தி காஷ்மீர் ஃபைல்ஸ்: காஷ்மீரி பண்டிட்கள் குறித்து தீவிரமாகும் விவாதம் - இதுவரை அரசுகள் என்ன செய்துள்ளன?

பட மூலாதாரம், MANAN VATSYAYANA/AFP VIA GETTY IMAGES
- எழுதியவர், அபய் குமார் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
காஷ்மீரி பண்டிட்களின் மனவலி இரண்டுவகையாக உள்ளது. முதலாவது 1990களில் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானவர்கள் அனுபவிக்கும் வலி. இரண்டாவது, பள்ளத்தாக்கை விட்டு வெளியேறாதவர்களின் வலி. அவர்கள் நிச்சயமற்ற சூழலில் பல ஆண்டுகளாக பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர்.
இவர்களின் அனுபவங்களும் கதைகளும் வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் ஒன்றிணைந்து சொல்வது ஒருவிஷயத்தைத்தான். "எங்கள் வலியை அரசுகள் சரியாகப் புரிந்து கொள்ளவேயில்லை" என்பதுதான் அது.
பிபிசி இந்தி இதுபோன்ற பலருடன் உரையாடியது. காஷ்மீரி பண்டிட்கள் அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் மற்றும் அவர்களுக்காக வெவ்வேறு அரசுகள் என்ன செய்தன என்பதை நாங்கள் அறிய விரும்பினோம்.
தற்போது விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. திரையரங்குகள் முதல் சமூகவலைதளங்கள் வரை இந்தப் படம் குறித்து பலவிதமான மாறுபட்ட கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
காஷ்மீர் பண்டிட்கள் தொடர்பான உண்மைகளை, எந்த அச்சமும் இன்றி வெளிப்படையாக இந்தப்படத்தில் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீரி பண்டிட்களின் மறுவாழ்வு அமைப்பின் தலைவர் சதீஷ் மஹல்தாரும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்.
காஷ்மீரி பண்டிட்களின் புலம்பெயர்வு படத்தில் காட்டப்பட்டுள்ளது, ஆனால் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்று சதீஷ் கூறுகிறார்.
செலக்டிவ் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள படம்
"காஷ்மீர் பண்டிட்களின் புலப்பெயர்வு நடந்தபோது, பாஜக ஆதரவுடன் வி.பி. சிங் அரசு இருந்தது. இப்போது கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி உள்ளது. ஆனால், எந்த சூழ்நிலையில் புலம்பெயர்வு நடந்தது என்பது குறித்த விசாரணக்காக நாங்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம். படத்தில் அதை எங்குமே காணவில்லை,"என்று சதீஷ் மஹல்தார் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், ANUPAM KHER
காஷ்மீரை விட்டு வெளியேறாத 808 காஷ்மீரி பண்டிட்களின் குடும்பங்கள், இன்று அங்கே வாழ்கின்றன. அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கையின் கதை என்ன என்பதும் படத்தில் காட்டப்படவில்லை என்கிறார் சதீஷ்.
"அப்போது நடந்த சில வன்முறைகள் காட்டப்பட்டுள்ளன. ஆனால் சிலவற்றைத் தவிர்த்துவிட்டனர். ஒட்டுமொத்தமாக விவேக் அக்னிஹோத்ரி இந்தப் படத்தை செலக்டிவ் முறையில் வழங்கியிருக்கிறார்" என்று குறிப்பிட்டார் அவர்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வந்த எல்லா அரசுகளும் ஒரே நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன என்று சதீஷ் மஹல்தார் கூறுகிறார். "இந்தியா முழுவதும் பிரச்சனை பற்றிய பேச்சு நடக்கட்டும், நடந்துகொண்டே இருக்கட்டும், ஆனால், அவர்களின் மறுவாழ்வுக்கு எதுவும் செய்யவேண்டாம்," என்பதுதான் அது," என்கிறார் அவர்..
"காஷ்மீர் பண்டிட்களை குடியமர்த்துவோம் என்று பாஜக பிரச்சாரம் செய்தது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தாலும்கூட அதைச்செய்யவில்லை. காங்கிரஸும் நிறைய வாக்குறுதிகளை அளித்தது, ஆனால் சிறப்பாக எதையும் செய்யவில்லை. ஆனால், ஜம்முவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கக்கூடிய நிரந்தர முகாம்களை உருவாக்கி, பிரதமர் பேக்கேஜையும் கொண்டு வந்த ஒரு நல்ல காரியத்தை காங்கிரஸ் செய்தது,"என்று அவர் குறிப்பிட்டார்.
