திருநெல்வேலி: பட்டியல் சாதி இளைஞர் கொலையில் திருப்பம் - இளம்பெண்ணை சீண்டியதால் கொலையா?

பட மூலாதாரம், HANDOUT
- எழுதியவர், பிரபாகர் தமிழரசு
- பதவி, பிபிசி தமிழ்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை கிராமத்கிராமத்தில் வாழ்ந்து வந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கடந்த ஜூலை 22ஆம் தேதியன்று இரவு கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்டு, புதரில் அவர் வீசப்பட்ட சம்பவம், ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால், அந்த கொலை முன்பகை காரணமாக நடந்துள்ளதாகக் கூறி மூன்று பேரை கடந்த ஜூலை 25ஆம் தேதி கைது செய்தனர்.
இருப்பினும், உடலை வாங்க மறுத்து கடந்த 10 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று (ஜூலை 2) உடலை பெற்று அடக்கம் செய்தனர்.
பட்டியல் சாதி இளைஞர் கொலை
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை கிராமம் சுவாமிதாஸ் நகரைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மூன்றாவது மகன் முத்தையா(19), சங்குனாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான ஜுலை 23ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்ற முத்தையா வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கத்தில் தேடினர்.
அப்போது முத்தையா தனது வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள ஓடைக்கரை பாலத்திற்கு அருகில் வயிறு, முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை முதலில் பார்த்த முத்தையாவின் இரண்டாவது சகோதரர் மகாராஜா, தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பட மூலாதாரம், HANDOUT
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக முத்தையாவின் தந்தை கன்னியப்பன் கொடுத்த புகாரின்பேரில் திசையன்விளை போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302(கொலை) பிரிவின் கீழும், வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவு 3(2)(v) கீழும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் தகவல் அறிக்கையில், முத்தையா அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக, முத்தையாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
முத்தையா கொலை செய்யப்பட்ட ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சம்பவங்ளை முதல் தகவல் அறிக்கையில் விவரித்துள்ள கன்னியப்பன், முத்தையா காதலித்த பெண் அன்று மதியம் 2 மணிக்கு அவர்களின் வீட்டிற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் சகோதரர் ஒருவர், ஒருமுறை முத்தையா வேலை செய்யும் இடத்தில் வைத்து அவரது சட்டையைப் பிடித்து அடிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய முத்தைாவின் தந்தை கன்னியப்பன், “அந்தப் பெண் இதற்கு முன்னும் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த முறை வந்த அந்தப் பெண், அவர்களது பெற்றோர் என் மகனிடம் பழகுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், என் மகனிடம் பேசக்கூடாது என எச்சரித்ததாகவும் சொன்னார். நாங்கள் பிரச்னை எதுவும் வேண்டாம் என அந்தப் பெண்ணிற்கு அறிவுரை கூறி அனுப்பினோம்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “பஸ் ஸ்டாண்டில் செருப்பு தைத்தும், பாலிஷ் போட்டும்தான் அவனை வளர்த்தேன். இப்படி ஒரு பிரச்னையில் அவனைப் பறிகொடுப்பேன் என நான் நினைக்கவே இல்லை.”
கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த முத்தையா
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய முத்தையாவின் சகோதரர் மகாராஜா, “என்னுடைய முதல் அண்ணன் கைகேல் ராஜ், முத்தையாவை தேடி கண்டுபிடிக்க முடியாமல் விட்டுவிட்டான். எனக்குத்தான் தெரியும் அவன் எப்பவும் அந்த ஓடைக்கரையோரம் உள்ள பாலத்தில் அமர்ந்துதான் அந்தப் பெண்ணிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பான்.
அங்கு போய் பார்த்தால்தான் தெரிந்தது, அவன் பாலத்துக்கு கீழ பள்ளத்தில் விழுந்து கிடந்தான். தூக்கிப் பார்த்தால், அவன் கழுத்திலும் வயிற்றுப் பகுதியிலும் பலமான கத்திக்குத்து காயங்களுடன் இறந்துகிடந்தான்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “எனக்கும் என் தம்பிக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதான். அன்று அந்தப் பெண் எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார். தம்பிதான் கொண்டுபோய் பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு வந்தான். எதுக்கு தேவையில்லாத பிரச்னை என்று நான் என் தம்பியையும் என் அம்மாவையும் சத்தம் போட்டேன்,” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய முத்தையாவின் மற்றொரு சகோதரர் மைக்கேல் ராஜ், “நாங்கள் தாழ்த்தப்பட்டோர் என்பதால், ஊருக்குள்ளும் சரி, டவுன் பகுதியிலும் சரி, எங்களுக்கு யாரும் மரியாதையான வேலை தந்ததே இல்லை.
இவன் ஒருத்தன்தான் எப்படியோ கல்யாண பத்திரிகை தயாரிக்கும் நிறுவனத்ததில் பணிக்குச் சேர்ந்தான். அங்கு வேலைக்குச் சென்ற இடத்தில் ஏற்பட்ட ஒரு நட்பினால் இப்படியெல்லாம் ஆகும் என்றால், அவனையும் நாங்கள் ஊருக்கு வெளியே அனுப்பியிருக்க மாட்டோம்,” என்றார்.
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை

பட மூலாதாரம், HANDOUT
கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கொலை செய்தவர்களை விரைவில் கைது செய்யக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்ப் புலிகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஜுலை 24ஆம் தேதி மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகையிட்டவர்களை அப்புறப்படுத்திய போலீசார், அவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் பங்கெடுத்த தமிழ்ப் புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிரவன் பேசுகையில், “எப்போதும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் போலீசார் பாரபட்சம் காட்டுகின்றனர்,” என்றார்.
மேலும், உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் கேட்டபோது, “பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் மனு பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்,” என்றார்.
முன்பகை காரணமாக கொலை

பட மூலாதாரம், TN POLICE
இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டார் எனக் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் 10 நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை(ஆகஸ்ட் 2) உடலை பெற்று அடக்கம் செய்தனர்.
உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், முத்தையா ஆணவக்கொலை செய்யப்பட்டார் எனக் கூறிய நிலையில், அவர் முன்பகை காரணமாக கொலை செய்யப்ட்டுள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக புலன்விசாரணை செய்து வந்த திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல்நிலை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத்தையா அப்பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்ததால், அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் நண்பர்கள் இணைந்து, முத்தையாகவை கொலை செய்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
“கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது சகோதரியைத் தொடர்ந்து பின்தொடர்ந்து கிண்டல் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அப்பெண், சுரேஷிடம் கூறியுள்ளார். முன்னதாகவே சுரேஷின் சகோதரியை பாலியல்ரீதியாக முத்தையாவின் உறவினர் துன்புறுத்தியாக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. ஒரு மாதத்திற்கு முன், முத்தையாவை சுரேஷ் எச்சரித்துள்ளார். இருந்தும், கடந்த ஜூலை 22ஆம் தேதி, முத்தையா சுரேஷின் சகோதரியை கிண்டல் செய்துள்ளார்.
இதனால், மனமுடைந்த அந்தப் பெண் சுரேஷிடம் கூறி அழுதுள்ளார். ஆத்திரமடைந்த சுரேஷ், தனது உறவினர்களான மதியழகன், ஜெயப்பிரகாஷுடன் இணைந்து முத்தையாவை கொலை செய்யத் திட்டமிட்டு, ஜூலை 23ஆம் தேதி இரவு, முத்தையா தனியாக இருந்தபோது, அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்,” என போலீசாரின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், “சாதிக் கொலையாக இருக்கலாம் என்றுதான் நாங்களும் முதலில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தோம். விசாரணையில்தான், அது முன்பகை காரணமாக நடந்தது எனத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக இறந்து இளைஞரின் பெற்றோரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
போலீசார் கூறுவதை ஏற்க மறுத்து, முத்தையாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பத்து நாட்காக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 29ஆம் தேதி, போலீஸ் தரப்பிலிருந்து முத்தையாவின் தந்தை கன்னியப்பனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உடலை வாங்காவிட்டால், போலீசாரே உடலை அடக்கம் செய்துவிடுவோம் எனக்கூறியதையடுத்து, நேற்று முத்தையாவின் உடலைப்பெற்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஆவணக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் எனத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆணவக்கொலைகள் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கேட்கப்பட்டது.
மேலும், ஆணவக்கொலைகளைத் தடுக்கத் தவறினால், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த வழக்கு விசாரணையின்போதே, தமிழ்நாட்டில் நடந்துள்ள ஆணவக்கொலைகள் தொடர்பான தகவல்களும் கேட்கப்பட்டிருந்தது.
அதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் 2003 முதல் 2019 வரை 23 சாதி ஆணவ கொலைகள் நடந்துள்ளன.
அந்த அறிக்கையின்படி, 2003ஆம் ஆண்டில்தான் முதல் ஆணவக்கொலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 2003-2010 வரை எந்த ஆவணக்கொலைகளும் நடக்கவில்லை என்றும், 2013இல் ஆறு, 2014இல் நான்கு, 2015இல் இரண்டு, 2016இல் ஒன்று, 2017இல் மூன்றும், 2018 மற்றும் 2019இல் தலா ஒரு சாதி ஆணவக்கொலைகளும் நடந்துள்ளன என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
ஆனால், உண்மையில் இதைவிட அதிகமான சாதி ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார் எவிடன்ஸ் அமைப்பின் நிறுவனத்தலைவர் கதிர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








