தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கு தனிச்சட்டம் அவசியமா? - அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள்

தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கு தனிச்சட்டம் அவசியமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் 'காதல் விவகாரத்தால் ஆண்டுதோறும் 120 முதல் 150 கொலைகள் நடக்கின்றன. ஆனால், சாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக அரசிடம் மிகச் சொற்பமான தகவல்களே உள்ளன' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் என்பவர் கொலை வழக்கில், தீரன் சின்னமலை பேரவையை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு சாகும் வரையில் ஆயுள் சிறை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில், கொலையான கோகுல்ராஜுக்கும் யுவராஜுக்கும் தனிப்பட்ட முன்விரோதம் எதுவும் இல்லை எனவும் மாற்று சாதியை சேர்ந்த பெண்ணை, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் காதலித்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டதையும் நீதிபதி சம்பத்குமார் விவரித்திருந்தார்.

இதற்கு முன்னதாக, உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கு, திருவாரூர் அபிராமி வழக்கு, நெல்லை கல்பனா வழக்கு, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி வழக்கு, கண்ணகி - முருகேசன் வழக்கு என ஆணவப் படுகொலை தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் சில வழக்குகள் மேல்முறையீட்டின்போது நீர்த்துப் போவதையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தனிச்சட்டம் அவசியம் ஏன்?

தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கு தனிச்சட்டம் அவசியமா?

பட மூலாதாரம், Getty Images

ஆணவப் படுகொலைகள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுப்பது தொடர்பாக 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

அதில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களை தண்டிப்பதற்காகவும் சிறப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும்' என பரிந்துரை செய்துள்ளது. இப்படியொரு சட்டம் இயற்றப்படும் வரையில் மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியுள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

"தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால், அதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கவில்லை'' என்கிறார், மதுரையை சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பின் கதிர்.

"தனிச்சட்டம் இயற்றப்படுவதற்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள் உள்ளன. இதுதவிர, உயர் நீதிமன்றங்களிலும் பல்வேறு தீர்ப்புகள் வந்துள்ளன. குறிப்பாக, லதாசிங் எதிர் உத்தரபிரதேச வழக்கில், `கலப்புத் திருமணம் செய்வதற்கு இந்து திருமணச் சட்டம் தடையாக இல்லை' எனக் கூறியுள்ளனர். அதேபோல், ஆறுமுகம் சேர்வை எதிர் தமிழ்நாடு வழக்கில், 'காப் பஞ்சாயத்தும் கட்டப்பஞ்சாயத்தும் ஒன்றுதான். இவை இரண்டும் மோசமான விஷயங்கள். இவை ஜனநாயகத்துக்கு எதிரானது' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்து, விகேஷ் யாதவ் எதிர் உத்தரபிரதேச வழக்கிலும், ஆஷா ரஞ்சன் எதிர் பிகார் வழக்கிலும், `திருமணம் செய்து கொள்வதற்கான முடிவை எடுக்கும் அனைத்து அதிகாரங்களும் பெண்களுக்குத்தான் உள்ளது. அவர்களது தேர்வில் யாரும் குறுக்கீடு செய்யக் கூடாது. அவர்களின் சுயமரியாதையைக் கேள்வி கேட்கக் கூடாது' எனக் கூறப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிடுகிறார் எவிடென்ஸ் கதிர்.

தேசிய சட்ட ஆணைய வரைவில் தமிழ்நாடு

எவிடன்ஸ் கதிர்
படக்குறிப்பு, எவிடன்ஸ் கதிர்

"மரண தண்டனை மீது எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் கிருஷ்ணா மாஸ்டர் எதிர் உ.பி என்ற வழக்கில், `அனைத்து ஆணவக் கொலைகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்' எனத் தீர்ப்பு வந்தது. மேலும், 2012ஆம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் வரைவு ஒன்றைக் (Prohibition of Unlawful Assembly (Interference with the Freedom of Matrimonial Alliances) கொண்டு வந்தது.

அதில், ஆணவக் கொலைகள் என்பது பிகாரிலோ, உ.பியிலோ, பஞ்சாப்பில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டிலும் நடக்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு ஆணவக் கொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததன் விளைவால், தேசிய சட்ட ஆணையத்தின் வரைவில் தமிழ்நாடு இடம்பெற்றிருந்தது.

