம் அல்லது தத்தெடுப்பு போன்ற விஷயங்கள் பாரம்பரியமாக இருந்தாலும், இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பழங்குடியினரின் நிலத்துடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.
ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியின் பேராசிரியர் சந்தோஷ் கீடோ பிபிசியிடம் பேசியபோது, "நிலம் என்பது கடவுள் நமக்கு அளித்த பரிசு. அது தனிப்பட்ட முறையில் எங்களுக்கு சொந்தமானது அல்ல. அதை மட்டுமே பயன்படுத்துகிறோம். பின்னர் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறோம்," என்றார்.
பழங்குடி சமூகத்தில், தந்தையின் சொத்தில் மகள்களுக்கு பங்கு வழங்கப்படுவதில்லை. திருமணத்திற்குப் பிறகு, கணவரின் சொத்தில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவம் ஏற்படும் என்பதுடன் பழங்குடியின பெண்களும் சொத்தில் பங்கு பெற முடியும்.
ஒரு பழங்குடியின மகள் தன் தந்தையின் வீட்டில் இருக்கும்போது, அவர் தந்தையின் சொத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் கணவன் வீட்டிற்குச் செல்லும்போது, கணவரின் சொத்துக்கள் மற்றும் வசதிகளைப் பெறுகிறார் என்று தயாமணி பர்லா கூறுகிறார்.
தொடர்ந்து பேசும் அவர், "ஆவணங்களில் அவர்களின் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் எங்கள் சமூகத்தில் வரதட்சணை முறை இல்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். வரதட்சணை கொடுக்கவில்லை என்பதற்காக சிறுமிகளும், பெண்களும் எரிக்கப்படுவதில்லை. இதே போல் பாலியல் வல்லுறவு சம்பவங்களும் இங்கு குறைவாகவே நடக்கின்றன," என்கிறார் அவர்.
பேராசிரியர் சந்தோஷ் கீடோ கூறுகையில், பழங்குடி சமூகத்தில் பெண்களின் உரிமைகள் பாதுகாப்பாக உள்ளன என்றும், நிலம் குறித்த அவர்களின் உரிமைகளைப் பொறுத்தவரையில் இந்த நிலங்கள் அனைவருக்கும் பொதுவான கூட்டுச் சொத்து என்பதால் எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ அதை வழங்குவதில்லை என்கிறார்.

பொது சிவில் சட்டத்தில் பழங்குடியினரின் உரிமைகள் பாதிக்கப்படுமா?
பொது சிவில் சட்டத்தைப் பொறுத்தவரை பழங்குடியினரின் கடும் எதிர்ப்பை மத்திய அரசு சந்தித்து வருகிறது என்பது தெளிவாகிறது.
இருப்பினும், பழங்குடியின மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயன்றுவருவதாக சில தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் பழங்குடியினர் பகுதிகளில் பணிபுரிந்து வரும் சில நிபுணர்கள் பொது சிவில் சட்டம் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ராஞ்சி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமர் குமார் சவுத்ரி அத்தகைய நிபுணர்களில் ஒருவராக இருக்கிறார். அவர பேசும் போது, "என் கருத்துப்படி, பழங்குடியினரை பொது சிவில் சட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கக் கூடாது. போதுமான நேரம் ஒதுக்குங்கள், அதைப்பற்றி விவாதம் செய்யுங்கள். சிறிது காலம் காத்திருங்கள். பத்து வருடங்கள் கழித்து நடைமுறைப்படுத்துங்கள். ஆனால் அனைவருக்கும் ஏற்றவகையில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். இப்போது நாடு வேகமாக முன்னேறி வருகிறது. முன்னேறிய இந்தியாவில் அனைவரும் ஒரு பாதையில் ஒன்றிணையவேண்டிய அவசியம் உள்ளது. பொது சிவில் சட்டம் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். யாருக்கும் எந்த குழப்பமும் இருக்கக்கூடாது," என்றார்.
பேராசிரியர் அமர் ஒரு பழங்குடியினர் அல்ல. ஆனால் அவர்களிடையே பல தசாப்தங்களாக பணியாற்றி வருகிறார். அவர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர். பழங்குடியினருடன் விவாதிக்காமல் அவர்களை பொது சிவில் சட்டத்தில் இணைக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்துகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் பழங்குடியின மக்களுடன் கலந்து வாழ்ந்து வருகிறேன். அவர்களுக்குள் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். தற்போது பொது சிவில் சட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்தச் சட்டத்தைப் பற்றிப் பேசுபவர்கள் படித்தவர்கள். அவர்கள் இந்த மக்கள் பிரச்சினையை புரிந்துகொள்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் பழங்குடியினர், மலைகளில் வசிப்பவர்கள், மற்றும் காடுகளில் வசிப்பர்களுக்கு பொது சிவில் சட்டம் பற்றி எதுவும் தெரியாது. எனவே அதைப் பற்றி பேச வேண்டும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது சிவில் சட்டம் அவர்களுக்கு சரியானதா அல்லது தவறானதா என யோசிப்பதற்கு முன், அவர்களுக்கு அதைப் பற்றிய முழு அறிவையும் அளிக்கவேண்டும்," என்று கூறுகிறார்.
அண்மையில் ஜார்க்கண்ட் ஆளுனர் சிபி ராதாகிருஷ்ணனும் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பழங்குடி சமூகம் பொது சிவில் சட்டத்தை ஏற்கத் தயாராகும் வரை, அவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சுஷில் குமார் மோடி, பொது சிவில் சட்டத்தில் பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று அண்மையில் வாதிட்டார். ஆனால் மத்திய அரசு இது குறித்து முறையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.
ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் ஆற்வறிக்கைகளின் அடிப்படையில், தற்போது பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், பொது சிவில் சட்டத்தின் சட்ட முன் வரைவு கூட இன்னும் வெளியாகவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












