ரூ.350 கோடி பயோமைனிங் திட்டம்: பெருங்குடி குப்பைக்கிடங்கு பிரச்னை நிரந்தரமாக தீருமா?

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
75 வயதான நடராஜன் சென்னை பெருங்குடி குப்பை கிடங்கிற்கு அருகில் வசிக்கிறார். கடந்த 13 ஆண்டுகளில் பலமுறை அவர் சுவாச பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரின் உடல்நிலை மிகவும்மோசமாகி, அடிக்கடி ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்.
சென்னையில் குவியும் குப்பை பிரச்னைக்கு தீர்வாக ரூ.350கோடி செலவில் 2022ல் அறிமுகம் செய்யப்பட்ட பயோமைனிங் என்ற மறுசுழற்சி செய்யும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டுவருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் பயோமைனிங் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னைகளுக்கு ஆளானதாகச் சொல்கிறார் நடராஜன். அவரை போலவே பெருங்குடி பகுதியில் வசிக்கும் பலரும் மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளதாக அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர்.
குப்பை பிரச்னையால் உறவினர்கள், பிள்ளைகள் கைவிட்ட நிலை

உண்மையில், சென்னை நகரத்தின் குப்பை பிரச்னைக்கு பயோமைனிங் முறை தீர்வாகுமா? பயோமைனிங் திட்டம் வந்த பின்னர், மூச்சுத்திணறல் அதிகமாகிவிட்டது என்று புகார் வருவது ஏன் என்று தெரிந்துகொள்ள நேரடியாக நாம் பெருங்குடி பகுதிக்குச் சென்றோம்.
சம்பூர்ணம் நடராஜன் தம்பதி பெருங்குடி குப்பை கிடங்கு பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மூச்சுத்திணறல் மிகவும் அதிகரித்துள்ளது என்பதால் பல நேரம் முககவசம் அணிவதாக சொல்கிறார்கள். நாம் சென்ற சமயத்தில்கூட, முககவசம் அணிந்திருந்தார்கள்.
''எங்கள் உறவினர்கள் யாரும் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. குப்பை பிரச்னை உள்ளது, நாற்றம் அதிகமாக உள்ளது என்பதால் எங்கள் பிள்ளைகள் கூட எங்களை பார்க்க வருவதில்லை. அவ்வப்போது நெஞ்சை அடைக்கும் அளவுக்கு மோசமான வாடை வரும்,'' என்கிறார் சம்பூர்ணம்.

பயோமைனிங் என்றால் என்ன? என்ன பிரச்னை?
சென்னை நகரத்தில் தினமும் 5000 மெட்ரிக் டன் குப்பை உருவாகிறது. வடசென்னைக்கு கொடுங்கையூர் மற்றும் தென்சென்னைக்கு பெருங்குடி என இரண்டு குப்பை கிடங்குகளில் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது. பயோமைனிங் என்ற மறுசுழற்சி செய்யும் திட்டம் மூலம்தான் குப்பை பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரமுடியும் என சென்னை மாநகராட்சி முழுமையாக நம்புகிறது.
பெருங்குடி குப்பை கிடங்கு என்பது 225 ஏக்கர் பரப்பளவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளது.
பல ஆண்டுகளாக சேர்ந்துள்ள 30லட்சம் மெட்ரிக் டன் குப்பையை முழுமையாக மறுசுழற்சி செய்து அந்த நிலப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் ஒரு சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றை அமைக்கும் முடிவில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.
குப்பைகளை கையாண்டு நிலத்தை மீட்கும் பணியை டெண்டர் மூலமாக ரூ.180கோடிக்கு ஜிக்மா என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதில் குப்பையை ஏழு வகையாக பிரிப்பார்கள். மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக், இரும்பு, ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக், துணி, கற்கள், மண், காந்தம் என வகைப்படுத்துவார்கள். பின்னர், மறுசுழற்சியில் கிடைக்கும் மண் உரமாக மாற்றப்படுகிறது. மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் மாற்று எரிசக்தியாக மாற்றப்படுகிறது.
ஆனால் பயோ மைனிங் திட்டம் தொடங்கியதில் இருந்து பெருங்குடி பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளது என்றும் புகார்கள் எழுந்துள்ளன. சம்பூர்ணம் நடராஜன் உள்ளிட்ட பலரும் மாநகராட்சிக்கு பலமுறை கடந்த இரண்டு ஆண்டுகளில் காற்று மாசுபாடு குறித்து புகார் செய்துள்ளனர்.

