நீட் விலக்கு மசோதா: ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு, மக்களவையில் ஆளுநரை மாற்றக் கோரிய திமுக - இனி என்ன நடக்கும்?

பட மூலாதாரம், SANSAD TV
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநருக்கு அழுத்தம் தரும் வகையில் சென்னையில் அவரை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு நடந்த அதேவேளை மக்களவையில் திமுக உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு ஆளுநரை மாற்றக்கோரி பேசியிருக்கிறார். இனி இந்த விவகாரத்தில் என்ன நடக்கும்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்களை தன் வசம் வைத்துக் கொண்டு தாமதப்படுத்தும் மாநில ஆளுநரை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் அல்லது திருப்பி அழைக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கிய பிரச்னைகளை எழுப்ப உறுப்பினர்களை அனுமதிக்கும் நேரத்தில் டி.ஆர். பாலு அளித்திருந்த நோட்டீஸின்படி அவரை பேச மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா அழைத்தார்.
அப்போது பேசிய டி.ஆர். பாலு, "இந்திய அரசியலமைப்பு, மாநிலங்களில் ஆளுநராக இருப்பவர்களுக்கு மகத்தான அதிகாரங்களை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவிக்கு வந்தது முதல் ஏழு மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அவை ஆளுநரின் ஒப்புதலுக்கோ குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கவோ கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை அந்த மசோதாக்களை அனுப்பாமல் வைத்திருக்கிறார் ஆளுநர்," என்று கூறினார்.
அப்போது அவையில் இருந்த திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் "அவமானம், அவமானம்" என்று குரல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பேசிய டி.ஆர். பாலு, "இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்ன ஆகும்," என கேட்க, மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா, "நீங்கள் ஒரு மூத்த உறுப்பினர். நீங்கள் எழுப்பும் பிரச்னை மாநில விவகாரம் தொடர்பானது," என்று கூறினார்.
இங்கு நடப்பது காட்டாட்சியா?

பட மூலாதாரம், TNDIPR
இருப்பினும் தொடர்ந்து தமது பேச்சைத் தொடர்ந்த டி.ஆர். பாலு, "இங்கு என்ன காட்டாட்சியா நடக்கிறது? நாங்கள் காட்டாட்சியை நடத்தவில்லை. அரசாங்கப் பணிகள் நடக்க சட்டத்தின் விதிகளின்படி ஆட்சி நடக்க விரும்புகிறோம்," என்றார்.
மேலும் அவர், "தமிழ்நாடு கூட்டுறவு சங்க மசோதா-1983 உள்பட ஏழு மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றாமல் தமது பங்களாவில் ஆறு மாதங்களாக வைத்திருக்கிறார். இது சரியல்ல. பிறகு நாங்கள் எப்படி அரசாங்கத்தை நடத்துவது? அந்த ஆளுநரை மாற்ற வேண்டும்," என்றார்.
அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "ஆளுநர் தொடர்பாக அவையில் ஒரு உறுப்பினர் பேச வேண்டுமானால், அது குறித்த நோட்டீஸை அளித்து முறைப்படி சபாநாயகரின் அனுமதியைப் பெற்று கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் டி.ஆர். பாலு ஆளுநர் பற்றி பேச அனுமதிக்கக் கூடாது," என்று வலியுறுத்தினார்.
இருப்பினும் டி.ஆர். பாலு தமது பேச்சைத் தொடர்ந்தபடி இருந்தார். "அவர்களுக்கு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லை. அதனால்தான் ஆளுநரை வைத்திருக்கிறார்கள். அந்த ஆளுநரை மாற்ற வேண்டும் அல்லது திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டும்," என்று கூறினார் டி.ஆர். பாலு.
மக்களவை விதிகளின்படி முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்னைகளை எழுப்பும் நேரத்தில் ஒரு முறை அவையில் பதிவு செய்த விவகாரத்தை மீண்டும் எழுப்ப உறுப்பினர்களுக்கு அனுமதி கிடையாது. அந்த வகையில் மக்களவையில் ஏற்கெனவே கடந்த அமர்வின்போது நீட் விவகாரத்தை பேசியிருந்த டி.ஆர். பாலு இன்றைய நிகழ்வின்போது நீட் விலக்கு மசோதா என்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் பொதுவாக மசோதா என்றே குறிப்பிட்டுப் பேசினார்.
மாநில ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்

பட மூலாதாரம், RAJ BHAVAN TN
இதற்கிடையே, மக்களவையில் மாநில ஆளுநர் மசோதாவை தன் வசம் வைத்துள்ள விவகாரத்தை டி.ஆர். பாலு எழுப்பிய அதே வேளை, சென்னையில் மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை அவரது மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆளுநருடனான முதல்வரின் சந்திப்பு தொடர்பாக விளக்கப்பட்டிருந்தது. அதன் விவரம்:
"நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம்-2021, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 13.9.2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு ஆளுநரால் அது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் இந்த சட்ட முன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
2021-22ஆம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று தமிழக ஆளுநரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மேலும், இதேபோன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்ட முன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் இறுதியில் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவை இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக மாநில ஆளுநர் உறுதியளித்தார்.
ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