இவைபோக, 2018ஆம் ஆண்டு சக்திவாகிணி வழக்கில் 20 வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதில், `இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும், தலைமை செயலாளர் தலைமையில் கிராமம், தாலுகா, மாவட்டம் வாரியாக எங்கெல்லாம் கலப்புத் திருமணம் நடந்துள்ளதோ அதனைக் கணக்கெடுக்க வேண்டும், அவர்களுக்கு ஆபத்து இருப்பது தெரியவந்தால் தன்னிச்சையாக அந்த வழக்கை கையில் எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்'' என்கிறார்.

இந்த வழக்கில் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, சாதிப் பஞ்சாயத்து நடந்தால் அதற்குக் காரணமானவர்களை எச்சரிக்க வேண்டும்; தலையீடு செய்தால் வழக்கு பதிவு செய்வோம் என எச்சரிப்பது, பதற்றம் ஏற்பட்டால் 144 தடை உத்தரவை போடுவது, பஞ்சாயத்து நடப்பதை வீடியோ எடுப்பது, அதனைத் தடுக்க முற்பட்டால் வழக்குப் பதிவு செய்வது என வகைப்படுத்தியுள்ளனர்.

மேலும், கலப்பு மணம் செய்தவர்களுக்குப் பிரச்னைகள் அதிகம் இருந்தால் அவர்களுக்குத் தனி வீடு எடுத்துக் கொடுத்து அவர்களுக்கான உணவு மற்றும் இதர செலவுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ``இந்தத் தீர்ப்பு 2018 மார்ச் மாதம் வந்தாலும் அதற்கு முன்னதாக 2013ஆம் ஆண்டில் இருந்தே ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியும் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை'' என்கிறார் கதிர்.

தமிழ்நாட்டில் வெறும் 4 கொலைகள்தானா?

தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கு தனிச்சட்டம் அவசியமா?

பட மூலாதாரம், Getty Images

'தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் சரியாக உள்ளதா?'' என்றோம். "இதுதொடர்பாக, தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் சில தகவல்களை வாங்கியுள்ளோம். குறிப்பாக, `2016 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எத்தனை ஆணவக் கொலைகள் நடந்துள்ளன?' எனக் கேட்டிருந்தோம். இதற்குத் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள பதிலில், நான்கு கொலைகள் மட்டுமே நடந்துள்ளதாக கூறுகிறது. நெல்லையில் 1, திருப்பூரில் 1, தூத்துக்குடியில் 2 எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், நாங்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட வழக்குகளே அறுபதுக்கும் மேல் இருக்கும். அரசு கொடுத்த புள்ளிவிவரம் என்பது குறைவாக உள்ளது. மேற்கண்ட நான்கு வழக்குகளிலும் ஏழு பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். இதுதவிர, கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக ஆறு தீர்ப்புகள் வந்துள்ளன.

இதில், நான்கு வழக்குகளில் செசன்ஸ் நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்தாலும் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். கண்ணகி - முருகேசன் மற்றும் கோகுல்ராஜ் ஆகிய வழக்குகளுக்கு இன்னும் மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை'' என்கிறார்.

ஆண்டுக்கு 120 காதல் கொலைகள்

தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடக்கும் காதல் விவகாரம் தொடர்பான கொலைகள் குறித்துப் பேசும் கதிர், "ஆண்டுதோறும் 120 முதல் 150 கொலைகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் ஆணவக் கொலைகளாகத்தான் பார்க்க வேண்டும். கோகுல்ராஜ் வழக்கில் யுவராஜுக்கும் அவருக்கும் முன்னரே எந்தவிதத் தொடர்பும் இல்லை. இதைத்தான் காப் பஞ்சாயத்து என்கின்றனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தருமபுரியில் உள்ள நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனியில் இளவரசன் விவகாரம் தொடர்பாக சாதிக் கலவரம் வெடித்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கான அணியை ராமதாஸ் உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாகத்தான் யுவராஜின் செயல்களைப் பார்க்க முடிகிறது'' என்கிறார்.

``நாட்டில் உள்ள சட்டங்களே போதுமானதாக இருக்கும்போது தனிச்சட்டம் அவசியமா?'' என்றோம்.