2008-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் காஷ்மீர் புலம்பெயர்ந்தோருக்கான பிரதமர் பேக்கேஜ் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வேலைகள் உருவாக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
2008 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு மக்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் 6,000 வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த பலர் இந்த வேலைகளை செய்து வருகின்றனர். இந்த மக்கள் காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள தற்காலிக வீடுகளில் வசிக்க வேண்டும்.
'மோசமான நிலையில் நாங்கள்'
இந்த திட்டத்தின் கீழ் வேலை பெற்ற காஷ்மீரி பண்டிட் ஒருவர், தனது பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேசினார். இந்த திட்டத்தை காஷ்மீரி பண்டிட்களை மறு குடியேற்றுவதற்கான திட்டமாக பார்க்கக்கூடாது என்று அவர் கூறுகிறார்.
1990 மார்ச் மாதம் தனது 15வது வயதில், காஷ்மீரில் உள்ள தனது வீட்டை விட்டு அவர் வெளியேற வேண்டியிருந்தது. இப்போது இத்திட்டத்தின் கீழ் காஷ்மீரில் ஆசிரியராக அவர் பணியாற்றி வருகிறார்.
"எங்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. காஷ்மீரில் உள்ள எங்கள் மூதாதையர் வீடு பறிக்கப்பட்டது. நாங்கள் ஜம்முவில் வாழத் தொடங்கியபோது, ஒரு குடும்பத்திலிருந்து ஒருவருக்கு வேலை தருவதாகக்கூறிய அரசு, என்னை காஷ்மீரில் தள்ளிவிட்டது," என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், ANI
தனது முழு குடும்பமும் ஜம்முவில் வசிப்பதாகவும், வீட்டில் நோய்வாய்ப்பட்ட பெற்றோர் இருப்பதாகவும், ஆனால், வேலைக்காக காஷ்மீர் செல்ல வேண்டி இருப்பதாகவும் வருத்தத்துடன் அவர் கூறுகிறார்.
தற்போது அவர் வேலைக்காக, பட்காமின் ஷேக்போராவில், பண்டிட் காலனியில் வசிக்கிறார்.
ஜம்முவில் வேலை கேட்டு வேண்டுகோள் விடுக்கும் அவர், "இன்று எனக்கு இரண்டு விதமான வலிகள் உள்ளன. என் வீட்டின் நிலையை பார்க்கும்போது என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மறுபுறம், நான் குடும்பத்தை விட்டு விலகி, சுதந்திரமான உணர்வு இல்லாத ஒரு இடத்தில் வாழ்கிறேன்," என்று கூறினார்.
கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகம் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டது. 1990 முதல் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறிய குடும்பங்களில், 44,167 காஷ்மீரி குடியேறி குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று 1990 இல் நிறுவப்பட்ட மறுவாழ்வு அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இதில், குடிபெயர்ந்த இந்து குடும்பங்களின் எண்ணிக்கை 39,782 ஆகும். பிரதமர் பேக்கேஜின் கீழ் வேலை தவிர, சொந்த இடத்தில் குடியேற விரும்பும் குடும்பங்களுக்கு நிதி உதவியும், காஷ்மீரி புலம்பெயர்ந்தோருக்கு ரொக்கப்பண நிவாரணமும் வழங்கப்படுகிறது.
காஷ்மீரில் வாழும் காஷ்மீரி பண்டிட்கள் என்ன நினைக்கிறார்கள்?
பள்ளத்தாக்கை விட்டு வெளியேறாத காஷ்மீரி பண்டிட்டுகளில் பலர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.
