ஆவடி இரட்டைப் படுகொலை: அரை நிர்வாண வீடியோ; பிரிந்து சென்ற மனைவி - பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஆவடி இரட்டைப் படுகொலை வழக்கில் ஒன்பது பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அரை நிர்வாணப் புகைப்படங்களை எடுத்து மிரட்டியது தொடர்பாக நண்பர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலில் இந்தப் படுகொலை நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள ஆவடியில் கடந்த 13 ஆம் தேதியன்று டேங்க் தொழிற்சாலை காவல் நிலைய எல்லையில் இரட்டைப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆவடி மீன் மார்க்கெட்டில் பணிபுரியும் அசாருதீன் என்கிற அரசு என்பதும் மற்றொருவர் சுந்தர் என்கிற சின்ன அப்பு என்பதும் தெரியவந்துள்ளது. இதில் சுந்தர் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். `இந்தப் படுகொலை எதனால் ஏற்பட்டது?' எனக் காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கியபோது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாயின.
ஆவடி, கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது நண்பர் ஜெகன். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று வந்தபோது அவரது மனைவியுடன் ஜெகனுக்கு நட்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனைப் பிரிந்து ஜெகனுடன் அவரது மனைவி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், மணிகண்டனை மிரட்டி ஆடையில்லாமல் ஜெகன் வீடியோ எடுத்துப் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மனைவியையும் அபகரித்துவிட்டு தன்னையும் வீடியோ எடுத்து மிரட்டியதால் கூலிப்படை மூலம் ஜெகனை கொல்வதற்கு மணிகண்டன் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கடந்த 12 ஆம் தேதி ஆவடி ஓ.சி.எஃப் மைதானத்தில் ஜெகனை கொல்வதற்காக கூலிப்படையுடன் மணிகண்டன் வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் ஜெகனின் நண்பர்களான அசாருதீனும் சுந்தரும் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக, ஆவடி காவல் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மற்றும் காவல் ஆய்வாளர் ராஜுபிரின்ஸ் ஆரோன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இறந்தவர்களின் உடல்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆவடி இரட்டைப் படுகொலை தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2017 ஆம் ஆண்டு பிரிசில்லா என்பவரை மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு ஜெகனுடன் பிரிசில்லாவுக்கு தவறான நட்பு இருந்து வந்துள்ளது. இதில் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக ஜெகன் இருந்து வந்துள்ளார். முன்னதாக, மணிகண்டனை தாக்கி அரைநிர்வாண புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு பத்தாயிரம் ரூபாய் பணமும் 2 கிலோ கஞ்சாவும் கேட்டு மிரட்டியுள்ளனர். வரும் 14 ஆம் தேதிக்குள் இவற்றைத் தரவேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து ஜெகனைக் கொல்வதற்கு மணிகண்டன் திட்டமிட்டுள்ளார்."
"கடந்த 12 ஆம் தேதி இரவு ஓ.சி.எஃப் மைதானத்தில் ஜெகனும் அவரது நண்பர்களான சுந்தர் மற்றும் அசாருதீனும் மது அருந்தியுள்ளனர். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு மணிகண்டன் தனது கூலிப்படை நண்பர்களுடன் சேர்ந்து அங்கு சென்றுள்ளார். தன்னைக் கொல்வதற்கு வந்துள்ளதை உணர்ந்த ஜெகன், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சுந்தரும் அசாருதீனும் போதையில் இருந்ததால் அவர்களால் ஓட முடியவில்லை. இதையடுத்து மணிகண்டன் தரப்பினர் அவர்களைக் கொன்றுள்ளனர்" என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு மணிகண்டன் உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கிருஷ்ணா கால்வாய் அருகே மணிகண்டனை போலீஸார் கைது செய்தபோது அவர் தப்பியோட முயற்சித்ததாகவும் இதனால் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