பெருங்குடியில் காற்றின் தரம் எப்படி இருந்தது?
பெருங்குடி குப்பை கிடங்கு குறித்த செய்திக்காக மூன்று நாட்கள் தொடர்ந்து அங்கு நாம் செல்லவேண்டியிருந்தது... நமக்கும் சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டது.
அந்த மூன்று நாட்களில் பெருங்குடி பகுதியில் காற்றின் தரம் எவ்வாறு இருந்தது என்று தெரிந்துகொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தேசிய காற்று தர குறியீட்டு தரவுகளை தேடினோம்..
நாம் சுவாசித்த காற்றில், PM10 -அதாவது 10 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான அளவில் உள்ள தூசுகள் மற்றும் CO -கார்பன்மோனாக்சைட் ஆகியவை காற்றில் கலந்திருந்தது என்று உறுதிப்படுத்தமுடிந்தது.
இவற்றை தொடர்ந்து சுவாசித்தால், மூச்சுத்திணறல் ஏற்படும் என்று அந்த குறியீடு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருங்குடி குப்பை கிடங்கில் என்ன நடக்கிறது?
சென்னையின் குப்பை பிரச்னைக்கு பயோ மைனிங் தீர்வாகுமா? குடியிருப்புவாசிகளுக்கு சுவாச பிரச்னைகள் அதிகரிக்க காரணம் என்ன என ஜிக்மா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீதரிடம் கேட்டோம்.
ஒரு உதாரணத்துடன் விவரித்தார். ''உங்கள் வீட்டில் சாப்பாடு கட்டிக்கொடுக்கிறார்கள் என்றால் அதனை சாப்பிட்டவுடன் மூடிவைத்துவிட்டு, நான்கு நாட்கள் கழித்து திறந்தால் எப்படி நாற்றம் அதிகமாக இருக்கும்தானே? அதுபோல.. சுமார் 40ஆண்டுகள் கொட்டிவைத்த குப்பை இது. இதனை கிளறி சுத்தப்படுத்தும்போது காற்றில் நாற்றம் அதிமாக இருக்கும். ஆனால் இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளில் முடிந்த பின்னர், காற்று மற்றும் நிலத்தடி நீரின் தரம் சரியாகும்.இது ஒரு தற்காலிக பிரச்னைதான். மீத்தேன்,கார்பன்டைஆக்சைட் அளவுகளும் குறைந்துவிடும்,'' என்றார்.
ஆனால் நாம் சென்ற சமயத்தில், பெருங்குடி குப்பை கிடங்கில் வந்த லாரிகள் பலவற்றிலும், மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்காமல் கலவையாக வந்து இறக்கப்பட்டதை பார்த்தோம். இதுபோல, கலவையான குப்பையை தொடர்நது கொட்டிக்கொண்டே இருந்தால், இந்த பயோமைனிங் செய்வதால் என்ன நன்மை என்று ஸ்ரீதரிடம் கேட்டோம்.
''எங்கள் நிறுவனத்திற்கு 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட கழிவுகளைப் பிரித்து சரிப்படுத்தும் வேலைக்கான டெண்டர்தான் கொடுத்திருக்கிறார்கள். புதிதாக கொட்டப்படும் கழிவுகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை,''என்றார். மேலும்,பயோ மைனிங் திட்டத்தின் இறுதியில், 100 ஏக்கர் சதுப்புநிலத்தை மீட்டு, பூங்காஅமைக்கும் நிலையில் வழங்குவதுதான் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வேலை என்றார்.
நாம் பெருங்குடி குப்பை கிடங்கில் சுமார் நான்கு மணிநேரம் செலவிட்டோம். அங்குள்ள குப்பை மலையில், பிளாஸ்டிக் கழிவுகள்தான் அதிகம் இருந்தன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களுக்கான தடையை 2021ல் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருந்தாலும், அந்த தடை முழுமையாக செயல்பாட்டில் இல்லை என்பதை நம்மால் பார்க்கமுடிந்தது. இங்கு குவிந்துள்ள புதிய கழிவுகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர், டம்ளர், கப் உள்ளிட்ட பொருட்கள்தான் தென்பட்டன.

சென்னை நகரத்திற்கு பயோமைனிங் தேவையா?
பயோமைனிங் பற்றியும், தொடர்ந்து கழிவுகள் வருவது குறித்தும், 30ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சூழலியல் மீட்பு பணிகளில் ஆய்வு நடத்தியுள்ள ரஞ்சித் டேனியலிடம் கேட்டோம். அவர் சென்னை நகரத்திற்கு பயோ மைனிங் ஏற்ற திட்டம் இல்லை என்கிறார்.
''காய்ந்த நிலப்பரப்பில் மைனிங் செய்வது சுலபம். ஈரமான பகுதியில் செய்வது மிகவும் சிரமம். இங்கு ஈரமான இடத்தில் குப்பையை எடுக்கும் போது, அழுகும் வாடை, நாற்றம் வீசுவதாக அருகில் வசிப்பவர்கள் சொல்கிறார்கள்..அதனால்தான் மிகவும் சிறிய நிலப்பரப்பை அவர்கள் மீட்டு எடுத்திருக்கிறார்கள். அதோடு மீண்டும் குப்பையை கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதால் இது முடிவில்லாத ப்ராஸஸ்.. இதனால் தீர்வு கிடைக்கும் என்று சொல்ல முடியாது,''என்கிறார் அவர்.
மேலும் அவர், ஒவ்வொரு பகுதிகளிலும் குப்பையை பிரித்து வாங்கி, அந்த பகுதிகளில் வைத்தே மறுசுழற்சி செய்வதுதான் தீர்வு என்கிறார்.
''குப்பையை ஒரு இடத்தில் கொண்டு கொட்டுவது என்பதே தவறு. மக்கும் குப்பையை எதற்கு மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லவேண்டும். சென்னை நகரத்தில் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். அதனால்தான் பல உலகநாடுகளில் வீடுகளில் இருந்து குப்பையை வாங்கும்போது பிரித்து வாங்கும் முறையை உறுதியாக பின்பற்றுகிறார்கள்,''என்கிறார் அவர்.