"தனிச்சட்டம் தேவைப்படுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. பட்டியலினத்தைச் சேர்ந்தவராக ஆணும் பிற சமூகத்தைச் சேர்ந்தவராக பெண்ணும் இருந்தாலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும். ஒருவேளை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை கொலை செய்தால் அதனை எஸ்.சி, எஸ்.டி பிரிவில் கொண்டு வர முடியாது. காரணம், இந்தப் பிரிவுகளைப் பொறுத்தவரையில் பாதிக்கப்படுகிறவர்கள் எஸ்.சி, எஸ்.டியாக இருக்க வேண்டும். ஆனால், கொலைக்குப் பொதுவான காரணமாக சாதி உள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு

தனிச் சட்டம் கொண்டு வந்தால்தான் அதற்கென தனியாக நிதியும் விதிகளும் கட்டமைப்பும் வகுக்கப்படும். இதற்காக நீதிமன்றங்களும் அரசு குற்ற வழக்கறிஞர்களும் நியமிக்கப்படுவார்கள். இதில் விசாரணை அதிகாரிகளின் கடமைகளும் பொறுப்புகளும் வகுக்கப்படும். ஆணவக் கொலைகள் மட்டுமல்லாமல் ஆணவக் குற்றங்களும் அடங்கும்.

தவிர, கொத்தடிமை தொடர்பாக சட்டம் இருந்தும் அதற்கு தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற காரணத்தால் 1976ஆம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். அதேபோல், 1986ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த வரிசையில் எஸ்.சி, எஸ்.டி சட்டம், நிர்பயா சட்டம் போன்றவை வந்தன. பெண்ணை பின்தொடர்ந்து பார்ப்பது, மறைந்திருந்து பார்ப்பது எனப் பல பிரிவுகளை சேர்த்தனர். 2010 காங்கிரஸ் அரசில் உள்துறை அமைச்சராக இருந்த வீரப்ப மொய்லி, `ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு ஆறு மாதத்துக்குள் தனிச்சட்டம் கொண்டு வருவோம்' என்றனர். ஆனால் கொண்டு வரவில்லை.

கண்டுகொள்ளாத மாநில அரசு

தற்போது மத்தியில் அமைச்சராக உள்ள எல்.முருகன், தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தபோது இதே கருத்தை தெரிவித்தார். அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. இதனைக் கொண்டு வராமல் இருப்பதற்குக் காரணம், `சாதியக் கட்டுமானம் உடைந்தால் இந்து அடிப்படைத்தன்மை உடையும்' என்பதால்தான்'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``தமிழ்நாட்டில் காதல் விவகாரத்தில் ஆண்டுக்கு 120 கொலைகள் நடக்கிறது என்றால் உ.பியிலும் மத்திய பிரதேசத்திலும் எவ்வளவு நடக்கும்? ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஆண்டுக்கு மூன்றாயிரம் கொலைகளாவது நடக்கும்.

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், 2014ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் நடந்த விமலா தேவி வழக்கில் 7 வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்திருந்தனர். அதில், கலப்புத் திருமண தம்பதிகளைக் காப்பதற்கு பாதுகாப்பு மையம் ஒன்றை மாவட்ட எஸ்.பி, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை என மூன்று துறைகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதுதொடர்பாக, 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் எவிடென்ஸ் அமைப்பின் அறிக்கையை அடிப்படையாக வைத்து, `பாதுகாப்பு மையம் எங்கே அமைத்தீர்கள்?' என அரசிடம் கேட்டது. அதற்கு, 38 மாவட்டங்களில் அமைத்துள்ளதாக அரசு அறிக்கை சமர்ப்பித்தது. நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, `3 மாவட்டங்களைத் தவிர வேறு எங்கும் பாதுகாப்பு மையம் அமைக்கப்படவில்லை' எனத் தெரியவந்துள்ளது'' என்கிறார்.

"தனிச்சட்டம் இயற்றுவதற்கான பணிகளில் மாநில அரசு கவனம் செலுத்துகிறதா?'' என்றோம். ``இல்லை. தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்புக் கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும். ராஜஸ்தானில் இதற்கென மசோதா கொண்டு வந்தாலும் சட்டமாக்கப்படவில்லை. இதனை சட்டமாக்கினால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கும். ஆணவக் கொலைகள் என்பது மாநிலப் பட்டியலில் உள்ளதாக மத்திய அரசு சொல்கிறது. இது தேவையற்ற வாதம்.