காஷ்மீரி பண்டிட் சங்கர்ஷ் சமிதியின் தலைவரான சஞ்சய் டிக்கு, காஷ்மீரில் வாழ்ந்து வரும் காஷ்மீரி பண்டிட்டுகளில் ஒருவர். இப்போது அவர் புலம்பெயராத காஷ்மீரி பண்டிட்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். ஹப்பா கதல் பகுதியில் உள்ள பர்பர் ஷா குடியிருப்பகுதியில் வசிக்கும் சஞ்சய் டிக்கு, பிபிசி ஹிந்தியிடம் பேசினார். இதுபோன்ற மொத்தம் 808 குடும்பங்கள் இருப்பதாகவும், காஷ்மீரி பண்டிட்களின் புலம்பெயர்வு தங்கள் சமூகத்தை, புலம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயராதோர் என்று இரண்டு பகுதிகளாகப் பிரித்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
அதை தவறு என்று அவர் கூறுகிறார். வெவ்வேறு அரசுகள் இங்கிருந்து வெளியேறிய காஷ்மீரி பண்டிட்களைப் பற்றி அதிகம் அக்கறை காட்டுகின்றன. ஆனால் இங்கு வசிப்பவர்களைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இடம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கப்படும் என மன்மோகன் சிங் அறிவித்தபோது, காஷ்மீரி பண்டிட் சங்கர்ஷ் சமிதி , இடம்பெயராத பண்டிட்களுக்கும் இதன் நன்மை கிடைக்கவேண்டும் என்று கோரியதாக டிக்கு கூறுகிறார்.

பட மூலாதாரம், UBAID MUKHTAR/BBC
"உயர் நீதிமன்றம் சென்று தீர்ப்பு எங்கள் பக்கம் வந்த பிறகும், எதுவும் மாறவில்லை. நாங்கள் 500 குழந்தைகளுக்கு வேலை கேட்டோம், இப்போது அவர்களின் வயதும் தாண்டி வருகிறது"என்றார் அவர்.
நாங்களும் காஷ்மீரை விட்டு வெளியேறுவோம்
சந்தீப் கெளலும் அப்படிப்பட்ட இளைஞர்தான். "பள்ளத்தாக்கில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்கள், மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தப்படுகிறார்கள். இங்குள்ள பண்டிட்களுக்கு அரசு எதுவும் செய்வதில்லை," என்று அவர் சொன்னார்.
30 வயதான சந்தீப், "அரசு வேலைக்காக இன்னும் சில காலமே காத்திருப்பேன். கிடைக்கவில்லையென்றால் நானும் வேலை தேடி காஷ்மீரை விட்டு வெளியேறுவேன்," என்று கூறுகிறார்.
"எனக்கு வயதாகிறது, வேலைக்காக எங்காவது செல்ல வேண்டும், இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இல்லை," என்கிறார் அவர்.
"புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் இடத்தில் உயர்கல்வியில் சலுகைகள் மற்றும் இதர வசதிகள் கிடைக்கின்றன. ஆனால், துப்பாக்கி முனையில், அச்சத்தின் நிழலில் எங்கள் வாழ்க்கை கழிகிறது," என்று சந்தீப் சுட்டிக்காட்டுகிறார்.
சதீஷ் மஹல்தாரும் இதை ஒப்புக்கொள்கிறார். இடம்பெயராதவர்களுக்கு அரசு திட்டங்களில் எதுவும் இல்லை என்று அவர் கூறுகிறார்.
"அவர்களுக்கு அரசு வேலைகளில் பங்கு இல்லை, நிதி உதவியும் இல்லை. அவர்களது நிலைமை தொடர்ந்து மோசமாகிவருகிறது," என்று சதீஷ் குறிப்பிட்டார்.
இடம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட் குடும்பங்களின் கோரிக்கை குறித்துப்பேசிய சதீஷ் , குடும்பங்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வே மிகப்பெரிய கோரிக்கை என்றார்.

பட மூலாதாரம், Getty Images
"இதற்காக தேசிய மனித குடியேற்றக் கொள்கையை உருவாக்கி கொடுத்துள்ளோம். நீங்கள் பேக்கேஜ் கூட தரவேண்டாம். ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்டில் இருந்து வெறும் 2.5 சதவிகிதம் மட்டுமே அளியுங்கள் என்று கூறினோம். திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு காலனி அமைக்கப்பட வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இரண்டாவது பெரிய பிரச்சனை வேலைவாய்ப்பு. ஏனென்றால் மக்கள் திரும்பி வந்தால், அவர்களுக்கும் நல்ல வேலைகள் தேவைப்படும். மூன்றாவதாக, காஷ்மீரி பண்டிட்டுகள் எந்த சூழ்நிலையில் வெளியேற்றப்பட்டார்கள் மற்றும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்," என்று சதீஷ் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து இப்போது வரை விசாரிக்கப்படவில்லை . நீதி கேட்டு வழக்குப் பதிவு செய்து இதற்குப் பின்னால் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார் சதீஷ்.
சிலர் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறுவது முற்றிலும் பொய்யானது என சதீஷ் மஹல்தார் கூறுகிறார். "அங்கே சென்றவர்கள் யார் என்பதையும் எனக்குக் காட்டுங்கள். நான் ஜம்மு காஷ்மீருக்குச் அடிக்கடி செல்கிறேன். என்னைப் பொருத்தவரை இது சரியல்ல" என்று அவர் கூறினார்.
'அரசு தரப்பிலிருந்து அடிக்கடி நிகழ்ந்த தவறுகள் '
1990 களில் இருந்து, அரசு தரப்பில் அடிக்கடி தவறுகள் நிகழ்ந்து வருகின்றன என்று ஜம்மு காஷ்மீர் விவகாரங்களை கூர்ந்து ஆராந்துவரும் மூத்த பத்திரிகையாளர் அனுராதா பசீன் தெரிவித்தார்.
1990களில், காஷ்மீரில் சிறுபான்மையினருக்கு எதிரான சூழல் உருவாக்கப்பட்ட விதம், தவறான விதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, புலம்பெயர்வு ஊக்குவிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
"புலம்பெயர்வுக்குப் பிறகு காஷ்மீரி பண்டிட்களை திரும்ப அழைத்துவர எந்த அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை" என்று பசீன் கூறுகிறார்.
இந்த முப்பது வருடங்களில் இரு தரப்பிலும் நடந்த வெறித்தனமான பேச்சுக்கள் காஷ்மீரி பண்டிட்டுகள் திரும்பி வருவதை மிகவும் கடினமாக்கியது என்று அவர் கூறுகிறார்.
"2008க்குப் பிறகு, மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த திட்டம் ஓரளவு வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. பாஜக அரசும் இந்தக் கொள்கையைத் தொடர்ந்தது. ஆனால் 2017க்குப் பிறகு மக்கள் இந்தக் கொள்கையை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் பிற கொள்கைகள் காரணமாக பள்ளத்தாக்கின் சூழ்நிலை மேலும் மோசமாகத்தொடங்கியது," என்று பசீன் தெரிவித்தார்.
ஒருவிதமான வெறுப்பு பரவி, பாதுகாப்பின்மை உணர்வு நிலவுகிறது. இப்போது காஷ்மீரி பண்டிட்டுகள் திரும்புவது கடினமாகிவிட்டது என்று அனுராதா பசீன் கருதுகிறார்.
"பாதுகாப்புடன், நீதி உணர்வும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்தில் நடந்த காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் முஸ்லிம்களின் கொலைகள் பற்றி இன்று வரை நியாயமான விசாரணை நடக்கவில்லை,"என்று அவர் குறிப்பிட்டார்.
"காஷ்மீரி பண்டிட்களுக்கு ஆதரவாக பேசுவதாக பாஜக கூறுகிறது. ஆனால், பாஜக அரசு வந்த பிறகு, 'இது மிகவும் பழைய விஷயம்' அல்லது 'உண்மைகள் கிடைக்கப்பெறவில்லை," என்று கூறி சில வழக்குகள் மூடப்பட்டதே தவிர விசாரணை நடக்கவில்லை," என்று பசீன் சொன்னார்.
காஷ்மீரி பண்டிட்களை குடியமர்த்த வேண்டுமானால், சமூகங்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று அனுராதா பசீன் கூறுகிறார். அவர்களுக்கிடையே உள்ள வெறுப்பு களையப்பட வேண்டும். "பாஜகவின் அரசியல், சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது. அத்தகைய சூழ்நிலையில் வெறுப்பை அகற்றுவது கடினம்" என்று அவர் கூறுகிறார்.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரி பண்டிட்கள் இப்போது திரும்பிச் செல்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த பிரச்னையில், இது ஒருபோதும் தடையாக இருக்கவில்லை என்று பசீன் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையை குறிப்பிட்ட அவர், இது வளர்ந்து வரும் வெறுப்பின் காரணமாக மட்டுமே நிகழ்ந்தது என்றும், சூழ்நிலை சரிசெய்யப்படாவிட்டால் புலம்பெயர்ந்த காஷ்மீரிகள் திரும்பிச்செல்வது கடினம் என்றும் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