சட்டவிதிகளை மீறுகிறதா சென்னை மாநகராட்சி?
சட்டரீதியாகவும், பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பையைக் கொட்டுவது முதல் பயோமைனிங் செய்வது வரை பல விதிமீறல்களை சென்னை மாநகராட்சி செய்துள்ளதாகக் குற்றம்சாட்டுகிறார் சமூகநல ஆர்வலர் ஜெயராமன்.
திடக்கழிவு மேலாண்மை சட்டவிதிகள் 2016ல் கொண்டுவரப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி புதிதாக கழிவுகள் கொட்டுவதை நிறுத்தாமல், பயோ மைனிங் செய்வதால் எந்த பலனும் இல்லை என்கிறார்.
''பெருங்குடி அல்லது கொடுங்கையூரில் குப்பையை கொட்டுகிறார்கள். பின்னர் அந்த நிலத்தை ,மீட்பதற்காக டெண்டர் கொடுக்கிறார்கள். ஆனால், தினமும் 5,000 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பையை கொட்டுகிறார்கள்.. அதே அளவு பயோ மைனிங் செய்கிறார்களா?இந்த சட்டப்படி, முதலில் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறுசுழற்சி செய்யமுடியாத குப்பை என பிரித்து பின்னர் அதனை பகுதி வாரியாக மையம் அமைத்து, பிரித்து, மறு சுழற்சி செய்யவேண்டும். அதாவது 15 சதவீதம் குப்பைதான் குப்பை கிடங்குக்குப் போகவேண்டும்..ஆனால் 99 சதவீதம் குப்பையை நேரடியாக குப்பை கிடங்கில் கொட்டிவிட்டு, சட்டத்தை முழுமையாக மீறுகிறார்கள்,'' என குற்றம்சாட்டுகிறார் ஜெயராமன்.
சென்னை மாநகராட்சி ஆணையரின் பதில் என்ன?
பயோமைனிங் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு குறித்தும், சென்னை நகரத்தின் குப்பை பிரச்னைக்கான தீர்வு என்ன என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.
''முதலில் பயோ மைனிங் திட்டத்தால், 200ஏக்கரில் பெருங்குடியில் பல ஆண்டுகளில் குவிந்த 30லட்சம் மெட்ரிக் டன் குப்பையில் சுமார் 50 சதவீதம் குப்பை குறைக்கப்பட்டுள்ளது என்கிறார். திட்டம் தொடங்கிய அக்டோபர் 2022ல் இருந்து தற்போது 40 ஏக்கர் நிலத்தை மீட்டிருக்கிறோம். இன்னும், ஒரு வருடத்திற்குள்100 ஏக்கர் நிலத்தை மீட்கவேண்டும் என்பதுதான் இலக்கு. அதேநேரம், புதிய கழிவுகள் கலந்து கொட்டுவது நடந்துகொண்டிருப்பதை ஒப்புக்கொள்கிறோம்,''என்கிறார் அவர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று, தற்காலிகமான குப்பை கொட்டும் இடத்தில்தான், கலவையான குப்பை கொட்டப்படுகிறது என்றும் விரைவில் அதுவும் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், தினசரி சென்னை நகரத்தில் 5000 மெட்ரிக் டன் குப்பை சேர்கிறது, அதில் சுமார் 60 முதல் 65 சதவீதம் குப்பைகளை பிரித்து, மக்கும் குப்பையை உரமாக மாற்றுவதாக கூறினார்.
''மக்காத குப்பையை மறுசுழற்சி செய்கிறோம். சுமார் 35 சதவீதம் குப்பைதான், பிளாஸ்டிக் கழிவுகள், உணவு கழிவுகள், வீட்டு கழிவுகள், தனியார் நிறுவன கழிவுகள் ஒன்றாக கலந்துவருகின்றன. இதனை தடுப்பதுதான் சவாலாக உள்ளது. அதனால் பயோமைனிங் செய்து பழைய கழிவுகளை அகற்றிவிட்டால், புதிய கழிவுகள் கொட்டப்படுவதை மேலும் திறம்பட கையாள முடியும். தற்போது சென்னையில் பல குடியிருப்பு சங்கங்களுடன் இணைந்து மாநகராட்சி குப்பையை பிரித்து வாங்குகிறது. அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் செய்கிறோம். அதில் பொது மக்களின் பங்கேற்பு அதிகாரிக்கும் போது, குப்பை தேங்குவதை முற்றிலும் தடுக்கமுடியும்,''என்கிறார் ராதாகிருஷ்ணன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