பெண்ணின் உருவத்தை சாதியின் உருவமாகப் பார்க்கின்றனர். `இருவர் முடிவெடுத்துவிட்டால் அவர்களின் விருப்பத்தில் தலையிட முடியாது' எனச் சட்டம் சொன்னாலும் சாதி அமைப்புகளும் கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளும் அதற்குத் தடையாக உள்ளன. இவற்றைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. சட்டம் இருந்தும் அதனை அலட்சியப்படுத்துகின்றனர். அதனால்தான் ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு தனிச்சட்டம் வேண்டும் என்கிறோம்'' என்கிறார்.

தனிச்சட்டம் அவசியமில்லை

தனியரசு
படக்குறிப்பு, தனியரசு

"தனிச்சட்டம் தொடர்பான கோரிக்கை சரியானதா?'' என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான உ.தனியரசுவிடம் பேசினோம். "சாதி தொடர்பான கொலைகளுக்கு தனிச்சட்டம் அவசியமில்லை. இந்தச் சட்டத்தை மட்டும் சொல்லவில்லை. தடா, பொடா எனப் பல்வேறு சிறப்புச் சட்டங்களும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதைப் பல நேரங்களில் பார்க்க முடிகிறது. இவை மனிதர்கள் மீது இரக்கமில்லாமல் உரிமையைப் பறிக்கும் வகையில்தான் உள்ளன'' என்கிறார்.

"சாதி தொடர்பான கொலைகளில் ஏற்கெனவே உள்ள சட்டங்களின்படி தண்டனை பெறுகின்றனர். சட்டங்களைக் கூர்மையாக்குவது மனிதனை அச்சப்படுத்தும் வேலைகளைத்தான் செய்கிறது. சாதி, மதம், ஏழை, பணக்காரன் என நான் பார்க்கவில்லை. சட்டம் கடுமையாக இருக்கும் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. குற்றம் செய்த நபர் திருந்திய பிறகும் சிறையில் அடைபட்டிருப்பது எந்தவகையில் சரியானது. வீரப்பனின் அண்ணன் மாதையன் 33 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். முதுமையின் காரணமாக நோய்வாய்ப்ப்பட்டுள்ள ஒரு நபரை சிறையிலேயே வைத்திருப்பது எவ்வளவு கொடுமையானது. ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சோனியா, ராகுல் ஆகியோரின் மனநிலையிலேயே மாற்றம் வந்துவிட்டது. பகை உணர்வு என்பது படிப்படியாக குறையும். அதனால்தான் அந்த நேரத்தில் நீதிமன்றம் தண்டனை கொடுக்கின்றன. அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்களே அவர்களை மன்னித்துவிடுங்கள் எனக் கூறும் சம்பவங்களை கேட்க முடிகிறது. எனவே, சாதி தொடர்பான கொலைகளுக்கு தற்போதுள்ள சட்டங்களே போதுமானவையாக உள்ளன'' என்கிறார்.

அரசின் கருத்து என்ன?

உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

"தனிச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கு சாத்தியமுள்ளதா?'' என சிறைத்துறை வழக்குகளை கையாண்டு வரும் அரசு வழக்கறிஞர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, "தற்போதுள்ள சட்டங்களே போதுமானது. ஆணவக் கொலைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக நடத்துவதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கலாம். குழந்தைகளுக்காக தனியாக போக்சோ சட்டமே கொண்டு வந்தாலும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகப்படியாக நடந்து வருகிறது. வெறும் சட்டங்கள் மட்டுமே குற்றங்களைத் தடுக்கப் போவதில்லை. சமூகத்திலும் மாற்றம் வர வேண்டும். தனிச் சட்டம் தொடர்பான விவகாரத்தில், தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக அமல்படுத்தினாலே போதும் என்பதே அரசின் கருத்தாகவும் உள்ளது'' என்கிறார்.

மேலும், ``பெண் என்பவரை குடும்பத்தின் கௌரவமாகவும் அவர் செய்யக் கூடிய செயல்கள் தங்களது குடும்பத்தை பாதிக்கும் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. சாதி மறுப்புத் திருமணம் என்பது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. அனைத்து சாதிகளிலும் கலப்புத் திருமணம் என்பது நடக்கிறது. அதனை பலர் ஏற்றுக் கொள்கின்றனர். அதனை தேவையற்ற ஒன்றாக சிலர் பார்ப்பதால், சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடக்கின்றன. பெண்ணை பார்க்கின்ற மனநிலை மாறும்போது அனைத்தும் மாறுவதற்கான சூழல் உள்ளது'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: